Thursday, September 15, 2011

ஆசிரியர் நியமனத்தில் அரசு அக்கறை காட்டவில்லை: கருணாநிதி



சென்னை: "ஆசிரியர் நியமனத்தில், அரசு அக்கறை காட்டாமல் உள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை, பள்ளிகளுக்கு முழுமையாக வினியோகிக்கவில்லை. ஒரு பாடப் புத்தகம் கிடைத்த மாணவர்களுக்கு, மற்ற புத்தகங்கள் கிடைக்கவில்லை. மெட்ரிக் பள்ளிகளுக்கு, சமச்சீர் பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்படவே இல்லை. காலாண்டுத் தேர்வுக்கு வினாத் தாள்களை எப்படித் தயார் செய்வது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில், இம்மாதம் 22ம் தேதி காலாண்டுத் தேர்வு துவங்கும் என அறிவித்துள்ளனர். முத்துக்குமரன் குழு பரிந்துரைகளை அமல் செய்வதாக, அரசு அறிவித்துள்ளது. ஆனால், குழுவின் முதல் பரிந்துரையான, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது பற்றி கண்டுகொள்ளவில்லை. மேலும், முத்துக்குமரன் குழு பரிந்துரைக்கு மாறாக, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என கணக்கிட்டு, 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் தேவை என சொல்கின்றனர். பேரவையில் பேசிய முதல்வர், 14 ஆயிரத்து 377 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றார். அவரே, 110வது விதியின் கீழ் அறிக்கை வாசித்த போது, 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்கிறார். ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என கூறும் அரசு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் அவர்கள் நியமிக்கப்படுவார்களா அல்லது தேர்வு, நேர்காணல் மூலம் நியமிக்கப்படுவார்களா என்பதை அறிவிக்கவில்லை. பள்ளிகள் துவங்கி மூன்று மாதங்களான பின், ஆசிரியர் பணி மாறுதலுக்கு கவுன்சிலிங் அறிவித்துள்ளனர். கல்வியாண்டில், முதல் காலாண்டு முடிந்த பின், பணி மாறுதல் பெற்று, குடும்பத்தோடு புதிய இடம் செல்வதற்கான வசதிகளை, ஆசிரியர்களால் ஏற்படுத்திக் கொள்ள முடியுமா? இவ்வாறு, அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார். 

Friday, September 9, 2011

கவுன்சலிங் இல்லாமலே பணியிட மாறுதல் உத்தரவு


ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி
கவுன்சலிங் இல்லாமலே பணியிட மாறுதல் உத்தரவு
வேலூர், செப். 9:
ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கவுன்சலிங் நடத்தாமலேயே 100 பேருக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்கியது, ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியிலோ அல்லது நிர்வாக காரணங்களுக்காகவோ பணியிட மாறுதல் செய்யப்படுவர். இதில் ஏற்படும் தவறுகளை களைய கவுன்சலிங் மூலம் பணியிட மாறுதல் உத்தரவை வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கவுன்சலிங் மூலம் பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்படும். இதன் மூலம் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்று வந்தனர்.
இந்த ஆண்டு நடக்க வேண்டிய கவுன்சலிங் இன்னும் நடத்தப்படவில்லை. இதற்கிடையில் 100 பேருக்கு மேல் வேலூர் மாவட்டத்தில் பணியிட மாறுதலை பெற்றுள்ளனர். மதுரை மாவட்டத்தில் இருந்து ஆசிரியை ஒருவர், வேலூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்துள்ளார். அதேபோல் கத்தியவாடி, லத்தேரி, காட்பாடி, திருவண்ணாமலை, திருப்பாற்கடல், அம்மூர், திருவலம் என பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர். கவுன்சலிங் இல்லாமல் வழங்கப்பட்டுள்ள இந்த பணியிட மாறுதல் உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கூறுகையில், “கவுன்சலிங் இல்லாமல் இந்த பணியிட மாறுதல் உத்தரவு எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என்றே தெரியவில்லை. இதுபற்றி பள்ளிக்கல்வி துறை இயக்குனரகத்தில் கேட்டால் சரியான பதில் கிடைக்கவில்லை. காலிப்பணியிடம், ஏற்கனவே மாறுதல் பெற்று வரும்போது, இங்கு அந்த இடத்தில் ஏற்கனவே பணியாற்றும் ஆசிரியர் நிலை என எதுவுமே கருத்தில் கொள்ளப்படாமல் இந்த உத்தரவு வழங்கப்படுவது முரண்பாடானது” என்றனர்.
பள்ளிக்கல்வி துறை இயக்குனர் வசுந்தராதேவியை தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘�நீங்கள் குறிப்பிட்டது போல யாரும் நேரடியாக டிரான்ஸ்பர் செய்யப்படவில்லை. புகார்களில் சிக்கியவர்கள் மட்டுமே டிரான்ஸ்பர் செய்யப்படுகின்றனர்” என்றார்.

www.trb.tn.nic.in


சென்னை, செப். 8: பட்டதாரி ஆசிரியர்கள் 1,326 பேரின் புதிய தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ((www.trb.tn.nic.in) வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழ், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய 6 பாடங்களுக்கான ஆசிரியர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் இந்தப் பாடங்களில் மொத்தம் 1,513 இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் மொத்தம் 1,326 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 38 பேரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 139 இடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மீதமுள்ள வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய 3 பாடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் புதிய பட்டியல் திங்கள் அல்லது புதன்கிழமைக்குள் வெளியிடப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த 3 பாடங்களுக்கும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பட்டியலை சரிபார்க்கும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. ஓரிரு நாள்களில் இதுதொடர்பான பணிகள் நிறைவடையும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் மொத்தம் 1,200 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நலத் துறை பள்ளிகளுக்கான 276 ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் மதுரை மாநகராட்சியின் 10 ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட வேண்டியுள்ளது.
இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் காலியாக இருந்த 3,665 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு மே, நவம்பர் மாதங்களிலும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
இதையடுத்து, தாற்காலிக தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 28.02.11-ம் தேதி வெளியிடப்பட்டது.
பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, பதிவு மூப்பின் அடிப்படையில் தகுதியுடைய சில பதிவுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகினர். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி தகுதி இருந்தால், பணி நியமனத்துக்குப் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அவர்களுக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
பதிவுமுப்பு இனச் சுழற்சி முறை அடிப்படையில் 6 பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இதரப் பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கான ஆணை தனித்தனியே அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்ட 3,665 ஆசிரியர் பணியிடங்களுக்கான தாற்காலிக தேர்வுப் பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மொத்த இடங்கள் விவரம்

பல்வேறு துறைகளுக்காக மொத்தம் 5,151 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது.

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறை - 3,665
அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் - 1,200
நலத் துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகள் - 276
மதுரை மாநகராட்சி பள்ளிகள் - 10

Thursday, September 8, 2011

ஆசிரியர் பணி நியமனத்தில் குழப்பம்


அரசுப் பள்ளிகளில் பணியாற்றுவதற்கான தகுதியும், திறமையும் மிக்க ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணிகளுக்காக கடந்த 1987ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) உருவாக்கப்பட்டது.

இந்த ஆசிரியர் தேர்வு வாரியம்தான் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள், பொறியியல் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள் ஆகியோரை தேர்வு செய்து வருகிறது.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்தி ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டது. அதை எதிர்த்து ஆசிரியர்கள் கருத்து தெரிவித்ததால் ஆசிரியர் தேர்வு வாரியம் உருவாக்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டது. பின்னர்தான் 1987ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டது.

1987க்கு பிறகு முதல்வராக கருணாநிதி பொறுப்பில் இருந்தார். அப்போது தான் முதன் முதலாக வேலை வாய்ப்பு பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையை கொண்டு வந்தார். இது இடைநிலை ஆசிரியர்களுக்கு அதிகம் பயன்பட்டது. பட்டதாரிகள் தேர்வு எழுதி நேர்காணலில் வெற்றி பெற்று பணிநியமனம் பெற்றனர்.

பின்னர் 1991&95 வரை முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி, தர எண்படி பணி நியமனம் வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களும் அப்படியே தேர்வு செய்யப்பட்டனர். இதனால் பதிவு செய்து காத்திருந்த பட்டதாரிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். வேலை கிடைக்காமல், வயது முதிர்ந்து வேறு வேலையை பார்க்கத் தொடங்கினர்.
புதிய நியமன கொள்கை அவசியம்
ஓய்வு பெறுவதால், புதிய பள்ளிகள் துவங்குவதால், பள்ளிகளின் தரம் உயர்த்துவதால் ஆண்டுதோறும் ஏற்படும் ஆசிரியர் பணி இடங்களில் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டியது அரசின் முதல் கடமையாகும். மாநிலம் எல்லா துறைகளிலும் முன்னிலை பெற வேண்டும் என்றால் அதற்கு அடிப்படையான அரசு பள்ளி, கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் விகிதாச்சாரத்தை உயர்த்தி ஆசிரியர் நியமனம் இருக்க வேண்டும். எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கக் கூடாது. ஆனால், தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றத்தால் ஆசிரியர் பணி நியமனத்தில் குழப்பம் நிலவுகிறது.
பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு அதோடு ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் படித்து முடித்த பின்னர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து நியமனத்துக்காக காத்திருப்போர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் கற்பிப்பதற்கு தேவையான அடிப்படை கல்வி, பயிற்சியை கல்வி நிறுவனங்களில் படித்து முடித்துவிட்டுதான் பணி நியமனத்துக்காக ஆயிரக்கணக்கில் காத்திருக்கின்றனர்.
ஆசிரியர் நியமனத்தில் ஆட்சியாளர்கள் உறுதியான கொள்கை முடிவை எடுக்க வேண்டும். அந்த முடிவு அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையிலும் அதே நேரத்தில் தரம் நிறைந்ததாகவும் நேர்மையானதாகவும் இருக்க வேண்டும். பதிவுமூப்பு செய்தவர்களுக்கும் பாதிப்பு இல்லாமல், புதிதாக படித்து வருபவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் விதத்தில் புதிய நியமனக் கொள்கையை உருவாக்கலாம்.

பின்னர் 1991&95 வரை முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி, தர எண்படி பணி நியமனம் வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களும் அப்படியே தேர்வு செய்யப்பட்டனர். இதனால் பதிவு செய்து காத்திருந்த பட்டதாரிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். வேலை கிடைக்காமல், வயது முதிர்ந்து வேறு வேலையை பார்க்கத் தொடங்கினர்.

அதற்கு பிறகு 1996&2001 வரை முதல்வராக கருணாநிதி இருந்த காலத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்கினார்.

அதற்கு பிறகு 2001&2006 வரை பொறுப்பில் இருந்த ஜெயலலிதா பணி நியமன தடைச் சட்டம் கொண்டு வந்தார். அப்போதும் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டனர். பதிலாக ரூ.3000&4000 தொகுப்பு ஊதியத்தின் கீழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

பின்னர் 2006ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலில் பதிவு மூப்பு அடிபடையில் பட்டதாரிகளுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். அதன்படி 2006&2011 மே மாதம் வரை 55000 ஆசிரியர்கள் பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் பெற்றனர். ஆட்சியின் இறுதியில்கூட 6000 பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டு பணி நியமனம் பெறாமல் உள்ளனர்.

தற்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2682, பட்டதாரி ஆசிரியர் 5790, இடைநிலை ஆசிரியர் 4342, சிறப்பாசிரியர் 1538, வேளாண் பயிற்றுநர் 25 என மொத்தம் 14377 பேர் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார். பின்னர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் விதி 110ன் கீழ் 13300 பட்டதாரி ஆசிரியர்களும், 16549 பகுதி நேர ஆசிரியர்களையும் நியமிக்கப் போவதாக அறிவித்தார்.

மேற்கண்ட ஆசிரியர் நியமனங்கள் பதவி மூப்பு அடிப்படையிலா அல்லது தேர்வு மற்றும் நேர்காணல் மூலமா என்று முதல்வரோ, பள்ளிக் கல்வி அமைச்சரோ இதுவரை அறிவிக்கவில்லை. ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு நடத்தி தெரிவு செய்வதா, அல்லது பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்வதா என்பதில் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளனர். இதற்கிடையே, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் �தேர்வு நடத்தியே பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்� என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர். இதனால் மீண்டும் பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
காத்துக்கிடப்பவர்களுக்கு
சீனியாரிட்டி தான் நல்லது
அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின்(ஐபெட்டோ) தென்னிந்திய செயலாளர் வா.அண்ணாமலை கூறியதாவது:
ஆசிரியர்கள் பணி நியமனத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் வழங்கினால், இதுவரை பதிவு செய்து விட்டு காத்துக்கிடக்கும் பட்டதாரிகள் பயன் பெறுவார்கள். அப்படி அல்லாமல் தேர்வு நடத்தினால் இந்த ஆண்டு படித்து முடித்தவர்கள் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். ஆனால் அவர்களுக்கு போதிய பயிற்சி இருக்காது. எழுத்து தேர்வை பொறுத்தவரை நேர்மையாக நடக்கலாம். ஆனால் அதற்கு பிறகு நேர்க்காணல் நடத்தப்படும். அதில் ஒரு பதவிக்கு 5 பேர் அழைக்கப்படுவார்கள். அப்போது ஆட்சியாளர்களின் பெயரைச் சொல்லி ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளே தங்களுக்கு வேண்டியவர்களை பாஸ் செய்ய வைத்துவிடுவார்கள். அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளின் தலையில் பழியைப் போட்டு ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஆசிரியர் பணி நியமனம் வழங்கலாம். எப்படி இருந்தாலும் நேர்காணல் முறையில் தவறு நடக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் ரத்தினக்குமார் கூறியதாவது:
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடக்கும் தேர்வே சரியான வழி என்றும், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்வது சரியான வழியல்ல என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது எந்த அளவுகோல் மூலம் அறிந்த முடிவு? 20 ஆண்டுக்கும் மேலாக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்து கிடப்போர் பலர். அவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியல்லாதவர்கள் என்பது சரியா?
பதிவு மூப்பு அடிப்படையில் வேலை கிடைக்கும் என்று காத்திருப்போரில், தேவைக்கு அதிகமான கல்வி தகுதியை பெற்றுள்ளவர்களும் இருக்கின்றனர் என்பது அதிகாரிகளுக்கு தெரியாதா?
கடந்த ஆட்சியில் 22800 பட்டதாரி ஆசிரியர்களும் 3200 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். அதற்கு முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட போட்டித் தேர்வு வாயிலாக 34000 பேர் பணி அமர்த்தப்பட்டனர். பிறகு பொதுத் தேர்வில் வருடா வருடம் மாணவர்களின் தேர்ச்சி வீதம் 2 முதல் 3 சதவீதம குறைந்தது. 2002 முதல் 2006ம் ஆண்டு வரை இந்த நிலைதான்.
2007 முதல் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். அதற்கு பிறகு தேர்ச்சி வீதம் 3 முதல் 4 சதவீதம் அதிகரித்து வருகிறது. இந்த உண்மையை அதிகாரிகள் சொல்வதில்லை. பதிவு மூப்பு மூலம் பணி நியமனம் பெறுபவர்களில் 90 சதவீதம் பேர் தனியார் பள்ளிகளில் பணியாற்றியவர்கள். 10 சதவீதம் பேர் அவ்வாறு பயிற்சி பெறாதவர்கள். எனவே பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்தால்தான் தேர்ச்சி வீதம் அதிகரிக்கும்.
காத்துக்கிடக்கும் நிலை யாரால் ஏற்பட்டது?
இதுவரை காத்திருந்து வயது முதிர்ந்த காலத்தில் தேர்வு நடத்துவதை பட்டதாரிகள் ஏற்கவில்லை. ஆனால் புதிய பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டால் தரமான கல்வி வழங்கலாம் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. அப்படி என்றால் முன்பெல்லாம் தேர்வு நடத்தி ஆசிரியர்கள் தேர்வு செய்தபோது தரமான கல்வி இல்லையா?
இப்போது பட்டப் படிப்பு படித்துவிட்டு வரும் புதியவர்களுக்கு வல்லினம், மெல்லினமே தெரியவில்லை. புதியவர்களுக்கே பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. பதிவு மூப்பு பெற்றவர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் வேலை செய்து வருவதால் அவர்களுக்கு டீச்சீங் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளது. இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், கடந்த ஆண்டில் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பாடம் நடத்தியதின் காரணமாக கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை 46 பேர் பிடித்துள்ளனர். இது எந்த ஆண்டும் நிகழாத சாதனை. புதியதாக படிப்பு முடித்தவர்கள் எப்படி தரமான கல்வியை வழங்குவார்கள்? என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கல்வியாளர்கள்
என்ன
சொல்கின்றனர்?

ஆசிரியர் தேர்வு வாரியம் ஆள் பற்றாக்குறையால்

சென்னை, செப். 6: தமிழக அரசு இந்த ஆண்டு புதிதாக 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக பேரவையில் அறிவித்துள்ளது. இவர்களைத் தேர்ந்தெடுத்து நியமிக்கும் பொறுப்பில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் ஆள் பற்றாக்குறையால் கடும் சவாலை எதிர்நோக்கி உள்ளது.

 ஆறாயிரம் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யவே ஏறத்தாழ ஓராண்டு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 56 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமிக்க எத்தனை ஆண்டுகள் தாமதம் ஏற்படுமோ என்று பட்டதாரி ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
 ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் தவிர, இவ்வளவு ஆசிரியர்களை ஓராண்டுக்குள் நியமிக்க சாத்தியமே இல்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 .
  தமிழக அரசின் அறிவிப்பால் மாணவர்களும், சமுதாயமும் உடனடியாகப் பயனடைய வேண்டும் என்றால் ஆசிரியர் தேர்வு வாரிய ஊழியர்களின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க வேண்டும். இதை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.


பட்டதாரி ஆசிரியர் நியமனம்: புதிய பட்டியல் இன்று வெளியீடு

 பட்டதாரி ஆசிரியர் நியமன புதிய பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் புதன்கிழமை முதல் படிப்படியாக வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இதுதொடர்பாக, அவர்கள் கூறியது:
 முதலில் 6 பாடங்களுக்கான ஆசிரியர்களின் பட்டியலும், அதன்பிறகு 3 பாடங்களுக்கான ஆசிரியர்கள் பட்டியலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ட்ற்ற்ல்://ற்ழ்க்ஷ. ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
 வரும் வெள்ளிக்கிழமைக் குள் முழுமையானப் பட்டியல் வெளியிடப்பட்டு விடும். ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மிகவும் வெளிப்படையாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பதிவுமூப்பு, தகுதிகள் உள்ளிட்ட விவரங்களை மற்றவர்களும் பார்க்கும் வகையில் இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
 பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, ஆசிரியர் பணி நியமன ஆணை அனைவருக்கும் உடனடியாக அனுப்பப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 இதன்மூலம் ஏறத்தாழ 6 ஆயிரம் பேரின் 8 மாத காத்திருப்பு முடிவுக்கு வர உள்ளது.
 பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான பணிகள் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்தும் நிறைவடைந்து கடந்த பிப்ரவரியில் பணி நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டது.
 ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பணி நியமன ஆணை அனுப்பப்படவில்லை. இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மேலும் சிலர் பணி நியமனத்துக்குப் பரிசீலிக்கப்பட்டு புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
 வேலைவாய்ப்பு அலுவலகம் குழப்பம்: இந்தப் பணி நியமனத்துக்காக வேலைவாய்ப்பு ஆணையர் அலுவலகம் ஏறத்தாழ 5 முறை பட்டியல்கள் அனுப்பியது. பணி நியமன இறுதிப்பட்டியலைத் தயாரிப்பதில் கால தாமதத்துக்கு இதுவும் ஒரு காரணம்.
 கடந்த 10 நாள்களுக்கு முன்புகூட புதிதாக ஒரு பட்டியலை வேலைவாய்ப்பு அலுவலகம் அனுப்பியுள்ளது. இறுதியாகப் பட்டியல் அனுப்பாமல் இதுபோன்று அவ்வப்போது பட்டியல் அனுப்புவதால், வேலைவாய்ப்பு அலுவலகம் ஏதேனும் குளறுபடி செய்கிறதோ என்ற கவலையும் பட்டதாரி ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
 இந்தக் குழப்பத்தை நீக்கும் வகையில் ஒரேயொரு பட்டியலை வேலைவாய்ப்பு அலுவலகம் அனுப்ப வேண்டும் என்று அனைவரும் கோருகின்றனர்.