Monday, April 16, 2012

டி.இ.டி: சமச்சீர் பாடப்புத்தகத்தை படித்தால் போதும்

மதுரை : மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தினமலர் நாளிதழ் சார்பில், ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., படித்தவர்களுக்கு டி.இ.டி., வழிகாட்டி கருத்தரங்கு நேற்று நடந்தது. ஏராளமானோர் இதில் பங்கேற்று பயன்பெற்றனர்.

தேர்வை எதிர்கொள்வது குறித்து நிபுணர்கள் பேசியதாவது...
*பொது அறிவு, கணிதம், சுற்றுச்சூழலியல் குறித்து, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் பெ.வெங்கடாச்சலம்: டி.டி.எட்., மற்றும் பி.எட்., தகுதித் தேர்விற்கு ஐந்து பாடப் பிரிவுகளில் தலா 30 வீதம், 150 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதற்கு 150 மதிப்பெண்கள். டி.டி.எட்., தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றால், "சீனியாரிட்டி' முறையில், அடுத்த ஏழாண்டுகளுக்குள் பணி நியமனம் பெற முடியும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையான, தற்போதுள்ள சமச்சீர் பாடபுத்தகங்களை படித்தால் போதும். "கொள் குறி வகை' யில் பதில் அளிப்பதால் ஒன்றரை மணி நேரத்திற்குள், 150 வினாக்களுக்கும் பதில் அளிக்கலாம். தவறான பதில்களுக்கு, மதிப்பெண் குறைக்கப்படுவதில்லை. 
 பி.எட்., தகுதித் தேர்விற்கு, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையான சமச்சீர் பாடப்புத்தங்களை படிக்க வேண்டும். குழந்தை மேம்பாடு, தமிழ், ஆங்கிலப் பாடங்கள் பி.ஏ., பி.எஸ்சி., படிப்புக்கு ஒரே மாதிரியாக இருக்கும். பி.எஸ்சி.,க்கு கணிதம், அறிவியல், பி.ஏ.,வுக்கு வரலாறு, புவியியல் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு பணிவாய்ப்பு என்பதால், நன்றாக படிக்க வேண்டும்.

செய்யுள் பகுதிக்கு முக்கியத்துவம்:

*செந்தமிழ்க் கல்லூரி உதவி பேராசிரியர் செ. ராஜ்மோகன்: பாடப் புத்தகத்தில் செய்யுள் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். பாடம் தவிர, தமிழ் இலக்கிய வரலாறு, நல்ல தமிழில் பேச, நன்னூல் எழுத்து, சொல்லதிகாரம் புத்தகங்களை படித்தால் எளிதாக மதிப்பெண் பெறலாம்.

*நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக அதிகாரி எம்.எஸ்.வெங்கடாஜலபதி: ஆங்கில இலக்கணத்தின் பொருள் புரிந்து படிக்க வேண்டும். மழலைப் பருவத்தில் கற்பிப்பது தான் உண்மையான கல்வி. அதுவே அடிப்படை. "ஆர்ட்டிக்கிள், டென்ஸ்', உச்சரிப்பு, வார்த்தை அமைப்புகளைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடங்களின் அர்த்தம், எதிர்ப்பதம் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்.

*வேம்பரளி பெனி யெல் கிராமிய கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர் எஸ். பிரகாஷ்: குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் பாடத்தில், தற்போதுள்ள பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் 30 மதிப்பெண்கள் பெற முடியும். ஆறு முதல் 11 வயதுள்ள மாணவர்களின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்ளும் உளவியல், கற்பித்தல் பாடங்கள் தான் கேள்விகளாக இருக்கும்.

மாணவர் எதிர்பார்ப்பு என்ன? 
 
*மதுரை சமூக அறிவியல் கல்லூரி பேராசிரியர் எம்.கண்ணன்: ஆசிரியர்கள் அறிவாளியாக, புத்திசாலியாக, எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்தவராக இருக்க வேண்டுமென, மாணவர்கள் எதிர்பார்ப்பதில்லை. பாகுபாடின்றி அன்பு செலுத்துபவராக, புரிந்து கொள்பவராக, வாழ்வியல் மதிப்புகளை உணர்த்தக் கூடியவராக இருக்க வேண்டுமென விரும்புகின்றனர். இணையதளத்தின் மூலம் உலக அறிவை, மாணவர்கள் எளிதாக கற்றுக் கொள்கின்றனர். ஆசிரியர்கள் உணர்வுப் பூர்வமான மதிப்புகளை கற்றுத் தரவேண்டும். 
மாணவர்களுக்கு கற்றுத் தரும் ஒழுக்கங்களை கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும். கேள்வி கேட்டு பதில் தெரியாவிட்டாலும், கேள்வியை புரிந்து கொள்ள முயற்சிப்பவராக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். அத்தகைய ஆசிரியர்களாக நாம் மாற வேண்டும்.

No comments:

Post a Comment