Saturday, December 15, 2012

பஸ்களில் 1,180 ஆசிரியர்கள், குடும்பத்தினர் பயணம்

திருநெல்வேலி:நெல்லை மாவட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரிய பணி நாடுனர்கள் 24 சிறப்பு பஸ்களில் நெல்லையில் இருந்து சென்னைக்கு நேற்று புறப்பட்டு சென்றனர்.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆன்லைன் கவுன்சிலிங் கடந்த 9ம் தேதி ஆரம்பமானது. அன்று பட்டதாரி ஆசிரியர் பணி நாடுனர்களுக்கு உள் மாவட்ட அளவிலும், 10ம் தேதி வெளி மாவட்ட அளவிலும் ஆன்லைன் கவுன்சிலிங் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் இடைநிலை ஆசிரியர் பணி நாடுனர்களுக்கு உள் மாவட்ட அளவிலும், தொடர்ந்து விடிய, விடிய வெளி மாவட்ட அளவிலும் கவுன்சிலிங் நடந்தது.இப்பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரிய பணி நாடுனர்கள் நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இருந்து நேற்று மதியம் புறப்பட்டனர். இதற்காக நேற்று காலையில் இருந்தே குடும்பத்துடன் ஆசிரிய பணி நாடுனர்கள் நெல்லையில் குவிந்த வண்ணம் இருந்தனர்.பின்னர் நேற்று மதியம் 1.30 மணிக்கு 21 பஸ்கள் புறப்பட்டு சென்றன. நேற்று மாலைக்குள் மேலும் 3 பஸ்களும் புறப்பட்டு சென்றன. இதில் 750 ஆசிரிய பணி நாடுனர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட மொத்தம் 1,180 பேர் நெல்லையில் இருந்து புறப்பட்டு சென்றனர். ஒவ்வொரு பஸ்சிலும் 50 பேர் வீதம் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஏ.இ.ஓ, என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளரும் சென்றனர்.
இதில் ஒரு சில பஸ்கள் தாமதமாக வந்ததால் ஆசிரிய பணி நாடுனர்கள் புறப்பட்டு செல்வதிலும் காலதாமதம் ஏற்பட்டது. ஆசிரிய பணி நாடுனர்களுடன் குடும்ப உறவினர்கள் தவிர ஒரு சிலர் பஸ்சில் ஏறியதால் "திடீர்' குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் அவர்களை வெளியேற்றினர்.
சென்னையில் இன்று (13ம் தேதி) நடக்கும் "மெகா' விழாவில் ஆசிரிய பணி நாடுனர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கி பேசுகிறார்.தொடர்ந்து இன்று மாலையில் சென்னையில் இருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு ஆசிரிய பணி நாடுனர்கள் புறப்பட்டு செல்கின்றனர்.