Thursday, November 7, 2013

ஆசிரியர் வேலை : 12 ஆயிரம் பேருக்கு ஏமாற்றம்

15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளி ஆசிரியர் வேலை உறுதி: 12 ஆயிரம் பேருக்கு ஏமாற்றம்

டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேரில், 15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை உறுதி; 12 ஆயிரம் பேர், ஏமாற்றம் அடையும் நிலை எழுந்துள்ளது.

டி.இ.டி., முதல் தாள் தேர்வில், 12,596 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 14,496 பேரும், தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும், அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் பணியிடங்கள் வரை, காலியாக இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடக்க கல்வித்துறையில், 880 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 1,500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், காலியாக இருக்கின்றன. பள்ளி கல்வித்துறையில், தற்போதைய நிலவரப்படி, 10,500 இடங்கள் காலியாக உள்ளன. மே மாதம், பணி ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்தால், மேலும், சில ஆயிரம் இடங்கள் அதிகரிக்கலாம்.
மொத்தத்தில், 15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை கிடைக்க, அதிக வாய்ப்புகள் உள்ளன.

தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கும், இம்மாத இறுதியிலோ அல்லது, டிசம்பர், முதல் வாரத்திலோ, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அதன்பின், இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு,கல்வித்துறையிடம், டி.ஆர்.பி., வழங்கும். டிசம்பர் இறுதிக்குள், புதிய ஆசிரியர், பணி நியமனம் செய்யப்படலாம். இடைநிலை ஆசிரியர் பணியை பொறுத்தவரை, தேர்ச்சி பெற்றிருந்தாலும், மாநில அளவில், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தான், பணி நியமனம் நடக்கும். பட்டதாரி ஆசிரியர் மட்டும், தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படுவர். எனவே, 12 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை
Advertisement
கிடைக்க வாய்ப்பு இல்லை.

இவர்கள், தனியார் பள்ளிகளில், ஆசிரியர் வேலையில் சேரலாம். அரசு பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும், கணிசமான எண்ணிக்கையில், ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுவருகின்றனர். ஆனால், மாணவர் சேர்க்கை சதவீதம், சரிந்துகொண்டே வருகிறது. இதனால், ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம், 1:25 என்ற நிலை உள்ளது. டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும் நியமனம் செய்யும்போது, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம், மேலும் சரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் ஆண்டுகளில், ஆசிரியர் நியமனம், பெரிய அளவில் இருக்காது என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Saturday, August 31, 2013

கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் டி.ஆர்.பி.,யின் அறிவிப்பு

கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. பழைய காலி பணியிடங்கள், 652 உடன், கூடுதல் பணியிடங்கள் சேர்த்து, அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம், அதிகளவில் காலியாக உள்ளது. காலியாக உள்ள, 652 பணியிடங்களை, இரு மாதங்களுக்குள் நிரப்புவதற்கு, தேவையான நடவடிக்கைகளை, அரசு எடுக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பட்டதாரிகளை, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், தேர்வு செய்ய, பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பழைய காலி பணியிடங்களுடன், கூடுதலாக தேவைப்படும் இடங்களுக்கும் சேர்த்து, கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த டி.ஆர்.பி.,யின் அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. ஒரு பணியிடத்திற்கு, ஐந்து பேர் வீதம், பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டு, தகுதியானவர், தேர்வு செய்யப்படுவர்.

Sunday, July 28, 2013

மேல்நிலைப்பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணிநீக்கம்

கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்
தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பல வருடங்களாக கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக ஏராளமானவர்கள் பணியாற்றினார்கள். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசிடம் முறையிட்டனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இந்த போராட்டம் பல வருடங்களாக நடந்தது. பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இந்த நிலையில், அவர்களுக்கு தமிழக அரசு உத்தரவுப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது. அந்த தேர்வில் 50 சதவீத மார்க் எடுத்தவர்கள் முதலில் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர். பின்னர் தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் குறைக்கப்பட்டது. இதனால் 35 சதவீதம் மார்க் வரை எடுத்தவர்களும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக பணி அமர்த்தப்பட்டனர். இவர்கள் பி.எட். படிக்காதவர்கள்.இந்த நியமனத்தை எதிர்த்து பி.எட். படித்தவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், பி.எட். படிக்காமல் பணிபுரியும் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களின் பணி நியமனம் செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
பணி நீக்கம்
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இது பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Wednesday, May 8, 2013

பணி நிரந்தரம் செய்யக்கோரி சிறப்பு ஆசிரியர்கள் பேரணி



திருச்சி: "பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி' பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் திருச்சியில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர். 
 
தமிழ்நாடு பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு பேரணி நேற்று திருச்சியில் நடந்தது.பேரணிக்கு மாநில பொதுச் செயலாளர் சேத்துராஜா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கடலூர் பகுதி தலைவர் செந்தில்குமார் பங்கேற்று பேசினார். 
 
கால முறை ஊதியம் வழங்க வேண்டும். அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை, முழு நேர பணியாளராக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.கவுன்சிலிங் மூலம் பணி இடமாற்றம் அளிக்க வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாற்றம் செய்யாமல், மாவட்டத்திற்குள்ளேயே இடமாற்றம் அளிக்க வேண்டும். கோடை விடுமுறை காலத்திற்கு ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.  
 
மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த பேரணி, திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் துவங்கி, கலெக்டர் அலுவலகம் சென்றடைந்தது.
அங்கு கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டரிம் அளித்தனர். பேரணியில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். சங்க தலைவர் குமரேசன் நன்றி கூறினார்.

Saturday, March 23, 2013

பகுதி நேர கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

தமிழக அரசின் ஆணைப்படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பகுதிநேர கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி பாடம் கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி இது போன்ற பணியிடங்களுக்கு பதிவு மூப்பு, போட்டி தேர்வு அடிப்படையில் நிரப்புவது வழக்கம். இதில் கடந்த ஒரு ஆண்டுகளாக பள்ளியில் பகுதி நேர கணினி பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசை கேட்டு கொள்கிறோம் என்று ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகுதி நேர கணினி ஆசிரியர்கள் அரசு துறை தேர்வுகளை எழுதலாமா?

பகுதி நேர கணினி ஆசிரியர்கள் அரசு துறை தேர்வுகளை எழுதலாம். அரசு பணியே கிடைக்காதவர்கள் கூட தம் வீட்டு முகவரியை கொண்டு துறை தேர்வுகளை எழுதலாம். 


               பகுதி நேர ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் அல்லது தொடக்க கல்வி துறை எனில் உதவி தொடக்க கல்வி அலுவலர் அனுமதியுடன் துறை தேர்வுகளை எழுதலாம். பின்னர் முழு நேர பணியாளராக ஆனதும் பணிப்பதிவேடு துவங்கிய பின்னர் அதில் தங்கள் துறைதேர்வு முடிவுகளை பதிவு செய்து கொள்ளலாம். 


                   குறிப்பு:   தாங்கள் பணிபுரியும் பள்ளி முகவரியை கொண்டே தேர்வு எழுத வேண்டும். தங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டத்தின்  தேர்வு மையத்தில் தான் தேர்வு எழுத வேண்டும். மற்ற மாவட்டத்தில் தேர்வு எழுத வேண்டாம். இது எவ்விதத்திலும் பணி நியமன வாய்ப்பிற்கு பயன்படாது.