Wednesday, May 8, 2013

பணி நிரந்தரம் செய்யக்கோரி சிறப்பு ஆசிரியர்கள் பேரணி



திருச்சி: "பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி' பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் திருச்சியில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர். 
 
தமிழ்நாடு பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு பேரணி நேற்று திருச்சியில் நடந்தது.பேரணிக்கு மாநில பொதுச் செயலாளர் சேத்துராஜா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கடலூர் பகுதி தலைவர் செந்தில்குமார் பங்கேற்று பேசினார். 
 
கால முறை ஊதியம் வழங்க வேண்டும். அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை, முழு நேர பணியாளராக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.கவுன்சிலிங் மூலம் பணி இடமாற்றம் அளிக்க வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாற்றம் செய்யாமல், மாவட்டத்திற்குள்ளேயே இடமாற்றம் அளிக்க வேண்டும். கோடை விடுமுறை காலத்திற்கு ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.  
 
மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த பேரணி, திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் துவங்கி, கலெக்டர் அலுவலகம் சென்றடைந்தது.
அங்கு கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டரிம் அளித்தனர். பேரணியில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். சங்க தலைவர் குமரேசன் நன்றி கூறினார்.