Tuesday, October 30, 2012

சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தபின், தேர்வு முடிவு வெளியாகும்

சென்னை : சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 கடந்த, 14ல் நடந்த, டி.இ.டி., மறுதேர்வில், 4.75 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். விடைத்தாள் மதிப்பீடு முடிந்து விட்டது. தேர்வு தொடர்பாக, தேர்வர்கள் கொடுத்த, 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது, ஆய்வு நடத்தி, உரிய மதிப்பெண் இழப்பீடுகளையும், டி.ஆர்.பி., வழங்கியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு தயாரிக்கும் பணிகள், சில நாட்களாக நடந்து வந்தன. 27ம் தேதியுடன், அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன. இதனால், 28 அல்லது 29ம் தேதியில், முடிவை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. ஆனால், எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என, தெரியவில்லை.

இதற்கிடையே, சட்டசபையின், குளிர்கால கூட்டத் தொடர், நவ., 2 வரை நடக்கிறது. இந்நேரத்தில், தேர்வு முடிவை வெளியிடுவது சரியாக இருக்காது என, டி.ஆர்.பி., கருதியது. முந்தைய தேர்வை விட, தேர்ச்சி சதவீதம் அதிகரித்தோ அல்லது குறைந்தோ, எப்படி இருந்தாலும், அது, சட்டசபையில் விமர்சனத்தை ஏற்படுத்தும் எனவும், டி.ஆர்.பி., கருதுகிறது. இதனால், சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தபின், தேர்வு முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

1:30 விகிதாச்சாரப்படிஆசிரியர்கள் நியமனம்: அரசு திட்டம்

சிவகங்கை:அரசு பள்ளிகளில்,1:30 விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில், அரசு நடு, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஆசிரியர்கள் இல்லை. மாநில அளவில், பள்ளிகளில் பல ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் இருக்க வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில், 60 முதல் 90 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் உள்ளனர். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகின்றது.

குறிப்பாக, 10 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுதேர்வுகளில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கீழ்நிலைக்கு சென்று விடுகிறது. இவற்றை தவிர்த்து, மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கும் பொருட்டு, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, தமிழக அரசு 1: 30 விகிதாச்சாரப்படி மாணவர்களை நியமிக்க, திட்டமிட்டுள்ளது. இதற்காக, அரசு பள்ளிகளில், தற்போது பணியாற்றும் முதுகலை பட்டதாரி, இளங்கலை பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை; 1:30 விகிதாச்சாரப்படி பள்ளிகளில் தேவைப்படும் ஆசிரியர்கள் விபரம்; ஒவ்வொரு பள்ளிகளிலும்,காலியாக உள்ள ஆசிரியர்கள் குறித்த விபரங்களை அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,""தமிழகத்தில், 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, பிரிவு வாரியாக தேவைப்படும் ஆசிரியர்கள் விபரங்களை, அரசு சேகரிக்கிறது. 2013 ஜூன்- முதல்,இந்த விகிதப்படி ஆசிரியர்கள் பணியாற்றுவர்,''என்றார்.

Thursday, October 25, 2012

ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் குளறுபடிகள்



ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் குளறுபடிகள்
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல்
ஆங்கிலத்தில் கேள்வித்தாளைத் தயாரித்து தமிழாக்கம் செய்யும்போது ஏகப்பட்ட குளறுபடிகளை செய்து ஆசிரியர்களை குழப்பிவிட்டது ஆசிரியர் தேர்வுவாரியம்.உதாரணமாக குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் பகுதியில்
1.பின்வருவனவற்றுள் எது புறத்தேற்று முறையின் கீழ் வராது? என்ற வினாவில் Sentence completion test என்பதை வாக்கியம் நிறைவு செய்தல் சோதனை என்று மொழிபெயர்க்காமல் வெறுமனே வாக்கியம் நிறைவு செய்தல் என்று மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.
10.ஒரு தனிநபரின் மிகப்பொருத்தப்பாட்டு நடத்தையை வெளிக்காட்டும் குணநலன் என்ற வினாவுக்கு நன்கு நிலைபடுத்தப்பட்ட தன்னுணர்வு மனம் என்று விடை கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் தாழ்நிலை மனம்,தன்னுணர்வு மனம் மற்றும் மேனிலை மனம் எல்லாமும் ஒருங்கே பலமுடன் இருக்கும் நிலை என்பதே மிகச்சரியான விடையாகும்.ஆதாரம்:கற்றல்,மனித வளர்ச்சி தொடர்பான உளவியல் புத்தகம். இராம்பதிப்பகம்,சென்னை-93      பேராசிரியர் கி.நாகராஜன் பக்கம்:354
13.வீட்டுப்பாடத்தை வெறுக்கும் குழந்தையினை நேர்மறையாக திருத்த முயல்வது என்ற வினாவுக்கு இருத்தல்-கட்டுப்பாட்டு முறை என்று விடை கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் கருவிசார் ஆக்க நிலையிறுத்த முறை என்பதே சரியான விடையாகும். ஆதாரம்:கற்றல்,மனித வளர்ச்சி தொடர்பான உளவியல் புத்தகம். இராம்பதிப்பகம்,சென்னை-93      பேராசிரியர் கி.நாகராஜன் பக்கம்:201 இல் நாம் விரும்பும் துலங்கலை வலுவூட்டி,நடத்தையாக ஆக்குதல் என்பதே ஸ்கின்னரின் செயல்படு ஆக்கநிலையிறுத்தத்தின் அடிப்படை சாரமாகும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
16.மனவெழுச்சி காதார்ஸிஸ் என்பது என்ற வினாவில் Emotional catharsis means என்பதை மனக்குமுறல்களை ஆற்றுப்படுத்துதல் என்று மொழிபெயர்க்காமல் அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்து ஆசிரியர்களை குழப்பியுள்ளனர்.
23.மனவெழுச்சி நுண்ணறிவுடன் தொடர்புள்ள முக்கிய பெயர் என்ற வினாவுக்கு ஜாக்மேயர்,பீட்டர் ஸலோவே,எஸ்.ஹெயின்,லீப்ரோவேதனி போன்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ள எந்த பெயரையும் கொடுக்காமல் டேனியல் கோல்மென் என்றுபுத்தகத்தில் இல்லாத ஒரு தொடர்புடைய பெயரை கொடுத்திருப்பது எந்த விதத்தில் சரி?
25.கற்றல் வளைகோடு இதனை வெளிக்காட்டுகிறது என்ற வினாவுக்கு   Graph representing the learner’s progression with time  என்ற பதிலை கற்போரின் வளர்நிலையைக் குறிக்கிறது என்று மிகக்குழப்பமாக தமிழ் மொழி பெயர்த்துள்ளனர்.கற்றலின் வளர்ச்சியை ஒரு வரைபடமாக காலத்தைக் கொண்டு விளக்குவது கற்றல் வளைகோடு என்று தமிழ்வழியில் படித்த மாணவர்கள் இந்த கேள்விக்கு எப்படி விடை அளிக்க முடியும்?
30.அறிவுசார் வளர்ச்சிப் படிநிலைகளில் குறியீட்டு சமன்பாடுகளை புரிந்துகொள்ளும் நிலை என்ற கேள்விக்கு
A)Sensori-motor stage                  -புலனியக்க நிலை
B)Concrete-operational stage  -பருப்பொருள் நிலை 
C)Pre-operational stage          -செயலுக்கு முற்பட்ட நிலை
D)Formal-operational stage  -கருத்தியல் நிலை                                 என்று புத்தகத்திலுள்ளவாறு மொழிபெயர்த்திருந்தால் எளிமையாக விடை அளித்திருக்க முடியும்.
தமிழ்
ஒன்று முதல் பத்தாம்வகுப்பு புத்தகங்களை படித்தால் போதும் என்று கூறிய ஆசிரியர் தேர்வுவாரியம் தமிழுக்கான வினாக்களை எந்த புத்தகங்களில் இருந்துதான் கேட்டார்களோ என்று குழம்பும் அளவுக்கு பத்தாம் வகுப்பு புத்தகங்களை தாண்டி மேல்நிலை வகுப்புகளில் அதிக அளவு வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.
58.கோட்டுகிர் குருளை என்றழைக்கப்படுவது என்ற வினாவிற்கு மேல்நிலை முதலாம் ஆண்டு தமிழ் புத்தகத்தில் பக்கம் 14 இல் ஊன்பொதியவிழாக் கோட்டுகிர்க் குருளை அதாவது நகங்கள் தசைப்பகுதியிலிருந்து வெளிவராத புலியின் குருளை என்று பொருள் உள்ளது.ஆனால் எட்டாம் வகுப்பு தமிழ் 63ஆம் பக்கத்தில் இளமைப்பெயர்களில் புலிக்கு புலிப்பறழ், சிங்கத்துக்கு சிங்கக்குருளை என்று உள்ளது.எனவே சரியான விடை சிங்கம் மற்றும் புலி இரண்டும் ஆகும்.
ஆங்கிலம்
ஆங்கிலத்தில்74வது வினாவான Identify the correct characteristic என்ற கேள்விக்கு Validity என்று கொடுக்கப்பட்டுள்ளது. Reliability , Validity இரண்டுமே சரியான விடைகள்.
சமூக அறிவியல்
111.சுழற்சி இயக்கங்களிலேயே மிக எளிமையானது என்ற வினாவுக்கு மேல்நிலை முதலாம் ஆண்டு புவியியல் புத்தகத்தில் பக்க எண்:80இல் சுழற்சி இயக்கங்களிலேயே மிக எளிமையானது பாஸ்பரஸ் சுழற்சி என்று  கொடுக்கப்பட்டுள்ளது.
ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பக்கம்-139 இல்
நீர் சுழற்சி என்பது நீர் நிலத்திலிருந்து வளிமண்டலத்தை அடைந்து மீண்டும் நிலத்தை அடையும் செயலாகும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
112.வளிமண்டலத்தில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை 5 என்று உள்ளது.ஆனால் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் பக்கம் 105இல் வளிமண்டலத்தினை அதன் பண்புகளின் அடிப்படையில் நான்கு அடுக்குகளாக பிரிக்கப்படுகிறது.1.அடியடுக்கு(Troposphere) 2.படையடுக்கு(Stratosphere) 3.அயனியடுக்கு(Ionosphere) 4.வெளியடுக்கு(Exosphere) மேலும்,5.சேணிடை அடுக்கு(Tropopause) என்ற மெல்லிய அடுக்கானது அடியடுக்கு மற்றும் படையடுக்கு இவைகளுக்கிடையே அமைந்துள்ளது. படையடுக்கினை தொடர்ந்து மீண்டும் ஒரு மெல்லிய அடுக்கு காணப்படுகிறது.இது 6.மீவளி இடையடுக்கு(Stratopause)என அழைக்கப்படுகிறது. ஆகமொத்தம் 6அடுக்குகள் என்பதே மிகச்சரியான விடையாகும்.ஆனால் மேல்நிலை முதலாம் ஆண்டு பக்க எண்:64 இல் 5 என்று உள்ளது.
128.தொழிலகங்களை இயக்கும் உயிர்நாடி எனப்படுவது என்ற வினாவுக்கு எரிசக்தி என விடை கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் பொருளியலில் மனிதனால் உருவாக்கப்படாத அனைத்து பொருட்களும் நிலம் என்றழைக்கப்படுகிறது.நிலம் தானாக எதையும் உற்பத்தி செய்ய முடியாது.மனிதன் நிலத்தில் உழைத்து பண்டங்களையும்,பணிகளையும் உற்பத்தி செய்கிறான். “Labour is the active and initial force and labour is therefore the employer of capital” ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பக்கம்:181
தொழிற்சாலைக்கு மூலப்பொருட்கள்,பணியாளர்கள்,எரிபொருள்,மூலதனம், போக்குவரத்து,சந்தை அனைத்துமே உயிர்நாடிதான்.அப்படியிருக்க எரிசக்தி மட்டுமே தொழிலகங்களை இயக்கும் உயிர்நாடி என்று எப்படிக்கூற முடியும்? எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பக்கம்:130
ஆனால் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பக்க எண்:75 இல் எரிசக்தி என்று உள்ளது
113.ஒரு சூழலில் உள்ள நீரோட்டங்கள் என்ற வினாவுக்கு நான்கு என்று விடை கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் பக்க எண்:141இல் பேராழிநீரோட்டங்கள் இரண்டு வகைப்படும்.அவைகள் வெப்ப மற்றும் குளிர் நீரோட்டங்கள் ஆகும் என்று உள்ளது.
மேல்நிலை முதலாம் ஆண்டு புவியியல் புத்தகத்தில் பக்க எண்:50இல்
மூன்று பெருங்கடல்களுக்கும் கண்டங்கள் எல்லைகளாக அமைந்திருக்கின்றன.இவை நீரோட்டங்களின் பாதைகளில் தடைகளாக அமைவது மட்டுமன்றி அந்நீரோட்டங்கள் ஏறக்குறைய வட்ட வடிவில் சுழலவும் காரணமாக அமைகின்றன.இத்தகைய சுழல்தோற்றங்களை பெருங்கடல் சுழல்கள்(OCEAN GYRES) என அழைக்கிறோம்.மேலும் ஒரு சுழலில் நான்கு நீரோட்டங்கள் அமைந்துள்ளன.என்று உள்ளது.
பெருங்கடல் சுழலில் உள்ள நீரோட்டங்கள் என்று கேட்பதற்கு பதிலாக ஒரு சூழலில் உள்ள நீரோட்டங்கள் என்று தவறாக வினா கேட்கப்பட்டுள்ளது.


தாள் 2 இல் சமுக அறிவியல் வினாவில் ANSWER KEY C 

வினா என் 98. தாமரை எதை உருவகப்படுதிகிறது? இவ்வினாவிற்கு சரியான விடை ஒற்றுமை (VII std TAM MEDIUM CIVICS LESSON 1 text book page no 151) ஆனால் trb விடைகளில் நிறம் என தவறாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 

வினா எண் 146 சுழற்சி இயக்கங்களில் எளிமையானது? சரியான விடை "நீர் சுழற்சி" ஆனால் trb விடைகளில் 'பாஸ்பரஸ் சுழற்சி " என தவறாக வெளியிடப்பட்டுள்ளது.

வினா எண் 127. பணம் எதையெல்லாம் செய்ய வல்லதோ அதுவே பணம் வரையறுத்தவர்? சரியான விடை "வாக்கர்" (VIII STD TEXT BOOK ECONOMICS LESSON 1) ஆனால் trb விடைகளில் " இர்விங் பிஷேர்" என தவறாக வெளியிடப்பட்டுள்ளது.

வினா எண் 20 ஒரு தனி நபரின் மிக பொருத்தபாட்டு நடத்தையை வெளிக்காட்டும் குணநலன்?சரியான விடை " தாழ்நிலை மனம் தன உணர்வு மனம் மற்றும் மேனிலை மனம் எல்லாமும் ஒருங்கே வளமுடன் இருக்கும் நிலை" ஆனால் trb விடைகளில் " நன்கு நிலை படுத்தப்பட்ட தன உணர்வு மனம் " என தவறாக வெளியிடப்பட்டுள்ளது.

Tuesday, October 16, 2012

ஜூனில் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூனில் நடத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தாலும், ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு என்று 4 மாதங்களில் 2 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
எனவே, இந்த ஆண்டு இறுதியிலோ, அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ மற்றொரு தேர்வை நடத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இப்போதுள்ள அரசாணையின்படி, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடியும். ஆண்டுக்கு இருமுறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பாக இதுவரை அரசாணை பெறப்படவில்லை. விரைவில் இந்த அரசாணையைப் பெறுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் 2,448 பேருக்கு ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதில் 202 பேர் உரிய தகுதிகளுடன் இல்லை என்று தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் அனைவரது மதிப்பெண்ணையும் மீண்டும் சரிபார்க்க வேண்டியுள்ளதால், ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏற்கெனவே தேர்ச்சி பெற்ற 2,246 பேருக்கும் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி, சென்னை
First Published : 15 October 2012 02:09 AM IST

Thursday, October 11, 2012

பள்ளிகள் பற்றிய புள்ளிவிபரங்கள் சேகரிப்பு

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள, உள் கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, மொத்தம், 55 ஆயிரத்து 667 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 5.49 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 1.35 கோடி மாணவ, மாணவியர், படித்து வருகின்றனர். அனைத்துப் பள்ளிகள், அவற்றின் உள் கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை திரட்டி, அவை, பள்ளிக் கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த விவரங்களின் அடிப்படையில், தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், புதிய திட்டங்களை தீட்டவும், பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
 இந்த கணக்கெடுப்பு பணியை, ஆண்டுதோறும் நடத்த, திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து வகை பள்ளிகளுக்கும், 32 பக்கங்கள் அடங்கிய படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்ககத்தின் சார்பிலும், இதர வகுப்புகளுக்கு, மத்திய இடைநிலை கல்வித்திட்டம் சார்பிலும், விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப படிவத்தில், தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்தால், அதற்கு, சம்பந்தபட்ட தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் எனவும், அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும், இனசுழற்சி என்ற அடிப்படையில், பல்வேறு இன மாணவர்கள் பங்கேற்கும் நடைமுறை விவரம், ஒப்பந்த ஆசிரியர் எண்ணிக்கை, அவர்களைப் பற்றிய விவரங்கள், பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகள் உட்பட, பல்வேறு தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பு பணியை, வரும் நவம்பர் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், அரசு பள்ளிகளில் உள்ள உண்மையான நிலவரம் தெரிந்து விடும்.

Wednesday, October 10, 2012

டி.இ.டி. தேர்வு: மாறுகிறது ரேங்க் பட்டியல்

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு என்றழைக்கப்படும் டி.இ.டி. தேர்வில், தேர்ச்சி பெற்ற, 2,448 பேரின், ரேங்க் பட்டியல், புதிய விதிமுறைகளின் படி, மாற்றி அமைக்கப்படுகிறது.
ஏற்கனவே நடந்த, டி.இ.டி., தேர்வில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். "இவர்களது பணி நியமனம், பணி நியமனத்திற்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்&' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி, தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, புதிய, ரேங்க் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இதனால், தேர்வு பெற்றவரின், ரேங்க் இடம் மாறலாம்; ஆனால், வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.புதிய தேர்வுப் பட்டியல், ஓரிரு நாளில் வெளியிடப்படும்.
புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும், இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மட்டும், உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரும் வரை, மாநில பதிவுமூப்பு அடிப்படையிலேயே (டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்) நடக்கும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tuesday, October 9, 2012

ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
 ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு அல்லது மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முறையாக "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.
  ஆசிரியர் தகுதி மறுதேர்வு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 100 மதிப்பெண் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.

 பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
 மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு இவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் (உச்ச நீதிமன்ற வழக்கு முடியும்வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்).

 பட்டதாரி ஆசிரியர்களுக்கு...ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், இளநிலைப் பட்டம், பி.எட். பட்டங்களில் பெற்ற மதிப்பெண்ணுக்கு தலா 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
   
 
வெயிட்டேஜ் எப்படி?
 இடைநிலை ஆசிரியர்களுக்கான
 "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):

 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (15):
 90 சதவீதத்துக்கு மேல் ..................- 15 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை.............-12
 70 முதல் 80 சதவீதம் வரை.............- 9
 60 முதல் 70 சதவீதம் வரை.............- 6
 50 முதல் 60 சதவீதம் வரை.............- 3

 ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (25)
 70 சதவீதத்துக்கு மேல்..................- 25 மதிப்பெண்
 50 முதல் 70 சதவீதம் வரை............- 20

 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
 90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 54
 70 முதல் 80 சதவீதம் வரை............- 48
 60 முதல் 70 சதவீதம் வரை............- 42
 
 
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான
 "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
 
 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (10)
 90 சதவீதத்துக்கு மேல்..................- 10 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 8
 70 முதல் 80 சதவீதம் வரை............- 6
 60 முதல் 70 சதவீதம் வரை............- 4
 50 முதல் 60 சதவீதம் வரை............- 2
 
இளநிலைப் பட்டப் படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............- 12
 50 சதவீதத்துக்கும் கீழே................- 10

 பி.எட். படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............- 12

 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
 90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 54
 70 முதல் 80 சதவீதம் வரை............- 48
 60 முதல் 70 சதவீதம் வரை............- 4

Monday, October 8, 2012

ஆசிரியர் தகுதி தேர்வு: ஹால் டிக்கெட் வினியோகம்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, புதிதாக விண்ணப்பம் செய்த தேர்வர்களுக்கு, இன்று முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. டி.ஆர்.பி., இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பு, மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. ஜூலை, 12ம் தேதி நடந்த தேர்வில், 6 .76 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருந்ததால், தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், அக்டோபர், 3ம் தேதி, மறுபடியும் தேர்வு எழுதலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இந்நிலையில், இத்தேர்வில், ஜூலைக்கு பின், பி.எட்., முடித்தவர்களையும் அனுமதிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், "தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், புதிதாக பி.எட்., படித்தவர்களும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த தகுதித் தேர்வு, அக்டோபர், 14ம் தேதிக்கு மாற்றப்படுகிறது&' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தேர்வு எழுதுபவர்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.
புதிதாக தேர்வெழுத, 17 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களுக்கான ஹால் டிக்கெட், இன்று முதல் வழங்கப்படுகிறது. ஹால் டிக்கெட்டை, டி.ஆர்.பி., இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட், எக்காரணம் கொண்டும், வீட்டு முகவரிக்கு அனுப்பப்படாது.
தேர்வர்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து மட்டுமே, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பழைய விண்ணப்பதாரர்களுக்கு, ஹால் டிக்கெட் வீட்டுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

Friday, October 5, 2012

"கீ-ஆன்சர்' குளறுபடி: நிபுணர் குழுவே பொறுப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கேள்விகள், அதற்கான, "கீ-ஆன்சர்' ஆகியவற்றை, சம்பந்தபட்ட துறைகளைச் சேர்ந்த, பேராசிரியர் அடங்கிய நிபுணர் குழு தயாரிக்கிறது. இவற்றில் ஏதேனும் குளறுபடி நடந்தால், சம்பந்தபட்ட நிபுணர் குழுவே பொறுப்பாகும் வகையில், விதிமுறையில் திருத்தம் கொண்டு வர, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை, மே, 27ல், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதில், 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவிற்குப்பின், பணியிடத்திற்கு ஒருவர் வீதம், சான்றிதழ் சரிபார்ப்பு முகாமை, ஆகஸ்ட்டில், டி.ஆர்.பி., நடத்தியது. முன்னதாக, கேள்விகளுக்குரிய விடைகளை (கீ-ஆன்சர்) டி.ஆர்.பி., வெளியிட்டதும், பல விடைகள் தவறானவை என, விண்ணப்பதாரர் தெரிவித்தனர். இதுதொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில், "50க்கும் அதிகமாக தவறான விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே, முடிவு வெளியிடப்பட்டு உள்ளதால், ஒட்டுமொத்த தேர்வுப் பட்டியலும் ரத்து செய்யப்படுகிறது' என, ஐகோர்ட் உத்தரவிட்டது. "மூன்று வாரங்களுக்குள், அனைத்து விடைத்தாள்களையும் மறு மதிப்பீடு செய்து, புதிய தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும்' எனவும், கோர்ட் தெரிவித்தது. இதையடுத்து, அனைத்து தேர்வர்களின் விடைத்தாள்களையும், மறு மதிப்பீடு செய்வதற்கான பணிகளில், டி.ஆர்.பி., இறங்கி உள்ளது.

இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: "இடஒதுக்கீடு முறையை சரியாக கடைபிடிக்கவில்லை' என, ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி தான், தேர்வுப் பட்டியலை தயாரித்தோம். உள் ஒதுக்கீடு தொடர்பாக, சில நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதை நிவர்த்தி செய்ய, அரசாணையில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

 கேள்விகளுக்குரிய விடைகளை, டி.ஆர்.பி., தயாரிப்பதில்லை. ஒவ்வொரு பாட வாரியாக, சம்பந்தபட்ட துறைகளைச் சேர்ந்த, அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் தான் தயாரிக்கின்றனர். ஒரு நிபுணர் குழு தயாரித்த, கீ-ஆன்சரை, மற்றொரு நிபுணர் குழு, தவறு என்கிறது. அப்படி இருக்கும் போது, எங்களை எப்படி குறை கூற முடியும்? எனவே, தவறாக கேள்வி கேட்டாலோ, கீ-ஆன்சர்களை தயாரித்தாலோ ஏற்படும் குளறுபடிகளுக்கும், பிரச்னைகளுக்கும், சம்பந்தபட்ட நிபுணர் குழுவே பொறுப்பேற்க வேண்டும் என, விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர உள்ளோம்.

"ஸ்கேன்' செய்யப்பட்ட விடைத்தாள்கள், அப்படியே இருக்கின்றன. எனவே, விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்வதில், எவ்வித சிக்கலும் ஏற்படாது. ஐகோர்ட் நிர்ணயித்த கால கெடுவிற்குள், விடைத்தாளை மறுமதிப்பீடு செய்து, புதிய பட்டியலை வெளியிடுவோம். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்வு பெற்றவர்களுக்கு சிக்கல்: சான்றிதழ் சரிபார்ப்புக்குப்பின் இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை. எனினும், பணிக்கு, ஒருவர் என்ற வீதம், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டதால், இதில் பங்கேற்ற அனைவரும், தங்களுக்கு வேலை கிடைத்து விட்டதாக, மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றனர். இந்நிலையில், மறுமதிப்பீடு செய்வதன் மூலம், ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களின் நிலையில் மாற்றம் ஏற்படலாம்.

நேர்முகத் தேர்வு + டி.இ.டி., = ...?

சென்னை: ஆசிரியர் நியமன விதிமுறைகள், இறுதி செய்யப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. "டி.இ.டி., தேர்வு என்பது, ஒரு தகுதித் தேர்வே; அதில் தேர்ச்சி பெறுபவரை, பணி நியமனம் செய்வதற்கு, உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, தமிழக
அரசுக்கு, சென்னை, ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. அதனடிப்படையில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான வழிமுறைகளை வகுக்க, பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இதில், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சபிதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் சவுத்ரி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். குழுவின் முதல் கூட்டம், சமீபத்தில் நடந்தது. அதில், குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, அதன் மதிப்பெண்களையும், டி.இ.டி., தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் ஆகியவற்றையும் கூட்டி, அதனடிப்படையில் தேர்வுப் பட்டியலை வெளியிடலாம் என, ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான அரசின் முடிவு, ஓரிரு நாளில் வெளியாகலாம் என, தெரிகிறது.

ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 2,448 ஆசிரியர்கள், வரும், 14ம் தேதி நடக்க உள்ள, டி.இ.டி., மறுதேர்வில் தேர்ச்சி பெறுவோர் அனைவரும், புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி தேர்வு செய்யப்படுவர். டி.இ.டி., தேர்வு வழியாக, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர், 25 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

Wednesday, October 3, 2012

மென்பொருள் வல்லுனர்கள் வேலை தான் என்ன?

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" – நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

 "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.




"சரி"

"இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?"

– அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?" "அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"


"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது. "இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" – அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?" "இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டீமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."
"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

 "அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு "Maintenance and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும். "ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா"
                     
                                         ***************************** 
உங்களுக்கு???

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ரத்து

சென்னை: இடஒதுக்கீட்டை தவறுதலாக பின்பற்றியதோடு, 50 வினாக்களுக்கான பதில்கள், முற்றிலும் தவறுதலாக இருந்ததால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தேர்வை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ள, தேர்வு பெற்றவர் பட்டியலும், இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது. புதிய மதிப்பெண் பட்டியலோடு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை, 3 வாரத்திற்குள் வெளியிட வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், 2,395 முதுகலை ஆசிரியர் பட்டதாரி பணியிடங்களை நிரப்ப, பிப்ரவரி, 28ம் தேதி, அறிவிப்பு வெளியிட்டது. இத்தேர்வில், முதன்மை பாடம், கல்வி முறை மற்றும் பொது அறிவு ஆகியவற்றில் இருந்து, 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
இதில், கொள்குறி வினாக்களுக்கு, கொடுக்கப்பட்ட பதில், முற்றிலும் தவறாக இடம் பெற்றது. தேர்வாணையம் வெளியிட்ட, தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில், தேர்விலேயே முதல் மதிப்பெண் பெற்றவர்களை, பொதுப்பிரிவில் சேர்க்காமல், அவர்களின் சாதி அடிப்படையிலான பிரிவில் சேர்த்துள்ளனர். இதனால், இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாதது தெரியவந்தது.
இதையடுத்து, தேர்வு எழுதியவர்களில் சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி நாகமுத்து அளித்த தீர்ப்பு:
பொதுப் பிரிவுக்கான தேர்வு முடிவுகளை, வாரியம் முறையாக பின்பற்றவில்லை. கேள்வித்தாளில் இடம் பெற்ற, வினாக்களுக்கான பதில், முற்றிலும் தவறானதாக இருந்ததால், மாணவர்கள் மதிப்பெண் பெறுவதும் தடைபட்டு உள்ளது.
எனவே, தேர்வாணையத்தின் தேர்வு பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. மூன்று வாரத்திற்குள், புதிய மதிப்பெண் பட்டியலோடு, தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த விவரங்களை, தேர்வாணையம் வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
என்ன சொல்கிறது டி.ஆர்.பி: தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான, "கீ ஆன்சர்&' தவறு என்று, உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் குறித்து, மறுமதிப்பீடு செய்து, பிரச்னைக்குரிய விடைகளை இறுதி செய்து, இணையதளத்தில் வெளியிடப்படும்.
ஏற்கனவே ஒரு பணியிடத்திற்கு ஒருவர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும். இதற்கு அழைக்கப்படுபவரின் பட்டியலும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.