இந்த ஆண்டுக்குள் 52 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நியமனம் -29-08-2011
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில், 7,000, 8,000 ஆசிரியர்கள் நியமனம் என்று தான் வழக்கமாக அறிவிப்பு வரும். அதிலும், அதிகபட்சமாக 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேல் இருக்காது. காலிப் பணியிடங்கள் அதிகமாக இருந்தாலும், அதில் ஓரளவு இடங்கள் தான் நிரப்பப்படும்.மூன்று மாதங்களில் அதுவும் ஒரே வாரத்தில், 52,413 ஆசிரியர்களை நியமனம் செய்ய அறிவிப்பு செய்து, முதல்வர் ஜெயலலிதா புதிய சாதனை படைத்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மூலம், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை மாதங்களில், அதுவும் கடந்த ஒரே வாரத்தில், 52 ஆயிரத்து 413 ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர். வெறும் பொதுவான பாடத் திட்டத்தை அமல்படுத்துவது மட்டுமே சமச்சீரான கல்வியாக இருக்காது என்பதும், அனைத்து நிலைகளிலும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி, கல்வித் தரத்தை மேம்படுத்துவது முக்கியம் என்பதும், முதல்வர் ஜெயலலிதாவின் அழுத்தமான கருத்து.
அதன்படி, அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டசபையில், கடந்த 22ம் தேதி பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. விவாதங்களுக்கு பதிலளித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சண்முகம் பேசும்போது, 14 ஆயிரத்து 377 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படுவர் என்று அறிவித்தார்.
இந்நிலையில், சட்டசபையில் விதி 110ன் கீழ், பள்ளிக் கல்வித் துறையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், ஏராளமான அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். மாநிலம் முழுவதும் 775 பள்ளிகள் தரம் உயர்வு, 33 ஆயிரத்து 36 ஆசிரியர்கள் நியமனம், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 5,000 என மொத்தம், 38 ஆயிரத்து 36 பேர் பணி நியமனம் செய்யப்படுவர் என, முதல்வர் அறிவித்தார்.
கடந்த வாரத்தில் அமைச்சர் வெளியிட்ட புதிய நியமனம் மற்றும் முதல்வர் வெளியிட்ட புதிய நியமனங்களும் சேர்த்து மொத்தம் 52 ஆயிரத்து 413 பேர், பள்ளிக் கல்வித் துறையில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
THANKS:DINAMALAR
No comments:
Post a Comment