Thursday, February 28, 2013

மடிக் கணினிகள் பீரோவில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.

ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கணினி இயல் புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. அடுத்த கல்வி ஆண்டில் தான் இப்புத்தகங்கள் கிடைக்கும் என்பதால், தற்போது மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பாடப் பிரிவிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தொகுப்பு ஊதிய ஆசிரியர்கள், பாடம் நடத்தாமல் அலுவலக பணிகளை செய்து வருகின்றனர்.


திருவள்ளூர் மாவட்டத்தில், 1,368 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 183 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும், 112 மேனிலைப் பள்ளிகள் என, மொத்தம், 1,663 பள்ளிகள் உள்ளன. இதில், 2,30,453 மாணவர்களும், 3,15,124 மாணவியரும், என, 5,45,577 பேர் படிக்கின்றனர். இøர்களில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை 66,091 மாணவ, மாணவியர் கணினி இயல் படிக்கின்றனர்.
தற்போது பள்ளிகளில் அடிப்படை கருவியாக கணினி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அக்கருவிகளை கையாளும் விதத்தில், மேலும் அன்றாட வாழ்வில் மாணவர்கள் சந்திக்கும் சவால்களை எதிர் கொள்ளவும், புதிய அனுபவ அறிவை கணினி வாயிலாக செயல்படுத்தி பார்க்கவும் கணினி கல்வி மாணவர்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்து பள்ளிக் கல்வித் துறை அதற்கான
முயற்சியில் ஈடுபட்டது.

கணினி பயிற்சி
கடந்த, 2010ம் ஆண்டு தமிழ்நாட்டு பாடநூல் கழகம் சார்பில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணினி இயல் புத்தகம் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு கணினி கல்வி கற்பிப்பதற்காக நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கு திருவள்ளூரில் கணினி சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
பத்து நாட்கள் நடந்த இந்த பயிற்சியில் "விண்டோஸ், எக்ஸ்பி, இன்டர்நெட்' உள்ளிட்டவைகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அனைத்து நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு, மடிக் கணினி, பிரிண்டர்கள் வழங்கப்பட்டன. கணினி அறிவியலில் பட்டம் பெறாத ஆசிரியர்களுக்கு, 10 நாள் பயிற்சி போதுமானதாக இல்லை.
ஆசிரியர்கள் நியமனம் இதன் காரணமாக, பல பள்ளிகளில், மடிக் கணினிகள் தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் பீரோவில் பூட்டி
வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், ஒவியம், தையல், உடற்பயிற்சி மற்றும் கணினி பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.    இதில் கணினி ஆசிரியர்களுக்கு பாடத் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, 2010ம் ஆண்டுக்கு பின், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான கணினி இயல் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகம் இல்லாததால் கணினி ஆசிரியர்கள் பள்ளிகளில் அலுவலக பணிகளை செய்து வருகின்றனர்.

விரக்தி 
கணினி ஆசிரியர்கள் மற்றும் கணினி இருந்தும் கணினியை இயக்கவும், அது குறித்து முறையாக அறிந்து கொள்ளவும் முடியாததால் மாணவர்கள் விரக்தியில் உள்ளனர்.

இது குறித்து, பகுதி நேர கணினி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "கணினி இயல் பாடப் புத்தகம் இல்லாததால் எங்களால் பாடத் திட்டம் தயாரிக்க முடியவில்லை. புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கினால், நாங்கள் சொல்லித் தரும் பாடங்களை மாணவர்கள் வீட்டில் படிப்பதால், அவர்களுக்கு கணினி குறித்து முழு தகவலும் பெறுவதற்கு வசதியாக இருக்கும்,' என்றனர். மேலும், "எங்களுக்கு பாடத்திட்டம் ஒதுக்கப்படாததால், எங்களை அலுவலக பணியில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுத்துகின்றனர். சில பள்ளிகளில், சம்பள பில் உள்பட அனைத்து வேலைகளும் கட்டாயம் செய்ய வேண்டும் என, நிர்பந்திக்கின்றனர்' என்றனர்.

 இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாகராஜ முருகன்
கூறியதாவது:
பள்ளிக் கல்வி துறை எங்களுக்கு அறிவுறுத்தியபடி, தற்போது நியமிக்கப்பட்டு உள்ள தொகுப்பு ஊதிய கணினி ஆசிரியர்களை, மாணவர்களுக்கு, கணினி என்றால் என்ன, அதை எப்படி இயக்க வேண்டும், அவற்றின் சிறப்புகள் குறித்து விளக்க வேண்டும் என, உத்தரவிட்டு உள்ளேன். பள்ளிகளில் பழைய கணினி புத்தகங்கள் இருந்தால் அதை பயன்படுத்தி கொள்ளவும் என, அறிவுறுத்தப்பட் டுள்ளது. புதிதாக, கணினி புத்தகம் தயாரிக்கும் பணி நடந்து வருவதால், அடுத்த கல்வி ஆண்டுக்கு கணினி புத்தகம் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

- நமது நிருபர் குழு -

1 comment:

  1. sir,how to select the teachers for computer science
    seniority or tet? please send the reply sir
    and what about part time computer teachers?

    ReplyDelete