Friday, August 31, 2012

தீர்ப்பு வந்த பின் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம்

கடந்த 25ம் தேதி வெளியான, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை நடத்தி, இறுதிப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளதுசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவும், டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது.

  வழக்கு: இடைநிலை ஆசிரியர்கள் முன்பு, மாவட்ட அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்டனர். தென் மாவட்டத்தைச் சேர்ந்த பதிவுதாரர்கள், "மாவட்ட பதிவு மூப்பு எனில், எங்களுக்கு பாதிப்பு ஏற்படும். பட்டதாரி, முதுகலை ஆசிரியரைப் போல், இடைநிலை ஆசிரியரையும், மாநில பதிவு மூப்பில் நியமிக்க வேண்டும்' என, ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

 இதைத் தொடர்ந்து, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கிலும், மதுரை கிளையின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது
அரசு விருப்பம்: தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், வழக்கு விசாரணையின் போது, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியரை பணி நியமனம் செய்ய, தமிழக அரசு விருப்பம் தெரிவித்தது; அதன்படி பணி நியமனம் செய்து வருவதையும் தெரிவித்தது. இந்த வழக்கில், செப்., 15க்குள் தீர்ப்பு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தீர்ப்பின் அடிப்படையில், இடைநிலை ஆசிரியரை நியமனம் செய்ய, டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது.

T.E.T Candidates Called for Certificate Verification


Paper 2 : 713 Candidates

Paper 1 : 1735 Candidates

Certificate Verification done in :
Madurai, Salem, Trichy and Chennai


Certificate Verification Date:

Paper 2 C.V 07.09.2012 , Timing: 10.00 a.m/2.30 P.M

Paper 1 C.V 08.09.2012 , Timing: 10.00 a.m/2.30 P.M

தகுதித்தேர்வு மீது சந்தேகம் கிளப்பும் பட்டதாரிகள்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதி தேர்வு எழுதியவர்களில் சிலர் மட்டும் முதல் தாளில் மிகக்குறைந்த மதிப்பெண் எடுத்தும் இரண்டாம் தாளில் 100ஐ தாண்டி மதிப்பெண் பெற்றுள்ளனர். இதையடுத்து தகுதி தேர்வு மீதும் பட்டதாரிகளுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை காட்டி பட்டதாரிகள் குமுறுகின்றனர்.
தமிழகத்தில் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் 6 லட்சத்து 76 ஆயிரம் பேர் எழுதினர். அந்ததேர்வில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 2,88,588 பேர் முதல்தாளும்( 1 முதல் 5ம் வகுப்புக்கு உரியது), பட்டம் முடித்து பி.எட் படித்தவர்கள் 3,88,175 பேர் இரண்டாம் தாளும் (6 முதல் 8ம் வகுப்புக்கு உரியது) எழுதினர். இவற்றில் சிலர் இரண்டு தாள்களும் எழுதினர்.
தேர்வு முடிவுகள் வெளியானதில் முதல் தாளில் 1735 பேரும், 2ம் தாளில் 713 பேரும் தேர்ச்சி பெற்றதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. மேலும், தாள் 1 மற்றும் தாள்&2 ஆகிய இரண்டிலும் 83 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இரண்டு தேர்வுகளிலும் தேர்வு எழுதியவர்களின் முடிவுகளை பார்க்கும் போது, தகுதி தேர்விலும் ஏதோ நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்&1ல் வெறும் 5 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவி தாள்&2ல், 113 பெற்றுள்ளார். அதேபோல தாள்&1ல் வெறும் 16 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் ஒருவர் தாள்&2ல் 114 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தகுதி தேர்வை பொறுத்தவரை தாள் ஒன்று என்பது தொடக்க பள்ளி பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறுவது. தாள் இரண்டு என்பது பட்டதாரிகளுக்கு உரியது. அதில் 6ம் வகுப்பு முதல் 10ம வகுப்புவரை உள்ள பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறும். முதல்தாளை விட இரண்டாம் தாள் தான் கடினமானது.
காலையில் முதல்தாள் தேர்வு எழுதிய ஒருவர், அந்த தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண்ணும், அதே நாளில் மதியம் நடந்த இரண்டாம் தாள் தேர்வில் மாநில அளவில் முதல் 15 இடங்களுக்குள் மதிப்பெண் பெற்று வந்துள்ளார். இது போல் பலர் அதிக மதிப்பெண் எடுத்துள்ளனர். இது 6 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புரியாத புதிராக உள்ளது. இதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்வு எழுதி ஏமாற்றம் அடைந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Sunday, August 26, 2012

மீண்டும் நடத்தப்படுகிறது ஆசிரியர் தகுதித் தேர்வு


ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் நேற்று (25-08-12) வெளியிடப்பட்டது. 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் எழுதிய தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெறாத 6.74 லட்சம் பேருக்கு அக்டோபர் 3ம் தேதி மீண்டும்  தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று, 2009ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.  மாநிலம் முழுவதும் 1,027 தேர்வு மையங்களில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் தேர்வு எழுதினர். தேர்வில் பங்கேற்றவர்கள் 150 மதிப்பெண்களில் 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே ‘பாஸ்’ என கூறப்பட்டிருந்தது



.தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை எதிர்த்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆகஸ்ட் 10ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.  ஆனால், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதற்கு கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால், தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, திருவண்ணாமலை மாவட்டம் மேல்மலையூரை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதையறிந்த ஆசிரியர் தேர்வு வாரியம், அவசர அவசரமாக தகுதி தேர்வு முடிவுகளை இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.  


மொத்தம் தேர்வு எழுதிய 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேரில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேர் ‘பெயில்‘ ஆகி உள்ளனர். இது தேர்வு எழுதிய ஆசிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தேர்ச்சி பெறாத 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 ஆசிரியர்களுக்கும் அக்டோபர் 3ம் தேதி கட்டணம் எதுவும் இல்லாமல் மீண்டும் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி அறிவித்தார்.
 
 ஆசிரியர் தகுதி தேர்வின்அடிப்படையில் 18,000 பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.2,448 பேருக்கு உடனே வேலை: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தேர்வில் 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாளில் வினாத்தாளின் வரிசை எண்ணை குறிப்பிடாதவர்களுக்கு 5 மார்க், விடைத்தாளில் பாடப்பிரிவை குறிப்பிடாதவர்களுக்கு 3 மார்க், விருப்ப மொழியை எழுதாதவர்களுக்கு 2 மார்க் குறைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதி விட்டு ஒரிஜினல் விடைத்தாளை (ஓஎம்ஆர் சீட்) கொடுக்காதவர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 


விடைத்தாளில் தேர்வு எண்ணை எழுதாமல் போலி எண் எழுதியவர்கள் பேப்பரும் திருத்தப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 2 பேரின் விடைத்தாளில் உள்ள கையெழுத்தும், விண்ணப்பத்தில் உள்ள கையெழுத்தும் மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் 5 ஆண்டு பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இடைநிலை ஆசிரியருக்காக நடத்தப்பட்ட தகுதி தேர்வை (தாள்,1) மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 588 பேர் எழுதினர். இதில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
இது 0.61 சதவீத தேர்ச்சி ஆகும். பட்டதாரி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட தேர்வை (தாள்,2) மொத்தம் 3 லட்சத்து 88 ஆயிரத்து 175 பேர் எழுதினர். இதில் 713 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 0.19 தேர்ச்சி ஆகும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் என இரண்டு தேர்வையும் (தாள்,1, தாள்,2) எழுதிய 83 பேர் தேர்வாகி உள்ளனர்.


 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டையும் சேர்த்து மொத்தம் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 1,680 பேர் பெண்கள், 768 பேர் ஆண்கள். ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேரில் 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேர் ‘பெயில்‘ ஆகியுள்ளனர். 17 உடல் ஊனமுற்றோர்களும், 2 கண் பார்வை இல்லாதவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் வேலை வழங்கப்படும். 
 
தேர்ச்சி பெறாத 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேருக்கும் அக்டோபர் 3ம் தேதி தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இந்த தேர்வுக்கு அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம். இவர்களுக்கு விரைவில் ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்படும். அக்டோபர் மாதம் இறுதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும். மறுதேர்வுக்கு கூடுதலாக ஒன்றரை மணி நேரம் வழங்கப்படும்
 
இவ்வாறு சுர்ஜித் கே.சவுத்ரி கூறினார்.



35 சதவீதம் பெற்றால் பாஸ்?


ஆசிரியர் தகுதி தேர்வில் அதிகம் பேர் 60 மதிப்பெண்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘பள்ளி மாணவர்களுக்கு உள்ளது போன்று எங்களுக்கும் 35 சதவீதம் எடுத்தால் ‘பாஸ்‘ என்று அறிவிக்க வேண்டும்’ என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.


முதல் 3 இடங்களை பெண்களே பிடித்தனர்


இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் பொள்ளாச்சியை சேர்ந்த திவ்யா 150க்கு 122 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், திண்டுக்கல் சவீதா, திருச்சி ஷோபனா ஆகியோர் தலா 116 மதிப்பெண் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் உத்தமபாளையத்தை சேர்ந்த அருள்வாணி 125 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், ஏ.பிருந்தா, சித்ரா இருவரும் 124 மதிப்பெண் பெற்று 2வது, 3வது இடத்தை பெற்றுள்ளனர். பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில்கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் நாகப்பட்டினத்தை சேர்ந்த சித்ரா 150க்கு 142 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஷர்மிளா 131 மதிப்பெண் பெற்று 2வது இடத்தையும், உத்தமபாளையத்தை சேர்ந்த ஆர்.பிருந்தாதேவி 117 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் 3 இடங்களையும் 9 பெண்களே பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அக்டோபர் 3ம் தேதி பள்ளிக்கு விடுமுறை


ஆசிரியர் தகுதி தேர்வில் பெயிலான 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேருக்கும் அக்டோபர் 3ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அக்டோபர் 3ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.இ.டி: தேர்ச்சி பெற்றவர்களில் 68% பேர் பெண்கள்

சென்னை: டி.இ.டி. தேர்வு மிகக் கடினமாக இருந்ததாக, தேர்வர் பலர் புலம்பிய நிலையிலும், தேர்ச்சி பெற்ற 2,448 பேரில், 1,680 பெண்கள் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர். இதில், முதல் மற்றும் இரண்டாம் தேர்வில், முதல் மூன்று இடங்களை, ஒன்பது பேர் பிடித்தனர். இவர்களில், எட்டு பேர் பெண்கள்.

டி.இ.டி. தேர்வில், கேள்வித்தாள் வரிசை எண்ணை, விடைத்தாளில் குறிப்பிடாதவருக்கு, ஐந்து மதிப்பெண்; முக்கிய பாடத்தை குறிப்பிடாதவருக்கு, மூன்று; மொழிப் பாடத்தை குறிப்பிடாதவருக்கு இரண்டு மதிப்பெண் என, தவறு செய்தவர்களை ஆறு வகையாகப் பிரித்து, அவர்களுக்கு, "மைனஸ்&' மதிப்பெண்களை, டி.ஆர்.பி., வழங்கியுள்ளது.
இதில் அதிகபட்சமாக, முதல் தாள் தேர்வில், 621 பேர்; இரண்டாம் தாளில், 731 பேர், கேள்வித்தாள் வரிசை எண்ணை எழுதவில்லை. இவர்கள் அனைவருக்கும், மதிப்பெண் குறைக்கப்பட்டது. கூடுதல் தவறு செய்தவருக்கு, அதற்கேற்ப மதிப்பெண் குறைக்கப்பட்டது என டி.ஆர்.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.
டி.இ.டி., முதல் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டையும் எழுதியவரில், 83 பேர், இரு தேர்விலும் தேர்ச்சி பெற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பணி ஆகிய இரண்டில், இவர்கள் எதை விரும்புகின்றனரோ, அதை தேர்வு செய்து கொள்ளலாம்.இடைநிலை ஆசிரியரை விட, பட்டதாரி ஆசிரியருக்கு சம்பளமும்; பதவி உயர்வுக்கான வழி வகைகளும் அதிகம் உள்ளன. எனவே, பட்டதாரி ஆசிரியர் பணியையே பெரும்பாலானோர் தேர்வு செய்வர்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் 122 மதிப்பெண் பெற்று, உடுமலையை கரட்டூரைச் சேர்ந்த திவ்யா, மாநில அளவில் முதலிடம் பிடித்தார். "பொழுது போக்கு அம்சங்களை தவிர்த்து, தீவிர முயற்சி மேற்கொண்டதே வெற்றிக்கு காரணம்&' என, திவ்யா தெரிவித்தார். இவரது தந்தை மூர்த்தி, உடுமலை தினசரி சந்தை காய்கறி மண்டியில், கணக்காளராக உள்ளார். தாய் ஜெயலட்சுமி, சத்துணவு அமைப்பாளர். தங்கை சரண்யா பி.இ., படித்துள்ளார்.
புங்கமுத்தூர் காந்தி கலா நிலையம் பள்ளியில் பிளஸ் 2 முடித்து, கோவையில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரியில், டி.எட்., படிப்பை கடந்த 2005ல் முடித்துள்ளார். பின்னர், தொலைதூர கல்வியில் எம்.எஸ்சி., கணிதம் மற்றும் திருப்பூர் தனியார் கல்லூரியில் பி.எட்., முடித்துள்ளார். உடுமலை அருகே உள்ள தனியார் பள்ளியில், ஆசிரியராக திவ்யா பணியாற்றி வருகிறார்.

சமூக அறிவியலில் 150க்கு 125 மதிப்பெண்கள் பெற்று, தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த அருள்வாணி, மாநில முதல் இடம் பிடித்துள்ளார். அருள்வாணி எம்.ஏ., பொருளாதாரம் படித்துள்ளார். அவர் கூறியதாவது: என் கணவர் ஹரிபாஸ்கர், இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகிறார். ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள தமிழக அரசின் பாடப் புத்தகங்களை, படித்து தேர்விற்கு தயாரானேன்.தேர்வில் பாடம் சம்பந்தமில்லாத சில கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன.
அதை தவிர்த்தால், என்னைப் போல பலரும் அதிக மதிப்பெண்களை பெறுவர். மாநில அளவில் முதல் இடம் எனக்கு எதிர்பாராத ஒன்று. மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமானது. அப்போது தான், சிறந்த, தகுதியான ஆசிரியர்களை உருவாக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, August 25, 2012

தமிழ்நாடு தகுதி தேர்வு முடிவு.... ஒரு பார்வை




PAPER I  = 1735 / 388175 = 0.44%
PAPER II = 713 / 676763 = 0.10%
TOTAL = 2448 / 1064938 = 0.22%

PAPER - I
TAMIL  = 1729

GT = 67
BC = 1023
BCM = 41
MBC = 465
SC = 115
SCA = 17
ST = 1

TELUGU  = 5

GT = 2
BC = 2
MBC = 1

MALAYALAM  = 1

GT = 1 

PAPER I OVERALL = 1735

===============================================================
 PAPER - II

MATHS AND SCIENCE = 283

GT = 8
BC = 114
BCM = 3
MBC = 128
SC = 25
SCA = 3
ST = 2

SOCIAL SCIENCE - TAMIL = 426

GT = 13
BC = 227
BCM = 8
MBC = 138
SC = 37
SCA = 2
ST = 1

SOCIAL SCIENCE - MALAYALAM  = 4

GT = 2
BC =2

PAPER II -  OVERALL = 713

அக்டோபர் 3ம் தேதி T.E.T மறுதேர்வு

சென்னை: ஜுலை 12ம் தேதி நடைபெற்ற டெட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 1%க்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஜுலை 12ம் தேதி நடத்தப்பட்டது. மொத்தம் 2 தாள்களாக இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த 2 தாள்களையும் மொத்தமாக 6,76,773 பேர் எழுதினர்.
முதல் தாளை மட்டும் எழுதியவர்கள் எண்ணிக்கை 2,88,588 பேர். அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 1,735 பேர். இரண்டாம் தாளை மட்டும் எழுதியவர்கள் எண்ணிக்கை 3,88,185 பேர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 713 பேர்.
அந்த வகையில் 2 தாள்களிலும் சேர்ந்து 2,448 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2 தாள்களிலும் சேர்த்து தேர்ச்சி பெற்றவர்கள் 83 பேர் மட்டுமே.
இதனடிப்படையில், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 1%ஐ கூட தாண்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதிகம் பகுப்பாய்வு அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விகளை எழுதுவதற்கு போதுமான நேரம் ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, தேர்வர்கள் மத்தியில் பரவலாக எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.
தேர்ச்சி விகிதம் இந்தளவிற்கு குறைவாக இருப்பதால், தற்போதைய காலியிடங்களுக்கான ஆசிரியர்களை பணியமர்த்துவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வுக்குக்கூட அழைக்க ஆளில்லாத நெருக்கடி நிலவுகிறது.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும், வரும் அக்டோபர் 3ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மறுதேர்வுக்காக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுதேர்வில், 30 நிமிட நேரம் கூடுதலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Wednesday, August 22, 2012

பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை

மதுரை: அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் நியமிக்கப்பட்ட, 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களில், பல்வேறு காரணங்களால் 1200 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை விரைவில் நிரப்பவேண்டும் என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், இந்தாண்டு துவக்கத்தில் ரூ.5 ஆயிரம் மாத சம்பளம் அடிப்படையில் கணினி, தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் இதுவரை மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.
 பணி கிடைத்த பள்ளிகள் தொலைவாக இருந்தது, வேறு பள்ளிக்கு மாற்றம் கேட்டு கிடைக்காத காரணத்தால் தேர்வான ஆசிரியர்கள் இன்னும் பணியில் சேராமல் இருப்பது, பகுதி நேர ஆசிரியர்களாக தேர்வு பெற்ற பின் வேறு வேலைகள் கிடைத்து சென்றது போன்ற காரணங்களால் மாநிலம் முழுவதும் இன்னும் சுமார் 1,200 பணியிடங்கள் வரை காலியாக உள்ளதாக அனைவருக்கும் கல்வி திட்டம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 இப்பணியிடங்களை தகுதியுள்ள ஆசிரியர்கள் மூலம் நிரப்ப தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கு இரண்டாவது முறையாக அழைப்பு விடுப்பதா? அல்லது தகுதி அடிப்படையில் புதியவர்களை தேர்வு செய்வதா? என்று கல்வி துறை அதிகாரிகள் பரிசீலனை நடத்தி வருகின்றனர். எந்த வகையிலாவது காலியாக உள்ள இடங்களுக்கு பகுதி நேர ஆசிரியர்களை விரைவில் நியமித்து கல்வி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தகுதியுள்ள ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Thursday, August 16, 2012

சென்னை சேப்பாக்கத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வை ரத்துச் செய்யக் கோரி பட்டதாரி ஆசிரியர்கள் வரும் 17ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழக அரசு கடந்த மாதம் 22ம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து 6,50,000 பேர் கலந்து கொண்டனர். கேள்வித்தாள் கடினம், குறைவான நேரம், பாடத்திட்டத்தின்படி கேள்விகள் இல்லை என்று தேர்வு எழுதியவர்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கிடையே தேர்வுக்கான விடையை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. இதில் விடைக் குறியீடுகள் தவறாக இருந்ததாகக் கூறி, தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் புகார் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு 24,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டிய நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் எதிர்பார்த்த அளவுக்கு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது. 

எனவே, தகுதி தேர்வை ரத்து செய்யக் கேரி வரும் 17ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்க உள்ளனர்.

17 அல்லது 18-ந் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வை 6.5 லட்சம் பேர் எழுதினார்கள். இடைநிலை ஆசிரியர்கள் 2.5 லட்சம் பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 4 லட்சம் பேரும் இத்தேர்வை எழுதினார்கள்.

23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இத்தேர்வு நடத்தப்பட்டது. தாள்-1, தாள்-2 ஆகிய இந்த இரண்டு தேர்வுகளையும் எழுத போதுமான காலஅவகாசம் கொடுக்கவில்லை. 150 கேள்விகளுக்கு 90 நிமிடங்களில் பதில் அளிக்க முடியவில்லை. கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி இருந்தால் மட்டுமே முறையாக பதில் அளிக்க முடியும் என்று தேர்வர்கள் புகார் கூறினார்கள்.

தமிழகம் முழுவதும் பரவலாக தேர்வர்கள் குற்றச்சாட்டை தெரிவித்தனர். போதுமான நேரம் ஒதுக்காமல் வினாத்தாள் தயாரிக்கப்பட்டதே இந்த குளறுபடிக்கு காரணம் என்று கூறப்பட்டது.

இதற்கிடையில் வினாக்களுக்கான விடைகளை இணையதளத்தில் வெளியிட்டனர். தேர்வர்கள் தங்களது விடைத்தாள் நகலுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைகளை சரிபார்த்து ஏதாவது தவறுகள் இருந்தால் முறையிடலாம் என்று அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் அனைத்து வினாத்தாள்களும் ஸ்கேன் செய்யப்பட்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டன. மதிப்பீடு செய்ததில் மிக குறைந்த அளவில் அதாவது 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று இருப்பதாக ஒரு தகவல் வெளியானது.

6.5 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் வெறும் 2 ஆயிரம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்று இருப்பதை அறிந்த அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு மறுத்துவிட்டனர்.

வருகிற 17 அல்லது 18-ந் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. அப்போது எத்தனை பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று கூறினர். அதனால் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Monday, August 13, 2012

குரூப் 2 தேர்வு ரத்து: விரைவில் மறு தேர்வு

சென்னை, ஆக., 13 : 
 தமிழகத்தில் அரசுப் பணிகளில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வின் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தைத் தொடர்ந்து, நேற்று நடந்த குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இன்று மதியம் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கடலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முன்கூட்டியே வெளியானதாக புகார்கள் எழுந்தன.இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தேடப்பட்டு வருகிறார். இது குறித்து டிஎன்பிஎஸ்சி முன்னாள் ஊழியரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.தேர்வுக்கு விண்ணப்பித்து மோசடியில் ஈடுபட்டவர்கள் இனி அரசுத் தேர்வே எழுத முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நட்ராஜ் கூறியுள்ளார்.
நேற்று நடந்த குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் மறுதேர்வை எழுதலாம். மறு தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் நட்ராஜ் கூறினார்.

குரூப்-2 தேர்வு வினாத்தாள் அவுட்?

ஈரோடு:
நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வில், வினாத்தாளின் நகலாக, கையால் எழுதப்பட்ட ஜெராக்சுடன், ஈரோட்டில் பெண் ஒருவர் பிடிபட்டார். இதனால், நேற்றைய வினாத்தாள் அவுட் ஆனதாக தகவல் பரவியதால், பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு, சி.எஸ்.ஐ., மேல்நிலைப் பள்ளி மையத்தில், ஈரோட்டைச் சேர்ந்த ரேவதி மற்றும் வித்யா ஆகிய இருவரும் தேர்வு எழுதினர். கேள்வித்தாளில், பொது அறிவு பிரிவில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளை, காலை, தேர்வு துவங்கும் முன், பெண் ஒருவர் ஜெராக்ஸ் வைத்து கலந்தாலோசித்தது நினைவுக்கு வந்ததால், இதுபற்றி, தேர்வு கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர்.

தேர்வு முடிந்ததும், வெளியே வந்தவர்கள், அப்பெண்ணை தேடி கண்டுபிடித்தனர். அவர், பவானியைச் சேர்ந்த செந்தில் மனைவி தனக்கொடி,26, என தெரியவந்தது.அப்பெண்ணிடம் இருந்த ஜெராக்சில், தேர்வில் கேட்கப்பட்டிருந்த, கேள்வி எண், 131 முதல், 170 வரையிலான, கேள்வி, சாய்ஸ் மற்றும் பதில் என, அனைத்தும், அச்சு பிசகாமல், எழுத்துப்பிழையுடன், கையால் எழுதப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி தனக்கொடி கூறியதாவது:என் கணவர், குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்., கல்லூரியில், நூலகராக பணியாற்றுகிறார். குரூப்-2 தேர்வு எழுத, கணவருடன் பஸ்சில் வந்தேன். பஸ்சில் வந்த சிலர், தேர்வு பற்றி பேசிக்கொண்டு வந்தனர். அவர்களிடம் இருந்து, ஜெராக்சை, என் கணவர் வாங்கி எனக்குக் கொடுத்தார். தேர்வு எழுதியபோது, கேள்வித்தாளும், என்னிடம் இருந்த விடைத்தாளும் ஒன்றாக இருந்தது. எனவே, கலெக்டரிடம் புகார் கொடுக்க நானும் வந்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பத்திரிகையாளர்களிடம், "பஸ்சில் வந்தபோது ஜெராக்ஸ் கிடைத்தது' என்றும், அடுத்த அரை மணி நேரத்தில், "பஸ் ஸ்டாண்டில் கிடைத்தது' என்றும், பின், நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தபோது, "ரயிலில் வரும்போது, என் கணவருக்கு கிடைத்தது' என, முன்னுக்குப் பின் முரணாக, தனக்கொடி பதில் கூறினார். தனக்கொடி மற்றும் இப்பிரச்னையை வெளிக்கொண்டு வந்த ரேவதி, வித்யா ஆகியோரை, கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, டி.ஆர்.ஓ., கணேஷ், ஆர்.டி.ஓ., சுகுமார் மற்றும் டவுன் டி.எஸ்.பி., பெரியய்யா ஆகியோர் தனித்தனியாக விசாரித்தனர் .தனக்கொடியின் கணவர் செந்திலை பிடித்து வர, பவானி போலீசார் முயன்று வருகின்றனர்.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் கூறியதாவது:
தேர்வு நடப்பதற்கு முன், வினாத்தாள் வெளியாக வாய்ப்பில்லை. ஆனால், ஈரோட்டில் தேர்வு எழுதிய பெண்ணின் கையில் வினாத்தாள் நகல் இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படித்திருந்தால் எளிது...:
பொது அறிவு வினா எளிதாகவே இருந்தது. பொதுத்தமிழிலும் கஷ்டமான கேள்விகளும் இல்லை. கணக்கிலிருந்தும் கேள்வி எளிதாகவே கேட்கப்பட்டிருந்தன. சுருக்கமாகச் சொன்னால் படித்திருந்தால் அனைத்து கேள்விகளும் எளிது,

டி.இ.டி: தகுதி மதிப்பெண்களை, 40 சதவீதமாகக் குறைக்க, டி.ஆர்.பி., திட்டம்


டி.இ.டி., தேர்வில், 26 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், வெறும், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதால், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை, 40 சதவீதமாகக் குறைக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.கடந்த மாதம், 12ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம், முதல் முறையாக நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி., ), 5.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வில், "கேள்வித்தாள் மிகக் கடினமாக இருந்தது; நேரமும் போதவில்லை. இதனால், அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற வாய்ப்பில்லை' என, தேர்வர்கள் குற்றம் சாட்டினர்.இதை நிரூபிக்கும் வகையில், தேர்வு முடிவுகள் அமைந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவை வெளியிடுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 10 சதவீத தேர்ச்சியை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) எதிர்பார்த்த நிலையில், வெறும், 2 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, தேர்வு எழுதிய, 5.5 லட்சம் பேரில், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேறியுள்ளனர்.

டி.இ.டி., தேர்வு மூலம், 7,194 இடைநிலை ஆசிரியர்; 18 ஆயிரத்து, 987 பட்டதாரி ஆசிரியர் என, 26 ஆயிரத்து, 181 ஆசிரியரை தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. ஆனால், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது, டி.ஆர்.பி.,க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு, குறைந்தபட்சம் ஒரு பணியிடத்திற்கு, மூன்று பேரை அழைக்க வேண்டும். அந்த வகையில், 78 ஆயிரம் பேர் அழைக்கப்பட வேண்டும். ஆனால், தேர்வு செய்ய உள்ள மொத்த எண்ணிக்கையில், பாதி அளவிற்குக் கூட ஆசிரியர் தேர்ச்சி பெறாததால், வேறு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு, டி.ஆர்.பி., தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது:
ஏற்கனவே வெளியிட்ட விதிமுறைப்படி, 150 மதிப்பெண்களில், தகுதி மதிப்பெண்களாக, குறைந்தபட்சம், 60 சதவீதம் பெற வேண்டும். அதன்படி, 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால், மிகக் குறைவானவர்கள் மட்டுமே இம்மதிப்பெண்களை பெற்றிருப்பதால், தகுதி மதிப்பெண்களை, 40 சதவீதமாகக் குறைப்பது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது. ஒரு பணியிடத்திற்கு, மூன்று பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டும்; அதை மனதில் கொண்டு, உரிய முடிவை எடுப்போம். 
 
இந்தச் சலுகை, இந்த ஒரு தேர்வுக்கு மட்டுமே பொருந்தும் என்ற அறிவிப்புடன், உரிய முடிவு வெளியிடப்படும்.தேர்வு முடிவில், வேறு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், உடனடியாக தேர்வு முடிவை வெளியிட முடியாது. இது குறித்து, ஓரிரு நாளில் முடிவெடுத்து, 20ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும்.
எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் பிரிவினருக்கு, கூடுதல் சலுகை அளிப்பது குறித்தும், ஆலோசனை நடக்கிறது.
இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.