Sunday, August 26, 2012

டி.இ.டி: தேர்ச்சி பெற்றவர்களில் 68% பேர் பெண்கள்

சென்னை: டி.இ.டி. தேர்வு மிகக் கடினமாக இருந்ததாக, தேர்வர் பலர் புலம்பிய நிலையிலும், தேர்ச்சி பெற்ற 2,448 பேரில், 1,680 பெண்கள் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர். இதில், முதல் மற்றும் இரண்டாம் தேர்வில், முதல் மூன்று இடங்களை, ஒன்பது பேர் பிடித்தனர். இவர்களில், எட்டு பேர் பெண்கள்.

டி.இ.டி. தேர்வில், கேள்வித்தாள் வரிசை எண்ணை, விடைத்தாளில் குறிப்பிடாதவருக்கு, ஐந்து மதிப்பெண்; முக்கிய பாடத்தை குறிப்பிடாதவருக்கு, மூன்று; மொழிப் பாடத்தை குறிப்பிடாதவருக்கு இரண்டு மதிப்பெண் என, தவறு செய்தவர்களை ஆறு வகையாகப் பிரித்து, அவர்களுக்கு, "மைனஸ்&' மதிப்பெண்களை, டி.ஆர்.பி., வழங்கியுள்ளது.
இதில் அதிகபட்சமாக, முதல் தாள் தேர்வில், 621 பேர்; இரண்டாம் தாளில், 731 பேர், கேள்வித்தாள் வரிசை எண்ணை எழுதவில்லை. இவர்கள் அனைவருக்கும், மதிப்பெண் குறைக்கப்பட்டது. கூடுதல் தவறு செய்தவருக்கு, அதற்கேற்ப மதிப்பெண் குறைக்கப்பட்டது என டி.ஆர்.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.
டி.இ.டி., முதல் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டையும் எழுதியவரில், 83 பேர், இரு தேர்விலும் தேர்ச்சி பெற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பணி ஆகிய இரண்டில், இவர்கள் எதை விரும்புகின்றனரோ, அதை தேர்வு செய்து கொள்ளலாம்.இடைநிலை ஆசிரியரை விட, பட்டதாரி ஆசிரியருக்கு சம்பளமும்; பதவி உயர்வுக்கான வழி வகைகளும் அதிகம் உள்ளன. எனவே, பட்டதாரி ஆசிரியர் பணியையே பெரும்பாலானோர் தேர்வு செய்வர்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் 122 மதிப்பெண் பெற்று, உடுமலையை கரட்டூரைச் சேர்ந்த திவ்யா, மாநில அளவில் முதலிடம் பிடித்தார். "பொழுது போக்கு அம்சங்களை தவிர்த்து, தீவிர முயற்சி மேற்கொண்டதே வெற்றிக்கு காரணம்&' என, திவ்யா தெரிவித்தார். இவரது தந்தை மூர்த்தி, உடுமலை தினசரி சந்தை காய்கறி மண்டியில், கணக்காளராக உள்ளார். தாய் ஜெயலட்சுமி, சத்துணவு அமைப்பாளர். தங்கை சரண்யா பி.இ., படித்துள்ளார்.
புங்கமுத்தூர் காந்தி கலா நிலையம் பள்ளியில் பிளஸ் 2 முடித்து, கோவையில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரியில், டி.எட்., படிப்பை கடந்த 2005ல் முடித்துள்ளார். பின்னர், தொலைதூர கல்வியில் எம்.எஸ்சி., கணிதம் மற்றும் திருப்பூர் தனியார் கல்லூரியில் பி.எட்., முடித்துள்ளார். உடுமலை அருகே உள்ள தனியார் பள்ளியில், ஆசிரியராக திவ்யா பணியாற்றி வருகிறார்.

சமூக அறிவியலில் 150க்கு 125 மதிப்பெண்கள் பெற்று, தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த அருள்வாணி, மாநில முதல் இடம் பிடித்துள்ளார். அருள்வாணி எம்.ஏ., பொருளாதாரம் படித்துள்ளார். அவர் கூறியதாவது: என் கணவர் ஹரிபாஸ்கர், இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகிறார். ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள தமிழக அரசின் பாடப் புத்தகங்களை, படித்து தேர்விற்கு தயாரானேன்.தேர்வில் பாடம் சம்பந்தமில்லாத சில கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன.
அதை தவிர்த்தால், என்னைப் போல பலரும் அதிக மதிப்பெண்களை பெறுவர். மாநில அளவில் முதல் இடம் எனக்கு எதிர்பாராத ஒன்று. மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமானது. அப்போது தான், சிறந்த, தகுதியான ஆசிரியர்களை உருவாக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment