Friday, August 31, 2012

தகுதித்தேர்வு மீது சந்தேகம் கிளப்பும் பட்டதாரிகள்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதி தேர்வு எழுதியவர்களில் சிலர் மட்டும் முதல் தாளில் மிகக்குறைந்த மதிப்பெண் எடுத்தும் இரண்டாம் தாளில் 100ஐ தாண்டி மதிப்பெண் பெற்றுள்ளனர். இதையடுத்து தகுதி தேர்வு மீதும் பட்டதாரிகளுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை காட்டி பட்டதாரிகள் குமுறுகின்றனர்.
தமிழகத்தில் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் 6 லட்சத்து 76 ஆயிரம் பேர் எழுதினர். அந்ததேர்வில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 2,88,588 பேர் முதல்தாளும்( 1 முதல் 5ம் வகுப்புக்கு உரியது), பட்டம் முடித்து பி.எட் படித்தவர்கள் 3,88,175 பேர் இரண்டாம் தாளும் (6 முதல் 8ம் வகுப்புக்கு உரியது) எழுதினர். இவற்றில் சிலர் இரண்டு தாள்களும் எழுதினர்.
தேர்வு முடிவுகள் வெளியானதில் முதல் தாளில் 1735 பேரும், 2ம் தாளில் 713 பேரும் தேர்ச்சி பெற்றதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. மேலும், தாள் 1 மற்றும் தாள்&2 ஆகிய இரண்டிலும் 83 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இரண்டு தேர்வுகளிலும் தேர்வு எழுதியவர்களின் முடிவுகளை பார்க்கும் போது, தகுதி தேர்விலும் ஏதோ நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்&1ல் வெறும் 5 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவி தாள்&2ல், 113 பெற்றுள்ளார். அதேபோல தாள்&1ல் வெறும் 16 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் ஒருவர் தாள்&2ல் 114 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தகுதி தேர்வை பொறுத்தவரை தாள் ஒன்று என்பது தொடக்க பள்ளி பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறுவது. தாள் இரண்டு என்பது பட்டதாரிகளுக்கு உரியது. அதில் 6ம் வகுப்பு முதல் 10ம வகுப்புவரை உள்ள பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறும். முதல்தாளை விட இரண்டாம் தாள் தான் கடினமானது.
காலையில் முதல்தாள் தேர்வு எழுதிய ஒருவர், அந்த தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண்ணும், அதே நாளில் மதியம் நடந்த இரண்டாம் தாள் தேர்வில் மாநில அளவில் முதல் 15 இடங்களுக்குள் மதிப்பெண் பெற்று வந்துள்ளார். இது போல் பலர் அதிக மதிப்பெண் எடுத்துள்ளனர். இது 6 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புரியாத புதிராக உள்ளது. இதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்வு எழுதி ஏமாற்றம் அடைந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment