Saturday, November 17, 2012

பி.எட்., எம்.எட்., படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு



சென்னை: பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட, ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வு முறையை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
நீதிபதி வர்மா குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த பரிந்துரைக்கு, கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில், ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், ஆசிரியர் கல்வியில் கொண்டு வர வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும், தரமான ஆசிரியரை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்து, பரிந்துரை அறிக்கை வழங்க, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி வர்மா தலைமையில் குழு அமைத்து, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. வர்மா குழு, சமீபத்தில், தன் பரிந்துரையை, மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

பரிந்துரையில், "தரமான கல்வியை அளிக்க வேண்டும் எனில், தரமான ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். அதற்கு, பி.எட்., - எம்.எட்., மற்றும் ஆசிரியர் கல்வி பட்டய படிப்பு ஆகிய ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கையில், நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும்" என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் நடந்த, முதல், டி.இ.டி., தேர்வை, கிட்டத்தட்ட, ஏழு லட்சம் பேர் எழுதிய போதும், 1 சதவீதத்திற்கும் குறைவாக, வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்வு பெற்றதை, வர்மா குழு சுட்டிக் காட்டி, நுழைவுத் தேர்வின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தின் நிலைப்பாடு:
  வர்மா குழுவின் பரிந்துரை அறிக்கை, சமீபத்தில், டில்லியில் நடந்த கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில் வைக்கப்பட்டு, வாரியத்தின் ஒப்புதலும் பெறப்பட்டது. கூட்டத்தில், பல்வேறு மாநில பிரதிநிதிகள், ஆசிரியர் கல்விக்கான நுழைவுத் தேர்வு திட்டத்தை ஆதரித்துள்ளனர். ஆனால், இந்தவிவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு தெரியவில்லை.
30 ஆயிரம் மாணவர்கள்
தமிழகத்தில், 700 ஆசிரியர் கல்வி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஆண்டுதோறும், 40 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு படிப்புகளில், 30 ஆயிரம் பேர் வரை சேர்கின்றனர். இந்த படிப்புகளின் சேர்க்கைக்கு, தற்போது நுழைவுத்தேர்வு கிடையாது.
ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு விண்ணப்பதாரர்கள், பட்டப் படிப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில், தேர்வுப் பட்டியலை வெளியிட்டு, கலந்தாய்வு அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்த முறையால், தரமான ஆசிரியரை தேர்வு செய்ய முடியாது என்பதை, டி.இ.டி., தேர்வு, வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. எனவே, நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து, உயர்கல்வித் துறை தீவிரமாக ஆலோசித்து வருவதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு, அடுத்த கல்வியாண்டு சேர்க்கைக்கு முன்னதாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச் செயலர் பிச்சாண்டி கூறியதாவது:
 கலை, அறிவியல் பட்டதாரிகள் மட்டுமே, பி.எட்., - எம்.எட்., படிப்புகளில் ஆர்வம் காட்டுகின்றனர். நுழைவுத் தேர்வு திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், கல்லூரி பாடத் திட்டங்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.  இல்லை எனில், நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே, ஆசிரியர் கல்விக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவர். கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் நிலை, கேள்விக்குறி ஆகிவிடும்.
இவ்வாறு பிச்சாண்டி தெரிவித்தார்.

1 comment:

  1. hello sir any news there about computer teacher from government..

    ReplyDelete