சென்னை: கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது வெளியிட்ட கல்வித்துறை தொடர்பான அறிவிப்புகளில், பெரும்பாலானவற்றை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களின் தரத்தை மேம்படுத்த நிபுணர்கள் குழு அமைப்பு உள்ளிட்ட, நான்கு அறிவிப்புகள் மட்டுமே பாக்கி உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ளவை: கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, 17 அறிவிப்புகளை, அப்போது பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் மற்றும் முதல்வர் வெளியிட்டனர். அமைச்சரின் அறிவிப்புகளில், நான்கு அறிவிப்புகள் மட்டுமே, இன்னும் நிலுவையில் இருப்பதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
* சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களின் தரத்தை மேம்படுத்த வல்லுனர் குழு அமைப்பு.
* ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தை, அரசு மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி குழுமமாக தரம் உயர்த்துதல்.
* கல்வி தகவல் மேலாண்மை முறை.
* பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும், நமது குழந்தைகள் திட்டம்.
மற்ற திட்டங்கள்
மற்ற திட்டங்கள்
* புதிய ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரை, 2,682 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்கள், தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
* 5,790 பட்டதாரி ஆசிரியர்கள், 4,342 இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய, முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும். இதற்கும், இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன; 1,538 சிறப்பாசிரியர்கள் தேர்வு முடிந்த நிலையில், தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
* வேளாண் பயிற்றுனர், 25 பேரை, பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்வதா அல்லது எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்வதா என, அரசிடம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை கேட்டுள்ளது.
* நூலகத் துறையில், 1,353 நூலகர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
* உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் முதுநிலை விரிவுரையாளர்களை தேர்வு செய்ய, விரைவில் போட்டித் தேர்வு நடைபெற உள்ளது.
* மாணவர்களுக்கான, ஸ்மார்ட் கார்டு திட்டம், வரும் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.
* அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதியும் கொடுக்கப்பட்டு வருகிறது. மற்ற திட்டங்களுக்கு அரசாணை வெளியாகி, முதல் கட்ட பணிகள் துவங்கி உள்ளதாக, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.