Tuesday, May 1, 2012

கருணாநிதிக்கு கணக்கு புரியலை:அமைச்சர்



காட்டம்சென்னை: ""ஆசிரியர் நியமன விவகாரத்தில், கருணாநிதிக்கு கணக்கு புரியாமல் விமர்சனம் செய்துள்ளார். 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் என்பது, 14 ஆயிரமாகத் தேயவில்லை. 14 ஆயிரம் காலிப் பணியிடங்கள், நடப்பு ஆண்டில் ஏற்படும் காலிப் பணியிடங்களாகும்,'' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி கூறினார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்களாக இருந்த சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என கூறியதையும், தற்போதைய அமைச்சர் சிவபதி, 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் எனக் கூறியதையும் குறிப்பிட்டு, ""55 ஆயிரம், 14 ஆயிரமாகத் தேய்ந்தது ஏன்?'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்து, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி கூறியதாவது:

55 ஆயிரமல்ல, 57 ஆயிரம் : இப்போதும் சொல்கிறோம்; ஒரு ஆண்டில் 55 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் 50 ஆயிரத்து 230 பேரும், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 7,308 சேர்த்து, மொத்தம் 57 ஆயிரத்து 538 பணியிடங்களை நிரப்ப, 2011-12ம் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கணக்கு புரியாமல்... : கருணாநிதி குறிப்பிட்ட 14 ஆயிரம் பணியிடங்கள் என்பது, 2012-13ம் ஆண்டில் ஏற்படும் காலியிடங்களுக்கானது. 14 ஆயிரத்து 349 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் என, சட்டசபையில் நான் அறிவித்ததைத் தான், கருணாநிதி விமர்சனம் செய்துள்ளார். கணக்கு புரியாமல் கூறியிருக்கிறார்.

இரண்டு ஏழானது : பள்ளிக் கல்வித் துறையைப் பற்றி விமர்சனம் செய்யும் கருணாநிதி, தமிழ் வளர்ச்சித் துறையை ஐந்து ஆண்டுகள் தன் வசம் வைத்திருந்த போதும், அத்துறைக்கென போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அத்துறை சார்பில், வெறும் இரண்டு விருதுகளை மட்டுமே வழங்கினார். ஆனால், முதல்வர் கூடுதலாக ஐந்து விருதுகளைச் சேர்த்து, தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ஏழு பேருக்கு விருதுகளை வழங்கினார். இவ்வாறு அமைச்சர் சிவபதி கூறினார்.

டி.இ.டி., மூலம் 34 ஆயிரம் பேர்... பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா கூறும் போது, ""ஜூன் முதல் வாரத்தில் நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து, 8,884 இடைநிலை ஆசிரியர்களும், 25 ஆயிரத்து 111 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு செய்யப்படுவர்,'' என தெரிவித்தார்.

No comments:

Post a Comment