Friday, January 27, 2012

எஸ்.எஸ்.ஏ. ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம்

சென்னை, ஜன. 25: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) கீழ் 16 ஆயிரம் ஆசிரியர்களை நியமிப்பதில் தாமதம் நிலவி வருகிறது. வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் இல்லாமல் வேறு முறையில் ஆசிரியர்களை நியமிக்க முயற்சிகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
மத்திய அரசு சார்பில் தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 16 
 ஆயிரம் ஆசிரியர்களை மாதத்துக்கு ரூ.5 ஆயிரம் என்ற ஊதிய அடிப்படையில் நியமிக்க அரசு முடிவு செய்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.


வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு: ஆசிரியர்கள் நியமனத்தில் வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு முறை பின்பற்றப்பட வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணையைக் கடுமையான முறையில் பின்பற்ற அதிகாரிகளுக்கு அரசின் சார்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த வாய்மொழி உத்தரவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் கூறப்படுகின்றன.
""16 ஆயிரம் ஆசிரியர்களை நியமிப்பதற்கான உத்தரவை ஜனவரி 25-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அளித்து அவர்கள் 30-ம் தேதிக்குள் பணியில் சேரும்படி அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் தீவிரமாகப் பணிகள் நடந்தன. வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் பெறப்பட்டு ஆசிரியர்கள் தேர்வு நடந்தது. அந்தப் பணிகள் முற்றிலும் முடிக்கப்பட்ட நிலையில், பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை'' என மதுரையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத பட்டதாரி ஒருவர் தெரிவித்தார்.


காரணம் என்ன? ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பும், விண்ணப்பமும் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 500 முதல் 600 பணியிடங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
அவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் அவர்களுக்கு பணி உத்தரவு வழங்கும் பொறுப்பு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், இப்போது அனைத்து மாவட்டங்களின் பட்டியல்களும் சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்ககத்திடம் வர வேண்டும் எனவும், அங்கு பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகே வேலைக்கான உத்தரவு அளிக்கப்படும் எனவும் அரசின் சார்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்களிடம் கேட்டபோது, ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பட்டியல் தயாராக உள்ளது. அரசு ஒப்புதல் அளித்தவுடன் உடனடியாக அவை வெளியிடப்படும் எனத் தெரிவித்தன.

1 comment:

  1. வேடிக்கை. ஏன் அதற்கு விண்ணப்பம் அளித்த அனனவரையும் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யவேண்டும். தேர்வு என்கின்ற பெயரில் நாடகம்
    நடத்த வேண்டும்

    ReplyDelete