Monday, January 23, 2012

thottakalai aasiriyar?


புதூர்: மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு தோட்டக்கலை ஆசிரியர் பிரிவு வேலை வாய்ப்பில் விவசாயத்தை பாடமாக எடுத்து படித்தவர்களின் விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. தோட்டக்கலை மற்றும் தானிய வகைகளை சேர்த்து படித்த விவசாய பாட பிரிவுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக ஓவியம், தொழிற்கல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் 16 ஆயிரத்து 500 பேரை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான பட்டியல் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கோரப்பட்டுள்ளது. இப்பட்டியலை தயார் செய்யும் பணியில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் பகுதி நேர ஆசிரியர்களில் முதல் நான்கு பிரிவுகளுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தற்போது கூடுதலாக தோட்டக்கலை, கம்ப்யூட்டர், இசை ஆசிரியர் பிரிவுகளுக்கும் விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து அந்தந்த வட்டார வளமைய அலுவலர்கள் மூலம் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
 இதில் தோட்டக்கலை பகுதி நேர ஆசிரியர் பிரிவுக்கு கடந்த 1987ம் ஆண்டு வரை விவசாயத்தை பாடமாக படித்தவர்களின் விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. தோட்டக்கலையை படித்த சான்று இருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. 1987க்கு பின் தான் தோட்டக்கலை பாடமாக அமல்படுத்தப்பட்டது. அதற்கு முன் வரை விவசாயப் பாடத்தை படித்து சான்று பெற்றவர்கள் ஆயிரக்கணக்கானோர் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.தோட்டக்கலை பாடப்பிரிவில் காய்கறிகள், பழங்கள், மூலிகைக் கீரைகள், அழகு செடிகள், பூக்களை பற்றி படிக்கின்றனர். ஆனால் விவசாய பாடப்பிரிவில் கோதுமை, அரிசி, கேழ்வரகு உட்பட்ட அனைத்து தானிய வகைகளும், தோட்டக்கலையில் காய்கறிகள், பழங்கள், மூலிகைக் கீரைகள், அழகு செடிகள், பூக்கள் ஆகியவைகளை சேர்த்தே விவசாயப் பாடமாக படித்தனர். இதற்கு ஆசிரியர் தொழில்நுட்ப சான்று படிப்பு என்று பெயரிடப்பட்டது.
 இப்பயிற்சி தொழில்நுட்பதேர்வு இயக்குனரால் அங்கீகரிக்கப்பட்டது. இதுகுறித்து விவசாயத்தை பாடமாக படித்தவர்கள் கூறியதாவது
 மாநில அளவில் தேர்வானவர்களை கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாவட்டத்தை மையமாக கொண்டு தச்சு, ஓவியம், இசை, விவசாயம் ஆகிய சான்று படிப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. கோடை விடுமுறையின் போது 45 நாட்களுக்கு சிறந்த ஆசிரியர்களால் வகுப்பு எடுத்தனர். படிப்பு முடித்தவர்களுக்கு ஆசிரியர் தொழில்நுட்ப சான்றை சென்னை நுங்கம்பாக்கம், தொழில்நுட்ப தேர்வு இயக்குனர் மூலம் வழங்கப்பட்டது. இது தெரியாத இப்போதைய அதிகாரிகள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் அரசின் (ஜி.ஓ.171 தோட்டக்கலை) உத்தரவை காண்பித்து விவசாயத்தை பாடமாக படித்தவர்கள் அவமானப்படுத்தப்பட்டு வருகின்றனர்.1987ம் ஆண்டுக்கு பின் விவசாய சான்றுக்கு பதிலாக தோட்டக்கலை என்று பெயர் மாற்றப்பட்டது.
1987ம் ஆண்டுக்கு முன் வரை விவசாயத்தை பாடமாக எடுத்து படித்தவர்கள் நிறையபேர் வேலையின்றி 40 வயதை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 20 தோட்டக்கலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு விவசாயத்தை பாடமாக படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். எங்களை புறக்கணித்தால் யாரும் வேலை தரமாட்டார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாய பாட இருபால் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment