* 2012,13 ம் கல்வியாண்டிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை பள்ளி வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
* தொடக்க கல்வியிலேயே படித்தல், எழுதுதல் , எண்ணறிவு ஆகிய அடிப்படை திறன்களை அளிக்கும் எளிமையாக்கப்பட்ட செயல்வழி கற்றல் முறை அறிமுகப்படுத்தப்படும்.
* மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் வகையில் முப்பருவ முறை திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் புத்தக சுமை 50 சதவீதத்துக்கு குறைக்கப்படும். தசை மற்றும் எலும்பு நோய்களிலிருந்து மாணவர்கள் பாதுகாக்கப்படுவர்.
* ஆற்றல் மிக்க ஆசிரியர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு நடத்தப்படும்.
* ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன்மேம்பாடு கல்வியின் தரத்தை உயர்த்தும் முக்கிய அம்சமாக இருப்பதால் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை மாநில தலைமை பயிற்சி இயக்ககமாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் என்று தரம் உயர்த்தப்படும்.
* 1ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பத்தில் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மூலம் கல்விக்காக தனி அலைவரிசை (சேனல்) அமைக்கப்படும். மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கல்வி பெற இது உதவும்.
* தரமான கல்வி வழங்கும் வகையில் தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு 2005ல் அடித்தளமாக உருவாக்கப்பட்டது. தரமான கல்வி வழங்க ஒவ்வொரு மாநில அரசும் அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப கலைத்திட்ட வடிவமைப்பை தயார் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்பு 2012ம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* கல்லூரி, பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்விக்கு செல்ல மேல்நிலைக்கல்வியே ஒரு அடித்தளமாக உள்ளது. எனவே மேல்நிலைக்கல்வியில் தற்போதுள்ள பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. தற்போது பின்பற்றப்படும் மேல் நிலைக்கல்வி பாடத்திட் டம் 2004,05 ல் உருவாக்கப்பட்டது. எனவே தற்போதுள்ள மேல்நிலைக் கல்வி பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் வகையில் உரிய பரிந்துரைகள் வழங்க உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இதன் மூலம், பிளஸ்1, பிளஸ் 2 பாடத் திட்டங்கள் மாற்றி வடிவமைக்கப்பட்டு புத்தகங்கள் தயாரிக்கப்படும். இதற்கு நிபுணர் குழு ஆலோசனை வழங்கும்.
* பொதுத்தேர்வுகளில் மாணவ மாணவிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் வழங்கப்படுவதால் ஆள் மாறாட்டம் தவிர்க்கப்படுகிறது. அதே போல சான்றிதழ்களிலும் புகைப்படம் உள்ளதால் போலி சான்றிதழ் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது.
* 2012,13 ம் கல்வியாண்டில் 7 முதல் 17 வயது வரையுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சதுரங்க விளையாட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாநில விளையாட்டு ஆணையம் இணைந்து, பள்ளிகளில் சதுரங்க சங்கங்களை அமைத்து, மாணவர்களின் திறனை வெளிக்கொணர்ந்து பள்ளி, மாவட்ட, மண்டல, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும்.
தனியார் பள்ளிகளை முறைப்படுத்த சட்டம்
பேரவையில் அமைச்சர் சிவபதி பேசியதாவது: தமிழகத்தில் தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதற்காக தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் முறைப்படுத்தும் சட்டம் 1973 மற்றும் அதன் கீழ் அமையப்பெற்ற விதிகள் 1974 தனியார் பள்ளிகளுக்கு மான்யம் வழங்கும் விதித்தொகுப்பு, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் முறைப்படுத்தும் விதிகள், மழலையர் துவக்கப்பள்ளிகளுக்கான விதிகள் ஆகியவை பின்பற்றப்படுகின்றன.
தற்போது அனைத்து வகை பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்படுவதாலும், தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச கல்வி மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகள் 2011 நடைமுறைப்படுத்தப்படுவதாலும், மேற்கண்ட சட்டம் மற்றும் விதிகளை ஆய்வு செய்து தனியார் பள்ளிகளுக்கான பொதுவான சட்டம் மற்றும் விதிகளை வகுப்பதற்கு ஆலோசனை வழங்க வல்லுனர் குழு அமைக்கப்படும்.
No comments:
Post a Comment