Monday, April 16, 2012

ஆசிரியர்கள் நியமனம் : குழப்பம்





நெல்லை: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசின் அறிவிப்புகள் தெளிவாக இல்லாததால் விண்ணப்பதாரர்கள் குழப்பத்தில் உள்ளனர். கடந்த ஆட்சிக் காலத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் ஆசிரியர் தேர்வு முறையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என சுமார் 36 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்பட இருப்பதாக அரசு அறிவிப்புகள் வெளியாயின.

இந்நிலையில் மத்திய அரசு இயற்றிய கட்டாயக் கல்விச் சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் பணியில் சேர தகுதிதேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு சேர தகுதி தேர்வை அரசு அறிவித்தது. அதற்கு அனைவரும் விண்ணப்பித்தனர். ஜூன் 3ம் தேதி தமிழகத்திலுள்ள முக்கிய மையங்களில் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தம் 150 மதிப்பெண்களில் 90 மதிப்பெண்கள் பெற்றால் தான் தேர்ச்சி பெற முடியும்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் சட்டசபையில் கல்வித்துறை மான்யக் கோரிக்கையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவபதி கூறுகையில், “ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் இடைநிலை ஆசிரியர்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை மாநில பதிவு மூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் நிர்ணயிக்கப்படும் ‘கட்-ஆப் மார்க்‘கின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்“ என அறிவித்தார். இந்த அறிவிப்பு தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தகுதித்தேர்வுக்கு தற்போது தமிழக அரசால் வழங்கப்படும் விண்ணப்பங்களில் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர் பணிக்கான தகுதி தானே தவிர, இதில் தேர்ச்சி பெறுவதால் பணி நியமனத்துக்கான எந்தவித உரிமையையும் கோர முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் மாநில பதிவு மூப்பு அடிப்படையிலும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெளிவாக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதி தேர்வில் நிர்ணயிக்கப்படும் ‘கட்-ஆப் மார்க்‘ அடிப்படையில் என்று அமைச்சரின் அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் பெற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போல் போட்டித் தேர்வு எழுத வேண்டுமா? அல்லது இடைநிலை ஆசிரியர்களை போல் தகுதிதேர்வுக்கு பின்னர் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கப்படுமா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

1 comment:

  1. ஆசிரியர்களை இப்படி ஒவ்வொரு அரசும் மாறி மாறி இப்படி இன்னும் எத்தனை காலம் தான் சோதிப்பார்கள்

    ReplyDelete