Tuesday, February 28, 2012

1,029 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் :

சென்னை : தமிழகத்தில், 1,029 உடற்கல்வி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது. வேலைவாய்ப்புத் துறையிடம், 1,029 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், பதிவு மூப்பு பட்டியல் கேட்டிருந்தார்.

மாநில அளவில், கடந்த ஜன., 31ம் தேதி நிலவரப்படி, தகுதியுள்ள வேலைவாய்ப்பக பதிவு மூப்பு விவரங்களுடன் பட்டியலை, வேலைவாய்ப்பு அலுவலகம், www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. இதில் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இனசுழற்சி விவரங்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

இந்த பதிவுமூப்பு தேதிக்குள் தகுதியுள்ள மனுதாரர்கள் யாராவது விடுபட்டிருந்தால், தாங்கள் பதிவு செய்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு உரிய ஆதாரங்களுடன், வரும் மார்ச் 2ம் தேதிக்குள் நேரில் தொடர்பு கொள்ள வேண்டும். அதற்கு பிறகு வரும் மனுதாரர்களின் கோரிக்கை ஏற்க மாட்டாது என, வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

Sunday, February 26, 2012

T.R.B."ஹால் டிக்கெட்' குழப்பம்

ரெட்டியார்சத்திரம்:ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தேர்விற்கான, "ஹால் டிக்கெட்' கிடைக்காமல், விண்ணப்பதாரர்கள் பரிதவிக்கின்றனர்.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணிக்கான, எழுத்துத் தேர்வு இன்று நடக்கிறது. விண்ணப்பதாரர்களுக்கு, "ஹால் டிக்கெட்' தபாலில் அனுப்பப்பட்டது. நேற்று மாலை வரை, பலருக்கு, "ஹால் டிக்கெட்' கிடைக்கவில்லை. விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, தபால் வினியோகத்தில் பிரச்னையா, நகலை இன்டர்நெட்டில், "டவுண்லோடு' செய்வதா? என்பதில் குழப்பம் நீடித்தது. சிலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை அணுகியபோது, இன்டர்நெட்டில் நகல் எடுக்க அறிவுறுத்தினர்.

அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பல்வேறு பணிக்கு நேர்காணல்

சிவகங்கை :""அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வள மையங்களில்,ஒருங்கிணைப்பாளர், அக்கவுண்டன்ட் பணிக்கு நேர்காணல் நடைபெறும்,'' என முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி திட்ட 12 வட்டார வள மையங்களில், 12 எம்.ஐ.எஸ்., ஒருங்கிணைப்பாளர், 12 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், 24 அக்கவுண்டன்ட் பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிய தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேர்காணல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், காலை 10 மணிக்கு நடக்கும்.
எம்.ஐ.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது எம்.சி.ஏ., முடித்திருக்கவேண்டும். இதற்கான ஊதியம் ரூ.8,000. பிப்.,27ல் நேர்காணல் நடக்கும்.
பிப்.,28ல் 12 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு நேர்காணல் நடக்கும். ஏதேனும் பட்டம் மற்றும் டிப்ளமோ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், தமிழ் ஆங்கிலம் டைப்ரைட்டிங் உயர் தகுதி பெற்றிருக்கவேண்டும். மாத சம்பளம் 6,000 ரூபாய்.
பிப்.,29ல் 24 அக்கவுண்டன்ட் பணிக்கு நேர்காணல் நடக்கும். பி.காம் உடன் கம்ப்யூட்டரில் டேலி முடித்திருக்கவேண்டும்.
மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம். இத்தகுதியுள்ள நபர்கள், ஒரிஜினல் சான்றுடன் போட்டோ, வேலைவாய்ப்பு பதிவு அட்டை, முன் அனுபவ சான்றுடன் நேரடியாக வரவும், என்றார்.

தினமலர்  26/02/12

Friday, February 24, 2012

பி.ஏ. ஆங்கிலம் (சி.ஏ) மாணவர்கள் ஆட்சியரிடம் மனு

நாமக்கல், பிப். 20: ஆங்கிலம் கணினி செயலாக்கம் படிப்பை ஆங்கில பட்டப்படிப்புக்கு இணையாக கருத வேண்டும் என வலியுறுத்தி தனியார் கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.நாமக்கல் மாவட்டம், வெப்படை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ கந்தன் கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் (சி.ஏ.) பயிலும் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆட்சியர் ஜெ.குமரகுருபரனைச் சந்தித்து மனு அளித்தனர்.
மனு விவரம்
பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் இந்த கல்லூரியில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் பி.ஏ. ஆங்கிலம் (சி.ஏ) பட்டப் படிப்பு, ஆங்கிலம் பட்டப்படிப்புக்கு இணையானது என விளம்பரப்படுத்தப்பட்டதால் இதில் நாங்கள் சேர்ந்தோம்.எங்கள் கல்லூரியில் இந்தப் படிப்பில் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற சுமார் 117 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.
இவர்களில் 5 பேர் 2010-ம் ஆண்டு நடைபெற்ற டி.ஆர்.பி. தேர்வில் வெற்றி பெற்றனர். இவர்கள் பெரியார் பல்கலைக்கழகம் வழங்கிய பி.ஏ. ஆங்கிலம் (சி.ஏ.) பட்டப்படிப்பு சான்றிதழை, சான்றிதழ் சரிபார்ப்பின் போது காட்டிய போது ஆங்கிலம் பட்டப்படிப்பு இணையானது இல்லை என அதை டி.ஆர்.பி. நிர்வாகம் நிராகரித்து விட்டது.
எங்கள் கல்லூரியில் இப்போது 129 பேர் இந்தப் படிப்பை பயின்று வருகிறோம். மேலும், பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் சுமார் 1,500 பேர் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் சுமார் 10 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கின்றனர்.இந்நிலையில், இந்த படிப்பு ஆங்கிலம் பட்டப்படிப்புக்கு இணையானது இல்லை என டி.ஆர்.பி. நிர்வாகத்தால் கூறப்பட்டுள்ளது எங்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.எனவே, இந்த விஷயத்தை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது

குரூப்-4 மூலம் 5,000 பேர் விரைவில் தேர்வு:

சென்னை:குரூப்-4 நிலையில், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற, 5,000 பேரை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு செய்ய உள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் கூறியதாவது:நடப்பாண்டில், குரூப்-1 மற்றும் குரூப்-2 (பட்டதாரி தகுதி) தேர்வுக்குரிய காலியிட பட்டியல்கள் வந்துள்ளன.இதுதவிர, குரூப்-4 நிலையில், அரசின் பல்வேறு துறைகளுக்கு, 5,000 பேரை தேர்வு செய்யவும் உத்தரவு வந்துள்ளது. தட்டச்சர்கள், இளநிலை உதவியாளர் உட்பட பல்வேறு பணிகளுக்கு, இவர்கள் தேர்வு செய்யப் படுவர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், போட்டித் தேர்வில் பங்கேற்கலாம்.

இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியிடப் படும்.ஏற்கனவே, வெளியான வி.ஏ.ஓ., மற்றும் குரூப்-2 தேர்வு முடிவில் இடம் பெற்றவர்களுக்கு, விரைவில் பணி நியமனம் வழங்கப் படும். இந்தத் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட மாட்டாது. டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகள், முடிவுகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உடனுக்குடன் வெளியிடுவதுடன், தேர்வு முடிவிற்குப் பின், அதற்கான விடைகளையும் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட உள் ளது.இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன.








தினமலர்

Thursday, February 23, 2012

தையல், ஓவிய ஆசிரியர்கள்: பட்டியலில் விடுபட்டவர்கள் முறையிட வாய்ப்பு

சென்னை, பிப்.22: தமிழகத்தில் காலியாக உள்ள தையல், ஓவியம் மற்றும் இசை ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு, பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.
 இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 "தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் 90 தையல் ஆசிரியர்கள் , 309 ஓவிய ஆசிரியர்கள் மற்றும் 39 இசை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான காலியிட அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
 இந்த காலியிடப் பணிகள் அனைத்தும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. ஜனவரி 31-ம் தேதி நிலவரப்படி தகுதியுள்ள பதிவுதாரர்களின் பெயர், பதிவு மூப்பு விவரங்கள், பாடவாரியாகவும், இனவாரியாகவும் தமிழக அரசின் இணையதளத்தில்(www.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
 மேலும் இணையதளத்தில் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் இனசுழற்சி விவரங்கள் ஆகியவற்றையும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
 மேலும் மனுதாரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
 பரிந்துரைப் பட்டியலில், பதிவு மூப்பு தேதிக்குள் தகுதியுள்ள மனுதாரர்கள் பெயர்கள் யாருடையதேனும் விடுபட்டு இருப்பின், அவர்கள் தாங்கள் பதிவு செய்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை உரிய ஆதாரத்துடன் வரும் 27-ம் தேதிக்குள் நேரில் தொடர்பு கொள்ளலாம்.
 அந்தத் தேதிக்குப் பின்னர் தொடர்பு கொள்ளும் மனுதாரர்களின் கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு :விரைவில் வெளியாகிறது அறிவிப்பு

சென்னை, பிப்.21:
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, தகுதித் தேர்வு நடத்தும் நாள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின்போது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், புதியதாக ஆட்சிக்கு வந்துள்ள அதிமுக அரசு, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை காரணம் காட்டி, ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப் போவதாக அறிவித்தது.
இதுகுறித்து, சட்டப்பேரவையில் முதல்வர் பேசுகையில், இந்த ஆண்டு 50,000 ஆசிரியர்கள் நியமிக்கப் போவதாக அறிவித்தார். 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவாகவும், 6 முதல் 8ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவாகவும் இந்த தகுதித் தேர்வுகள் நடக்க உள்ளது. இந்த தேர்வை எப்படி நடத்துவது என்பதில் இதுவரை குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், இப்போது தகுதித் தேர்வு நடத்துவதற்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து, தகுதித் தேர்வு குறித்த முழு விவரம் அரசு கெசட்டில் வெளியிட உள்ளனர்.
இதன்படி தமிழ், ஆங்கிலம், சுற்றுச்சூழல், குழந்தைகள் மேம்பாடு ஆகியவை பொதுவாக வைக்கப்படுகிறது. இவற்றில் இருந்து இடம் பெறும் கேள்விகளுக்கு எல்லோரும் விடை அளிக்கவும், பின்னர் பாடங்களுக்கு ஏற்ப தனித்தனியாக விடை அளிக்கும் வகையிலும், தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை தெரிவித்தது. ஆனால், என்சிஇஆர்டி நடத்தும் தேர்வு விதிகளை அடிப்படையாக கொண்டே தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
எனவே, என்சிஇஆர்டி நடத்தும் தேர்வு போலவே ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வை நடத்த உள்ளது. ஆனால், ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக கேள்விகள் அமையா மல் 3 பிரிவுகளில் பாடங் களை பிரித்து அதற்குரிய கேள்விகள் இடம் பெற உள்ளன. அதனால் வரலாறு, புவியியல் பாடங்களை படித்தவர்களும் கணக்கு, அறிவியல் பாட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். பட்டதாரிகள் உஷாராக இருக்க வேண்டும்.

Friday, February 17, 2012

எத்தனை காலம் தான் ஏமாற்றுவர் இந்த நாட்டிலே?

சென்னை: ""கல்வித் துறையின் 25 ஆண்டுகால வரலாற்றில், முதன் முறையாக இந்த ஆட்சியில், ஒரே ஆண்டில் 53 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தி சாதனை செய்யப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி பேசினார்.
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் சார்பில், "குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்' குறித்து, ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்சி இயக்குனர், தேவராஜன் வரவேற்றார்; அனைவருக்கும் கல்வி இயக்க, மாநிலத் திட்ட இயக்குனர், முகமது அஸ்லம் முன்னிலை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி, சட்டம் தொடர்பான விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை, துறைச் செயலர் சபீதா பெற்றுக் கொண்டார்.

வரலாற்று சாதனை: விழாவில், அமைச்சர் பேசியதாவது: சட்டசபை தேர்தலின் போதே, கல்வித் துறை வளர்ச்சிக்காக, பல்வேறு திட்டங்களை முதல்வர் வெளியிட்டார். தமிழகம், 100 சதவீத கல்வி அறிவை எட்ட, பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். கல்வித் துறையின் 25 ஆண்டுகால வரலாற்றில், முதன் முறையாக இந்த ஆட்சியில், அதுவும் ஒரே ஆண்டில் 53 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக ஏற்படுத்தி சாதனை செய்யப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளில், 1 லட்சத்து 3 ஆயிரத்து 51 ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் தான், புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குற்றச்சாட்டு: கட்டாயக் கல்விச் சட்டம், 2009ல் வந்துவிட்டாலும், முந்தைய தி.மு.க., ஆட்சியில், முதல் இரண்டு ஆண்டுகள் திட்டத்தைச் செயல்படுத்த, சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபிறகு தான், சட்டத்தை முழுமையாக அமல்படுத்த, முதல்வர் நடவடிக்கை எடுத்தார்.

கண்டிப்பு தேவை: ஆசிரியர் - மாணவர்களிடையே, இடைவெளி இருக்கக் கூடாது. மாணவர்களிடம் அன்பாகப் பழகுங்கள்; அதே நேரத்தில், கண்டிப்பாகவும் இருங்கள். மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்க, முப்பருவ முறை கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டாயக் கல்விச் சட்டத்தில், பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி, ஏராளமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கட்டாயக் கல்விச் சட்டம் குறித்து, ஒன்றரை லட்சம் ஆசிரியர்களுக்கு, விரைவில் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு ( மேடைக்கு மேடை இதையே)அமைச்சர் சிவபதி பேசினார்.

சவால்களை சந்திக்கிறோம்: சபீதா பேசும்போது, ""பல மாற்றங்களையும், சவால்களையும் கல்வித்துறை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கட்டாயக் கல்விச் சட்டம் தொடர்பாக, 12 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. சட்டத்தில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகத்தில், உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.



கல்வி கொள்ளையர்களுக்கு சாட்டையடி கொடுக்க வருகிறது உடும்பன்!

சினிமாவில் சில படங்கள் சமூக அக்கறையோடும், பொறுப்போடும் படங்களை படங்களாக காட்டாமல், பாடங்களாக காட்டும் பட வரிசையில் சேரவுள்ள புதியபடம் உடும்பன். 17ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இப்படம் குறித்து, அப்படத்தின் டைரக்டர் பாலன் என்ன சொல்கிறார் என்று நீங்களே கேளுங்கள். நான் இதுவரை 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை எடுத்துள்ளேன். 2006-ல் நாகரீக மோமாளி என்ற படத்தை எடுத்தேன். அதன் பிறகு இப்போது உடும்பன் படத்தை எடுத்துள்ளேன். கதையின் களம், மதுரை கருவேலங்காட்டு பகுதியில் இருந்து ஆரம்பிக்கிறது. கிராமத்தில் வசிக்கும் ஒருவர் தன் மகனை திருடனாகவே தயார் படுத்துகிறார். கன்னக்‌கோல் போட்டு திருடுவது, உடும்பை வைத்து திருடுவது தான் அவன் வேலை. அப்படி ஒருநாள் திருட போன வீட்டில் அவனுக்கு ஒன்றும் சிக்கவில்லை. வீட்டில் பணம் ஏதும் இல்லையா என்று அந்த வீட்டு உரிமையாளரிடம் கேட்க, அதற்கு அவர் இப்போது தான் பிள்ளைகளின் படிப்புக்கு கட்டணம் என்ற பெயரில் பள்ளிக்கூடம் கொள்ளையடித்தது என்று கூறுகிறார்.

இதைக்கேட்டதும் படத்தின் நாயகன் மனதிலும் பள்ளிக்கூடம் தொடங்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. இப்படி கதை போகும்போது, ஹீரோவின் அண்ணன் கூலிப்படை தலைவன் போல் செயல்படுகிறான். ஹீரோ ஜெயிலுக்கு போக அண்ணன் கைக்கு பள்ளிக்கூடம் போகிறது. இப்படி ஒரு கதை அமைத்து படத்தில் என்ன பெருசா சொல்லியிருக்கிறோம் என்றால், சில வருடங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து, சரியான புள்ளி விவரங்களை எடுத்து, அதை இப்படத்தில் சொல்லியிருக்கிறோம்.

கிராமத்து பிள்ளைகளுக்கு சரியான கல்வி கிடைத்ததா, அவர்களின் கல்வி முறை எப்படி இருக்கு, வியாபாரமான கல்வியை அனைவருக்கும் வழங்குவது எப்படி உள்ளிட்ட விழிப்புணர்வுகளை எங்களால் முடிந்த வரை இப்படத்தில் பதிவு செய்துள்ளோம் என்றார்.

Thursday, February 16, 2012

எஸ்.எஸ்.ஏ., ஆசிரியர்களை நியமிக்கும் பணி தீவிரம்

சென்னை, பிப். 15: அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் ஆசிரியர்களை நியமிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆரம்பமாக, புதன்கிழமை கடலூர் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்தவர்களுக்கு பணி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் (எஸ்.எஸ்.ஏ.) ரூ.5 ஆயிரம் மாத ஊதியத்தில் தாற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக மாவட்டந்தோறும் ஆசிரியர்கள் அடங்கிய பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன. முதன்மை கல்வி அலுவலரின் மேற்பார்வையில் இந்த பட்டியல்கள் முடிவு செய்யப்பட்டன.ஓவியம், தையல் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் பணியிடங்களுக்கு அடிப்படைத் தகுதி என்பது வேலைவாய்ப்புப் பதிவு மூப்பு இல்லையென்றாலும் அதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி மாவட்டந்தோறும் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு இருந்தன.சென்னையில் நிகழ்வு: ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அளிக்கப்பட்ட பட்டியல்களின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 
இதற்கான நிகழ்வு, சென்னை எழும்பூரில் உள்ள மாநிலப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது.முதல் நாளில், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பணிநியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 200-க்கும் மேற்பட்டோருக்கு உத்தரவுகள் அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அடுத்தடுத்த நாள்களில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். 

ஏமாற்றம்: வேலைவாய்ப்புப் பணி மூப்பு அடிப்படையை தகுதியாகக் கொண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படாத காரணத்தால் பட்டதாரிகள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மத்திய அரசின் திட்டமான "அனைவருக்கும் கல்வித் திட்டம்' மாநிலத்தில் செயல்படுத்தப்படும் வரை மட்டுமே அந்தத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கும். மேலும், அவர்களுக்கு மாத ஊதியம் வெறும் ரூ.5 ஆயிரம். இந்த நிலையில், ஆசிரியர் நியமனத்தில் வேலைவாய்ப்புப் பதிவு மூப்பை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தினமணி:

Wednesday, February 15, 2012

உடற்கல்வி, ஓவியம், தையல் ஆசிரியர்கள் பதிவுமூப்பு

மதுரை :ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள காலியிடங்களுக்கு உடற்கல்வி, ஓவியம், தையல் சிறப்பு ஆசிரியர்கள் மாநில பதிவுமூப்பு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கல்வி ஆசிரியர்: 31.1.2012 வரை பதிவு செய்துள்ள அனைத்து முன்னுரிமை உள்ளவர்கள்.
முன்னுரிமை இல்லாதவர்களில் (பெண்கள்) எஸ்.சி., எஸ்.டி., 31.1.2012 வரையும், எஸ்.சி., அருந்ததியினர் 31.12.2006,
எஸ்.சி., 30.4.2006,
எம்.பி.சி., 31.7.2006,
பி.சி., 31.12.2003,
பி.சி.,முஸ்லிம் 31.7.2012,
 பகிரங்க போட்டியாளர் 31.7.2007 வரை பதிவு செய்துள்ளவர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னுரிமை இல்லாதோரில் (பொது) எஸ்.சி., எஸ்.டி., 31.1.2012,
எஸ்.சி., அருந்ததியினர் 31.12.2008,
எஸ்.சி., 31.12.2003,
 எம்.பி.சி., 31.12.2003,
பி.சி., 31.12.2001,
பகிரங்க போட்டியினர் 31.12.2003,
பி.சி.,முஸ்லிம் 31.1.2012 வரை சிபாரிசு செய்யப்பட்டுள்ளனர்.

ஓவிய ஆசிரியர்: 31.1.2012 வரை பதிவு செய்துள்ள அனைத்து முன்னுரிமை உள்ளவர்கள்.
எஸ்.சி., எஸ்.டி., 31.12.1997,
எஸ்.சி., அருந்ததியினர் 31.12.2003,
எம்.பி.சி., பி.சி., மற்றும் பகிரங்க போட்டியாளருக்கு 31.12.1992,
பி.சி.,முஸ்லிம் 31.12.1995 வரை பதிவு செய்தவர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளார்.

தையல் ஆசிரியர்: 31.1.2012 வரை பதிவு செய்துள்ள அனைத்து முன்னுரிமை உள்ளவர்கள்.
எஸ்.சி., எஸ்.டி., 31.12.2004,
 எஸ்.சி., 31.12.1991,
எம்.பி.சி., பி.சி., பகிரங்க போட்டியாளருக்கு 31.12.1986 வரை பதிவு செய்துள்ளவர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட தகுதியுள்ளோரில் இன்றுவரை பதிவேட்டில் இருப்பவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் எனில் இன்றும் (பிப்., 15), ஓவியம், தையல் ஆசிரியர்கள் எனில் நாளையும் (பிப்., 16),
தங்கள் கல்வித்தகுதியுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று பதிவை சரிபார்த்துக் கொள்ளலாம் என, உதவி இயக்குனர் பா.முருகேசன் தெரிவித்துள்ளார்.

நவீன வசதிகளுடன் அரசு ஆரம்பப் பள்ளி!

மீனாட்சிவலசு அரசு ஆரம்பப் பள்ளி, தண்ணீரைச் சுத்திகரிக்கும் கருவி.
காங்கயம்: ஒரு பள்ளிக்கூடம் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு பல பள்ளிகளை உதாரணம் காட்டலாம். ஆனால், எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒருசில பள்ளிகளைத் தான் உதாரணம் காட்ட முடியும்.  ÷அத்தகைய பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்கிறது, காங்கயம் ஒன்றியம், பாப்பினி ஊராட்சியைச் சேர்ந்த மீனாட்சிவலசு கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்பப் பள்ளி.  ÷இப் பள்ளியில 1 முதல் 5-ம் வகுப்பு வரை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மீனாட்சி வலசு கிராமத்தின் நுழைவாயிலில் இயற்கையான சூழலில் இப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி மாணவ மாணவிளுக்கு தனியார் பள்ளிகளைப் போன்ற சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.  ÷பள்ளி முழுவதும் தரையில் டைல்ஸ் பதிக்கப்பட்டு அழகாகக் காட்சியளிக்கிறது. மாணவ மாணவிகள் கணினி கற்பதற்கென தடுப்பு அமைக்கப்பட்டு, சிறிய அறை உருவாக்கப்பட்டுள்ளது.  ÷இயற்கையான சூழலில் அமைந்துள்ள இப்பள்ளியில், மின் விசிறி தேவைப்படாத நிலையிலும் அந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது. மாணவர்களுக்குத் குடிநீரைச் சுத்திகரித்து வழங்குவதற்கு, தேவையான கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. அந்த நீரில்தான் மாணவர்களுக்கான உணவும் சமைக்கப்படுகிறது.  மேலும், வெப்பமானி மூலம் காலை, மதியம், மாலையில் வெப்ப அளவை பதிவு செய்து, அறிவிப்பு பலகையில் எழுதிவைக்கின்றனர்.  பள்ளியில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டிருப்பதற்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் ஒரு காரணம் என்றால், தலைமை ஆசிரியர் எஸ்.அமுதவல்லி, ஆசிரியர் ஆ.கனகராஜ் ஆகியோரின் அர்ப்பணிப்பும், கல்விக்குழு உறுப்பினர்களின் பங்களிப்பும் இன்னொரு காரணம் என்கின்றனர் கிராம மக்கள்.  சிறப்பாக கல்வி கற்பிக்கப்படுவதால் கடந்த ஆண்டுகளில் 15-க்கும் குறைவாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, இப்போது 30-ஐ தாண்டியுள்ளது.  
இது குறித்து முன்னாள் கல்விக்குழு உறுப்பினரும், பாப்பினி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவருமான டி.சிவகுமார் கூறும்போது, ""இந்தப் பள்ளியில் கணினி, குடிநீர்க் குழாய், தரைத்தளத்துக்கு டைல்ஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மக்களின் பங்களிப்போடுதான் செய்து முடித்தோம்'' என்றார்.  
தற்போதைய கல்விக்குழு தலைவரும், பாப்பினி ஊராட்சி வார்டு உறுப்பினருமான டி.ராஜேஸ்வரி கூறும்போது, ""பள்ளிக்குச் சுற்றுச்சுவர், மாணவர்களுக்கு விளையாட்டுக் கருவிகள் உள்ளிட்ட வசதிகளையும் செய்து தரத் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
இந்தப் பள்ளியைப் போன்று அனைத்து அரசுப் பள்ளிகளும் இருந்துவிட்டால், மாணவர்கள் பாதியிலேயே பள்ளியிலிருந்து விலகுவது குறையும்; கல்வித் தரமும் உயரும்.  ÷இதுபோன்ற வசதிகளை அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் செய்து தர அரசும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக 8 லட்சம் விண்ணப்பங்கள் : தேர்வுக் கட்டணம் ரூ.500

மே இறுதியில் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக, எட்டு லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. விண்ணப்பத்தின் விலை, 50 ரூபாயாகவும், தேர்வுக் கட்டணம், 500 ரூபாயாகவும் நிர்ணயிக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வும், அதன் பின், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வும் நடத்தப்பட உள்ளது. ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், இரண்டாம் ஆண்டு படிப்பவர்கள், பி.எட்., முடித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்களுடன், 2010, ஏப்., 1ம் தேதிக்குப் பின் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் அனைவரும், தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

5 லட்சம் பேர்; ரூ.27 கோடி வருவாய் : குறைந்தது, ஐந்து லட்சம் முதல், அதிகபட்சம், ஆறு லட்சம் பேர் வரை தேர்வில் பங்கேற்பர் என எதிர்பார்ப்பதாகவும், கடைசி நேரத்தில், விண்ணப்பங்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காக, எட்டு லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்களை விற்பனை செய்ய, தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. விண்ணப்பத்தின் விலை, 50 ரூபாயாகவும், தேர்வுக் கட்டணம், 500 ரூபாயாகவும் இருக்கும் என்றும், தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஐந்து லட்சம் பேர் விண்ணப்பித்தால் கூட, தேர்வு வாரியத்திற்கு, 27.50 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

பாடத்திட்டம்: இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் என, இரு பிரிவினருக்கு, தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவினருக்கும், தலா, 150 மதிப்பெண்களுக்கு, பதில் தேர்வு செய்யும் முறையில் தேர்வு நடத்தப்படும். தமிழ், ஆங்கிலம், உளவியல், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ், ஒவ்வொன்றில் இருந்தும் தலா, 30 மதிப்பெண்கள் வீதம், 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில், தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களாக, 90 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஒப்புதல்: பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் ஒப்புதல் கிடைத்துவிடும் எனக் கூறப்படுகிறது. அனுமதி கிடைத்ததும், தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்.

Saturday, February 11, 2012

டி.என்.பி.எஸ்.சி., முறைகேடு: பணம் கொடுத்த ஊழியர்களுக்கு"கல்தா'

சிவகங்கை:டி.என்.பி.எஸ்.சி.,முறைகேடு புகாரால், 1995க்கு பின் முறைகேடாக பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு"கல்தா' கொடுக்க ஆணையம் முடிவு செய்து உள்ளது. டி.என்.பி.எஸ்.சி.,யில் குரூப் 2, 4 தேர்வுகள் மூலம் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களிடம் பணத்தை கொடுத்து, ஏராளமானவர்கள் வேலை பெற்றதாக புகார் எழுந்தது. டி.என்.பி.எஸ்.சி.,ஆணைய தலைவர் செல்லமுத்து, உறுப்பினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். அங்கு கிடைத்த ஆவணங்களின் படி, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதி, வேலை பெற்ற ஊழியர்களில் முறைகேடாக பணம் கொடுத்து பெற்றவர்களின் பட்டியல் சிக்கியுள்ளது.
இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி., ஆணைய தலைவர் செல்லமுத்து ராஜினாமா செய்தார். புதிய தலைவராக நடராஜ் பொறுப்பேற்றார்.
இவர், கடந்த காலங்களில் டி.என்.பி.எஸ்.சி.,யில் நடந்த முறைகேடு குறித்து விசாரித்து வருகிறார். அந்தந்த மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் முக்கிய ஆவணங்களை சேகரித்து வருகிறார்.
"கல்தா': இந்த விசாரணையில், 95ம் ஆண்டு முதலே டி.என்.பி.எஸ்.சி.,யில் பணத்தை கொடுத்து முறைகேடாக பலர் பணியில் சேர்ந்த விவரம் தெரிய வந்துள்ளது. அவர்கள் குறித்த பட்டியலையும் டி.என்.பி.எஸ்.சி.,சேகரித்து வருகிறது. இதனால், தமிழக அளவில், அரசு அலுவலகங்களில் பணம் கொடுத்து முறைகேடாக பணியில் சேர்ந்த ஊழியர்களிடையே "கிலி' ஏற்பட்டுள்ளது. ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில், 95ம் ஆண்டு முதல் இந்த முறைகேடு நடந்திருப்பதாக தெரிகிறது. அதன்படி, அக்கால கட்டத்தில் இருந்து முறைகேடாக பணம் கொடுத்து பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு "கல்தா' கொடுக்க ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது. முறைகேடாக பணியில் சேர்ந்தவர்கள் நீக்கம் செய்யப்படலாம், என்றார்.

தேர்வுத்துறையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தேக்கம்

அரசு தேர்வுத்துறையில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தேக்கம் அடைந்துள்ளன. பணியாளர் பற்றாக்குறை காரணமாக, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலான விண்ணப்பங்கள், சரிபார்க்கப்படாமல் உள்ளன.

குவியும் சான்றிதழ்:தமிழக அரசின் எந்த அரசுத்துறை பணிகளாக இருந்தாலும், அவர்களின் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை, உண்மைத்தன்மை அறிவதற்காக, தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.இந்த சான்றிதழ்களை, தேர்வுத்துறையில் உள்ள வேறொரு அசல் சான்றிதழ்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, சரியாக இருந்தால், "உண்மையான சான்றிதழ்' என, தேர்வுத்துறை தெரிவிக்கும். இதில், பல போலியான சான்றிதழ்களும் பிடிபடுகின்றன.

பணியாளர் பற்றாக்குறை:முந்தைய ஆட்சியில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், 40 ஆயிரம் ஆசிரியர்களும்; முந்தைய ஆட்சியில் கடைசியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் படி, இந்த ஆட்சியில், 5,000 ஆசிரியர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர். சரிபார்ப்புக்காக இவர்களின் சான்றிதழ்கள், தேர்வுத்துறையில் தினமும் மலைபோல் குவிந்து வருகின்றன.சரிபார்ப்பு பணிகளுக்காக, ஏற்கனவே, 5 பிரிவுகள் இயங்கி வந்தன. தற்போது, மேலும் ஒரு பிரிவு கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவுகளில், தலா, 6 பேருக்கு பதிலாக, 4 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.கடுமையான பணியாளர் பற்றாக்குறை காரணமாக, பணிகள் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன. தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் மட்டும், 90 இடங்கள் காலியாக இருக்கின்றன.

நியமன நடவடிக்கை:இதுகுறித்து, துறை வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த 1998ல் இருந்து நடந்த தேர்வுகளுக்கான சான்றிதழ்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் பணிகளில் சேர்பவர்கள், பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றனர். இவர்களின் சான்றிதழ்களை தேடிப் பிடித்து, சரிபார்த்து வழங்குவது சிரமமாக உள்ளது. மேலும், சான்றிதழ்களை தொட்டாலே தூள், தூளாக ஒடிந்துவிடும் அளவிற்கு சேதம் அடைந்துள்ளன.

சான்றிதழ் சரிபார்ப்பு கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அப்படியே கிடக்கின்றன. தற்போது, மேலும் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், பணியில் சேர்ந்து வருகின்றனர். இவர்களின் சான்றிதழ்கள் வரும்போது, பணிச்சுமை மேலும் அதிகரிக்கும். சான்றிதழ் சரிபார்ப்பு பிரிவில், போதிய பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாற்றாந்தாய் மனப்பான்மை:தேர்வுத்துறையை, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசு பார்ப்பதாக, துறை அதிகாரிகள் கூறுகின்றனர். துறையில் உள்ள எந்தப் பிரச்னைகளையும், உயர் அதிகாரிகளோ, அமைச்சரோ கண்டுகொள்வது கிடையாது என்றும் புலம்புகின்றனர்.
மேலும், 200க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப, முந்தைய ஆட்சியில் கடைசிவரை நடவடிக்கை எடுக்கவில்லை; இந்த ஆட்சியிலும், இதுவரை நடவடிக்கை இல்லை.வருகிற அமைச்சர்களும், அதிகாரிகளும், "நடவடிக்கை எடுக்கப்படும்...' என, கூறுகின்றனரே தவிர, துறையை சுத்தமாக கண்டுகொள்வதில்லை என்றும், ஊழியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

பட்டதாரி ஆசிரியர் பணி: தகுதித் தேர்வை தடை செய்ய முடியாது

சென்னை:சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கும், தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என, பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு சங்கத்தின் செயலர் முருகதாஸ் தாக்கல் செய்த மனு:
ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வை நடத்துவது தொடர்பாக, கடந்த ஆண்டு நவம்பரில், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. கட்டாயக் கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான நியமனத்தில், பலருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் முடித்துவிட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களும், தகுதித் தேர்வை எழுத வேண்டும் எனக் கூறப்படுகிறது.
எனவே, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு, ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு தகுதித் தேர்வை நிர்ணயிக்கும் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். மாநில அளவிலான வேலைவாய்ப்பு சீனியாரிட்டி அடிப்படையில், எங்கள் சங்க உறுப்பினர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

சட்டத்திலிருந்து அரசு விலக முடியாது: மனுவை, நீதிபதி சந்துரு விசாரித்தார். அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் திக் விஜய பாண்டியன் ஆஜரானார். மனுவை விசாரித்த, நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு:
பாதிக்கப்படுபவர்கள் யாரும், கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவில்லை. இவர்கள் பிரச்னையை, சங்கம் எப்படி எடுக்க முடியும் என தெளிவாக இல்லை. பதிவு செய்யப்பட்ட அமைப்பு தான் சங்கம். பாதிக்கப்படுவர்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தால் ஒழிய, இந்த விஷயங்களை கோர்ட் எடுக்க முடியாது.எனினும், குறிப்பிட்ட முறையிலான தேர்வை, பார்லிமென்டில் கொண்டு வரப்பட்ட சட்டம் நிர்ணயிக்கும் போது, அந்த நடைமுறையில் இருந்து மாநில அரசு விலகிச் செல்ல வாய்ப்பில்லை. கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் ஆசிரியர்கள் நியமனத்துக்கு தகுதித் தேர்வை, பல்கலைக் கழக மான்ய குழு நிர்ணயித்துள்ளது. இது செல்லும் என, சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது.

கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ள உத்தரவுகள், தமிழக அரசின் அரசாணையில் விளக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களை, தமிழக அரசு பின்பற்ற வேண்டும். மேலும், ஒரு பணியில் நியமிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்களை வடிகட்டுவது என, அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது.

காளான் நிறுவனங்களால் தான் இந்த நிலை:மாநிலம் முழுவதும் காளான்கள் போல் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள் முளைத்திருப்பதால், தேர்வு தரத்தை கொண்டு வருவது தவிர்க்க முடியாதது. பழைய கொள்கைப்படி, தேர்வு முறைப்படி தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதால், தங்களை வேறு விதமாக கருத வேண்டும் என, மனுதாரர் கோர முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் தேர்வெழுத 66,957 பேர் தகுதி

சென்னை, பிப்.10: தமிழகம் முழுவதும் 34 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு எழுத 66,957 பேர் தகுதி பெற்றுள்ளனர்.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://trb.tn.nic.in  என்ற இணையதளத்தில் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண்ணைக் கொண்டு இந்தத் தேர்வுக்குத் தகுதியுள்ளதா என்பதை அறிந்துகொள்ளலாம்.
தமிழகம் முழுவதும் 34 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. மொத்தம் 34 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு சுமார் 68,500 பேர் விண்ணப்பித்திருந்தனர்.கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தேதி முதல் இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன. பரிசீலனையில் சுமார் 1,500 பேர் இந்தத் தேர்வு எழுதுவதற்கான தகுதியைப் பெறவில்லை எனத் தெரியவந்தது.
இதையடுத்து, 66,957 பேர் இந்தத் தேர்வு எழுதத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, அந்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தகுதி பெறாதவர்களுக்கு, அவர்கள் ஏன் தகுதி பெறவில்லை என்றும் காரணமும் கூறப்பட்டுள்ளது.உதவி தொடக்கக் கல்வி அலுவலர் எழுத்துத் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, தகுதியுள்ள அனைவருக்கும் ஹால் டிக்கெட் அனுப்பப்பட உள்ளது.

Thursday, February 9, 2012

2012-ல் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு 18 ஆயிரமாக அதிகரிப்பு

சென்னை, பிப். 6:  முதல்வர் ஜெயலலிதாவின் புதிய அறிவிப்புகளைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 201 ஆக அதிகரித்துள்ளது.தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க, புதிதாக ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியிடங்கள் என சுமார் 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 24 ஆயிரம் ஆசிரியர்கள் இந்த ஆண்டு நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.அதன் பிறகு, தரம் உயர்த்தப்பட்ட 1,049 நடுநிலைப் பள்ளிகளுக்கு என கூடுதலாக 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டது.
இதையடுத்து, இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை 18,311 ஆக அதிகரித்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர்கள் எவ்வாறு தேர்வு? இந்த ஆண்டு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,895 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களை எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலாகியுள்ளதன் மூலம் இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தகுதித் தேர்வில் வெற்றி பெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், தகுதித் தேர்வில் வெற்றி பெறும் பட்டதாரி ஆசிரியர்களை எவ்வாறு தேர்வு செய்வது என்பது தொடர்பாக தமிழக அரசு இதுவரை உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை.
மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலோ, எழுத்துத் தேர்வின் மூலமாகவோ அவர்களை நியமிப்பது தொடர்பாக அரசு விரைவில் ஆணை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இடைநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரை உச்ச நீதிமன்ற வழக்கு முடியும் வரை அவர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஆசிரியர் பட்டதாரிகள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் என இந்த ஆண்டு நடைபெறும் தேர்வை சுமார் 5 லட்சம் பேர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு தேதி ஆகியவற்றை இறுதிசெய்யும் பணியில் தமிழக அரசு இப்போது ஈடுபட்டுள்ளது. மே அல்லது ஜூன் மாதம் தகுதித் தேர்வு நடைபெறலாம் எனத் தெரிகிறது.தேர்வு செய்யப்படும் 
 
ஆசிரியர்களின் எண்ணிக்கை
முதுநிலை பட்டதாரிஆசிரியர்கள்     -    2,895 
பட்டதாரிஆசிரியர்கள்    -    18,311
இடைநிலைஆசிரியர்கள்    -    5,451 
ஆசிரியர்பயிற்றுநர்கள்    -    634
சிறுபான்மைமொழிப்பாடஆசிரியர்கள்    -    32
உடற்கல்விபயிற்சி ஆசிரியர்கள்    -    687
தையல் ஆசிரியர்கள்    -    47
இசை ஆசிரியர்கள்    -    41
ஓவிய ஆசிரியர்கள்    -    78
விவசாய ஆசிரியர்கள்    -    25
மொத்தம்    -    28,201

முழுநேர சிறப்பு ஆசிரியர் பதிவுமூப்பு பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும்

சென்னை, பிப்.8-


அரசு பள்ளிக்கூடங்களில் முழுநேர சிறப்பு ஆசிரியர் பதவிக்கான உத்தேச மாநில பதிவுமூப்பு பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளது. வழக்கம்போல் ஒரு காலி இடத்திற்கு 5 பேர் என்ற அடிப்படையில் பதிவுதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


சிறப்பு ஆசிரியர்கள்


அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி) தேர்வு செய்வதற்கான பணிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது இறுதி கட்ட பணிகள் அதாவது, வேலைவாய்ப்பு பதிவுமூப்பு எண் (சீனியாரிட்டி நம்பர்) சரிபார்த்தல், இடஒதுக்கீடு, பள்ளிகள் ஒதுக்குதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த வார வாக்கில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பகுதி நேர சிறப்பு ஆசிரியர் பதவிக்கு தேர்வுசெய்யப்படுவோருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.


முழுநேர பதவி


பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி ஒருபுறம் நடந்து வரும் நிலையில், முழுநேர சிறப்பு ஆசிரியர்களை மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் நியமிப்பதற்கான பணிகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. முழுநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் (தோராயமாக ரூ.15 ஆயிரம்) வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


முழு நேர பணி அடிப்படையில் 1,029 உடற்கல்வி ஆசிரியர்களும், 309 ஓவிய ஆசிரியர்களும், 90 தையல் ஆசிரியர்களும், 39 இசை ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். முதல்கட்டமாக, மாவட்ட அளவிலான பதிவுமூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் தகுதி இருந்தும் பெயர் விடுபட்டவர்கள் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ள காலஅவகாசம் அளிக்கப்பட்டது.


ஓரிரு நாளில் பதிவுமூப்பு பட்டியல்


இதையடுத்து, மாவட்ட பதிவுமூப்பு பட்டியல் இறுதி செய்யப்பட்டு மாநில அளவிலான பதிவுமூப்பு பட்டியல் தயாரிப்பதற்காக சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தலைமை அலுவலகத்திற்கு இ-மெயில் மூலமாக அனுப்பப்பட்டது.


மாநில பதிவுமூப்பு பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், உத்தேச பதிவுமூப்பு பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஆசிரியர் வாரியத்திடம் ஒப்படைப்பு


மாநில தகவல் மையத்தின் அந்தந்த மாவட்ட இணையதளத்தில் பதிவுமூப்பு பட்டியலை பார்த்து தெரிந்து கொள்ளலாம். உத்தேச பதிவுமூப்பு பட்டியல் இறுதி செய்யப்பட்டு அதன் பிறகு அந்த பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.


இதைத்தொடர்ந்து, பதிவுதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் சிறப்பு ஆசிரியர் பணிக்கு தேர்வுசெய்யப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு கவுன்சிலிங் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ நேரடியாக பணி நியமன ஆணை வழங்கப்படும்.


டி.ஆர்.பி தர எண் அடிப்படையில் சீனியாரிட்டி

திருநெல்வேலி: டி.ஆர்.பி தர எண் அடிப்படையில் சீனியாரிட்டி வழங்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நெல்லை ஜங்ஷன் மதிதா இந்து மேல்நிலைப் பள்ளியில் தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில்,
தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து வகை பட்டதாரி ஆசிரியர்களையும் ஒரே அலகாக கருத வேண்டும். டி.ஆர்.பி தர எண் அடிப்படையில் பதவி உயர்வு பெறுவதற்கு கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் பொது இட மாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும்.தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டி.ஆர்.பி தர எண் அடிப்படையில் சீனியாரிட்டி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மே இறுதியில் ஆசிரியர் தகுதித்தேர்வு ?

ஆசிரியர் தகுதித் தேர்வா, நேரடி போட்டித் தேர்வா என்ற, பல மாத குழப்பம், ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. மே இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த, தமிழக அரசு ஒப்புதல் அளித்த நிலையில், இதுகுறித்த விளம்பரத்தை விரைவில் வெளியிடும் பணியில், ஆசிரியர் தேர்வு வாரியம் இறங்கி உள்ளது.
யாருக்கு அனுமதி?
இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியதாவது:
மே மாத இறுதியில், ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த உள்ளோம். இதற்கான அறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும்.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதி கொண்ட அனைவரும், இத்தேர்வில் பங்கேற்கலாம். ஏப்., 1, 2010க்கு பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களும், இத்தேர்வில் பங்கேற்க வேண்டும்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும், தனியார் பள்ளிகளில், இந்த வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களும் எழுத வேண்டும்.
ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும், பி.எட்., படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கேள்வித்தாள் விவரம்
இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு கேள்வித்தாள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வி பாடத் திட்டங்கள் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கேள்வித்தாள், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்கள் அடிப்படையிலும் இருக்கும். பொது அறிவை சோதிக்கும் வகையிலான கேள்விகளும் இடம் பெறும், என கூறப்படுகிறது.
போட்டித் தேர்வு?
மே இறுதியில் தேர்வு நடந்ததும், உடனடியாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு, அடுத்த போட்டித் தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து, முடிவு எடுக்கப்படவில்லை.
ஆகஸ்டுக்குள் முடிக்க திட்டம்
நடப்பு கல்வியாண்டில், 28 ஆயிரத்து 201 ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களில், 2,895 முதுகலை ஆசிரியர்களுக்கு ஒரு போட்டித் தேர்வும், மற்ற ஆசிரியர்களுக்கு இரு வகையான தேர்வும் (தகுதித் தேர்வு மற்றும் முக்கிய போட்டித் தேர்வு) நடத்தப்படும்.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்குள், அனைத்து தேர்வுப் பணிகளையும் முடித்து, இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள் அடுத்த கல்வியாண்டில், காலாண்டுத் தேர்வுக்கு முன்னதாக பணியில் சேர்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு வாரியத்தின் மொத்த பணியாளர்கள் 14 பேர்!
ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் முக்கியப் பொறுப்பு வாய்ந்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிலைமை, மிகவும் பரிதாபமாக உள்ளது. வாரியத்தில், அதிகாரிகளைத் தவிர்த்து, அலுவலக பிரிவுகளில் வெறும், 14 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
அனுமதிக்கப்பட்ட மொத்த இடங்களில்; மூன்று உதவியாளர் பணியிடங்களும், ஒரு இளநிலை உதவியாளர் பணியிடமும், ஒரு சுருக்கெழுத்தர் பணியிடமும் காலியாக உள்ளன.
இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதுடன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களே இல்லாத குறையையும் முதல்வர் போக்க வேண்டும் என்று தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது.

Wednesday, February 8, 2012

பள்ளி தேர்வில் துள்ளி விளையாடிய அரசியல் கிண்டல்

கோவை:""தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலிலே தூக்கி போட்டாலும், கட்டு மரமாகத் தான் நான் மிதப்பேன்; அதில் நீங்கள் ஏறி பயணம் செய்யலாம்; கவிழ்ந்து விட மாட்டேன்...'' இது தான் கலைஞர் தொலைக்காட்சியில், இரவு 7.00 மணிக்கு நீங்கள் கேட்கும் வசனம்.

"நீங்கள் என்னை கடலிலே தூக்கி எறிந்தாலும், நீந்தி கரைக்கு வந்து, தொடர்ந்து உங்களை ஏமாற்றுவேன்...!' இது தான் அந்த கேள்வித்தாளில் காணப்படும் "லேட்டஸ்ட் டயலாக்!'கருணாநிதியை அப்பட்டமாகக் கிண்டலடிக்கும் இந்த புது வசனம், "நமது எம்.ஜி.ஆர்' நாளிதழிலோ, எம்.ஜி.ஆர்., மன்ற அறிவிப்பு பலகையிலோ வந்த கேலிச் சித்திரமில்லை; தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில், 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு தரப்பட்ட ஆங்கிலம் முதல் தாளில் தரப்பட்ட வினாத்தாளில் இருந்த ஒரு வாக்கியம்.அவர் தமிழர்களிடம் கூறுகிறார் என ஆரம்பித்து, "இதை மறைமுக உரையாக (இன்டைரக்ட் ஸ்பீச்) மாற்றி எழுது' என, மேலே கண்ட "டயலாக்' தரப்பட்டுள்ளது.

இதே வினாத்தாளில், "செயல்பாட்டு வினை'யாக (பாசிவ் வாய்ஸ்) மாற்றி எழுதுமாறு சில வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன; அதில், "அரசியல்வாதிகள் மக்கள் பணத்தை ஏமாற்றி சம்பாதிக்கின்றனர்; அவர்களை திகார் சிறைக்கு கடவுள் அனுப்புகிறார்' என்ற ஒரு வாக்கியம், பல அரசியல்கட்சியினரையும் பொதுவாக கிண்டல் அடிக்கிறது.

மற்றொரு வாக்கியம், "நீங்கள் மூன்று பெண்களை திருமணம் செய்யாதிருந்தால், அவர்களால் மூன்று அமைச்சர்களை (கேபினட் மினிஸ்டர்) தேர்வு செய்திருக்க முடியாது' என, மறைமுகமாக ஓர் அரசியல் தலைவரை பரிகசிக்கிறது.

இதே பகுதியில், "முதல்வர் தன் தேர்தல் பிரசாரத்தின் போது, பல வாக்குறுதிகளை அளித்திருந்தார்; அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்' என்ற வாக்கியமும் இடம் பெற்றிருக்கிறது; அந்த வாக்கியத்திலும், பெண்பாலை குறிக்கும் வகையில், "ஷீ, ஹெர்' என்ற ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது, ஆளும்கட்சிக்காரர் ஒருவரே இதை தயாரித்திருப்பதை உறுதி செய்கிறது.தி.மு.க.,வையும், அதன் தலைவரையும் அப்பட்டமாகக் கிண்டலடிக்கும் இந்த கேள்வித்தாள், மருதமலை ரோட்டிலுள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் அரையாண்டுத் தேர்வின் போது தரப்பட்டுள்ளது. தி.மு.க.,வினர் சிலருக்கு இது தெரிந்தும், அவர்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அர்த்தம் புரியவில்லையா அல்லது அர்த்தம் புரிந்து ரசித்தார்களா என்றும் தெரியவில்லை.

கோவை மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் கோபிதாசிடம் கேட்ட போது, ""அரையாண்டு தேர்வுக்கு அரசு கொடுத்த வினாத்தாளை, 75 சதவீத பள்ளிகள் வாங்கியுள்ளன; மற்றவர்கள், வெளியில் வாங்கினர்; நீங்கள் சொல்லும் பள்ளி நிர்வாகம், திருநெல்வேலியிலுள்ள ஒரு பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திடம் அந்த வினாத்தாளை வாங்கியுள்ளது; பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது,'' என்றார்.

Sunday, February 5, 2012

விரைவில் வெளியாகிறது குரூப் 2, வி.ஏ.ஓ. பணியிட உத்தரவு


சென்னை, பிப். 4: குரூப் 2, கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கான பணியிடங்களை ஒதுக்குவதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தேர்வுகளை ரத்து செய்யவோ அல்லது பணியிடங்களை ஒதுக்காமல் காலம் தாழ்த்தும் எண்ணமோ இல்லை என தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டது. தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர், சார் பதிவாளர் உள்ளிட்ட ஆயிரத்து 628 பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை லட்சக்கணக்கான பட்டதாரிகள் எழுதினர்.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கான தேர்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்.
குரூப் 2 தேர்வு வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியானது. மேலும், அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் எந்தெந்த அரசுத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்கிற விவரமும் வெளியிடப்பட்டது. ஆனால், உரிய உத்தரவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது.
கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியானாலும், பணியிட உத்தரவு வெளியாகவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் செல்லமுத்து மற்றும் உறுப்பினர்கள் வீடுகள், அவர்களின் அலுவலக அறைகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸôரின் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், குரூப் 2 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆறு வார காலத்துக்குள் பணியிடங்களுக்கான உத்தரவை வழங்க வேண்டும் என ஆணையிட்டது. அந்த ஆறு வார காலம் பிப்ரவரி 6-ம் தேதியுடன் முடிவடைகிறது.
விரைவில்... பணியிடங்களுக்கான உத்தரவை வெளியிடுவதில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. ஆனாலும், முறைகேடான வழிகளில் யாரும் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பதவிகளைப் பிடித்து விடாமல் இருக்கவும் தமிழக அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதற்கான மனுவை உயர் நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ளது. பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் இணைச் செயலாளர் சார்பில் இந்த மனு தாக்கல் ஆகியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
குரூப் 2 தேர்வு உள்பட அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பல்வேறு தேர்வுகளில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்ட அரசுப் பதவியில் உள்ளோர், தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியபோது, பணியாளர்களைத் தேர்வு செய்தது தொடர்பாக சில ரகசிய ஆவணங்களும், முறைகேட்டுப் புகார்கள் தொடர்பான ஆதாரங்களும்  கைப்பற்றப்பட்டுள்ளன.
பணியாளர்களைத் தேர்வு செய்ததிலும், மதிப்பெண்கள் வழங்கியதிலும், முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடந்திருப்பதற்கான முகாந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முறைகேடுகள்-ஊழல்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்குப் பணியிடங்களை ஒதுக்கினால் அது நிர்வாகத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும்.
எனவே, முறைகேட்டுப் புகார்கள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது போன்ற நபர்கள் பணிகளைப் பெறும்போது, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சிரமம் ஏற்படும்.
நிபந்தனையுடன் பணியிட உத்தரவு... எனவே, "பணியிட உத்தரவுகள் லஞ்ச ஒழிப்புப் போலீஸôரின் விசாரணையின் முடிவுக்கு கட்டுப்பட்டது' என்பதைக் குறிப்பிட வேண்டும். இதன் மூலம் தவறான வழியில் ஒருவர் பணியில் சேர்ந்தார் என்பது விசாரணையின் முடிவில் தெரிய வந்தால் அவரை பணியில் இருந்து நீக்க வாய்ப்பு ஏற்படும்.
எனவே, அரசின் நலன் கருதி இந்த அம்சத்தை ஏற்கெனவே வெளியிட்ட உத்தரவுடன் சேர்த்து வெளியிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது

Saturday, February 4, 2012

கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும்: முதல்வர் ஜெ.


சென்னை: ""தமிழகத்தில் படிக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்களும், தமிழ்மொழிப் பாடத்தை கண்டிப்பாக படிக்க வேண்டும். கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தில் எவ்வித மாற்றங்களும் கொண்டுவரப்பட மாட்டாது,'' என, முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக கூறினார்.
சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:

கோபிநாத்-காங்கிரஸ்: ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லைகளை ஒட்டிய தமிழகப் பகுதிகளில், தெலுங்கு, கன்னடம் மற்றும் உருதை தாய் மொழியாகக்கொண்ட மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் என்ற சட்டத்தின் காரணமாக, சிறுபான்மை மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள், படிக்க முடியாமல் திணறுகின்றனர். இப்படி கூறுவதால், நாங்கள் தமிழ் மொழிக்கு விரோதியானவர்கள் கிடையாது. தமிழ் மொழியை கற்பதில் அனைவரும் ஆர்வமாக இருக்கிறோம். எனினும், பள்ளி மாணவர்களுக்கு உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு, விருப்பப் பாடமாக உள்ள கன்னடம், தெலுங்கு மற்றும் உருதுமொழி பாடங்களை, முக்கிய மொழிப்பாடமாக (தமிழ் பாடத்தைப்போல்) மாற்ற வேண்டும்.

அமைச்சர் சி.வி.சண்முகம்: 2006ல், அப்போது இருந்த தி.மு.க., அரசு, கட்டாயம் தமிழ் படிப்பதற்கான சட்டத்தை கொண்டு வந்தது. அந்த சட்டத்தின்படி, தமிழ்ப் பாடத்தை, படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் படிக்க வேண்டும். அதன்படி, நடப்பு கல்வியாண்டில், 6ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் தமிழ் பாடத்தை கற்க வேண்டும். தற்போது வரை, சிறுபான்மை மொழியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அவர்கள், பத்தாம் வகுப்பிற்கு வரும்போது தான், தமிழை ஒரு பாடமாக பொதுத் தேர்வில் எழுத வேண்டியிருக்கும். விருப்பப் பாடமாக, அந்தந்த தாய்மொழிகளில் மாணவர்கள் படிக்கலாம். ஆனால், தேர்வுக்கு கட்டாயம் கிடையாது. ஆந்திராவில், தெலுங்கு மொழிப் பாடத்தை படிக்காமல், பள்ளிப் படிப்பை முடிக்க முடியாது. அதேபோல், கர்நாடகாவில், கன்னட மொழிப்பாடம், அனைவருக்கும் கட்டாயமாக உள்ளது.

கோபிநாத்: எல்லையில் உள்ள அரசு பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் கிடையாது. தமிழ்பாட ஆசிரியர் பணியிடங்களும் காலியாகவே இருக்கின்றன. இப்படியிருந்தால், எப்படி மாணவர்கள் தமிழை படிக்க முடியும்? எனவே, முதல் மொழிப் பாடமாக, சிறுபான்மை மொழிப்பாடங்களை கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா: தமிழகத்தில் உள்ள மாணவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடைய தாய்மொழி எதுவாக இருந்தாலும், அவர்கள் கட்டாயமாக தமிழை படிக்க வேண்டும்.அதில், எவ்வித மாற்றமும் இல்லை. ஆந்திராவிலும், கர்நாடகாவிலும், அந்தந்த மாநில மொழிகளை கண்டிப்பாக படிக்க வேண்டும் என உத்தரவு இருக்கிறது. எனவே, தமிழகத்தில் படிக்கும் மாணவர்கள், கண்டிப்பாக தமிழ்ப் பாடத்தை படித்தாக வேண்டும் என்ற சட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. தலைமை ஆசிரியர்கள் இல்லை; ஆசிரியர்கள் இல்லை என்ற குறைகளை சரிசெய்ய, இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.

இன்று அறிவிப்பு? ஆந்திரா, கர்நாடகா எல்லையை ஒட்டியுள்ள தமிழக அரசுப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் இல்லை என்றும், தமிழ்ப்பாட ஆசிரியர்கள் இல்லை என்றும், காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் கூறினார். "இந்த குறையை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று, முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார். சிறிது நேரத்தில், முதல்வர், பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதியை அழைத்துப் பேசினார். கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி, தேவையான ஆசிரியர் பணியிடங்கள் விவரங்களைப் பெறவும், அங்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், முதல்வர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. எனவே, எல்லையோர அரசுப் பள்ளிகளில், போதிய ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா இன்று, தனது பதிலுரையின்போது வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.


Friday, February 3, 2012

56 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் நியமனம்: அமைச்சர் சிவபதி

ஆசிரியர் நியமனம், போட்டித்தேர்வு முறையில் நடைபெறும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து, பதிவுமூப்பு அடிப்படையில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என நம்பி, 40, 45 வயது நிரம்பியவர்கள் எல்லாம் பாதிக்கப்படுவார்கள். எனவே, 50 சதவீதம் பதிவுமூப்பு அடிப்படையிலும், 50 சதவீதம் தேர்வு அடிப்படையிலும் ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி: நடப்பு கல்வியாண்டில், 56 ஆயிரத்து 453 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில், பல்வேறு வகையான ஆசிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு வகை ஆசிரியர்களும், ஒவ்வொரு வகையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள், பதிவு மூப்பு மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.முதுகலை ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பட்டதாரி ஆசிரியர்கள், பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

குணசேகரன்-இந்திய கம்யூனிஸ்ட்: பகுதி நேர ஆசிரியர் நியமனத்தில், பல்வேறு தகவல்கள் வருகின்றன. எனவே, பதிவுமூப்பு அடிப்படையில், அந்த நியமனங்களை செய்திட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வணிகவரித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்: பகுதிநேர ஆசிரியர்களை தேர்வு செய்ய, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில், 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க, முழுக்க பதிவுமூப்பு அடிப்படையில், பகுதிநேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள். பதிவுமூப்பு தகுதி, ஒரு அங்கமாக இருக்கும். கல்வித் தகுதி, சிறப்புத் தகுதிகள் என, பல்வேறு அளவுகோள்கள் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு மதிப்பெண்கள் தரப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தான், பகுதிநேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆசிரியர்களை, பதிவுமூப்பு மற்றும் தேர்வு ஆகிய இரு முறைகளில், தலா 50 சதவீதம் என்ற அளவில் தேர்வு செய்ய வேண்டும் என, உறுப்பினர் வலியுறுத்தினார். கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தித்தான், ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தி, முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்யும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

 மத்திய அரசின் உத்தரவுப்படிதான் தகுதித் தேர்வு


அமைச்சர் சி.வி.சண்முகம், ``மத்திய அரசு சட்டப்படி அனைவரும் தகுதித் தேர்வு மூலம் தான் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன்படி தான் முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பகுதிநேர ஆசிரியர்கள் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் இல்லை. அவர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் பதிவு செய்திருக்க வேண்டும். தகுதிகள் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தான் கூறப்பட்டுள்ளது.

 


சிவபதிக்கு உதவிய சண்முகம்:பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக, கடந்த 27ம் தேதி சிவபதி பதவியேற்றார். அடுத்த 2 நாட்களில், கவர்னர் உரை, அதைத்தொடர்ந்து கவர்னர் உரை மீதான விவாதம் நடந்து வருகிறது. இதனால், துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடியாத நிலையில் இருந்த சிவபதிக்கு, சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை தொடர்பான பல கேள்விகளுக்கு, வணிக வரித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலளித்து உதவினார்.

Wednesday, February 1, 2012

பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் நியமனம்


சென்னை:""பகுதி நேர ஆசிரியர்கள் நேர்முகத் தேர்வு மூலம், பதிவு மூப்பு, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, விரைவில் நியமிக்கப்படுவர்'' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி தெரிவித்தார்.கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:

பாலபாரதி-மார்க்சிஸ்ட்: ஆசிரியர்கள் நியமனம் பற்றிய அறிவிப்புகள் வெளிவருகின்றன. அவர்களை முன்பு போல, பதிவு மூப்பு அடிப்படையில் நியமிப்பது தான் பொருத்தமாக இருக்கும். ஒரு மணி நேர ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தேர்வு என்று கூறுவது, பொருத்தமாக இல்லை. 60 லட்சம் பேர், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். அந்த வேலை வாய்ப்பு அலுவலகங்களிலேயே, 358 காலியிடங்கள் உள்ளன.
பதிவு மூப்பு அடிப்படையில், ஆசிரியர்களை தேர்வு செய்வதன் மூலம், கல்வித் துறை ஆரோக்கியமாக செயல்பட முடியும்.

அமைச்சர் சிவபதி: பகுதி நேர ஆசிரியர்களை, அந்தந்த மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில், ஆறு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்கள் முறையாக நேர்முகத் தேர்வு நடத்தி, தகுதி அடிப்படையில், விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். நேர்முகத் தேர்வில், பதிவு மூப்பு, கல்வித் தகுதி, அனுபவம் ஆகியவற்றுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அதனடிப்படையில், நியமனம் செய்யப்படும்.
கடந்த 25 ஆண்டுகளில், தமிழகத்தில், 1 லட்சத்து 3 ஆயிரத்து 350 ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த அரசு இந்த ஆண்டு மட்டும், 56 ஆயிரத்து 450 ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியையாக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட இளம்பெண், கேரளாவில் பிச்சை எடுத்து வருகிறார்.


ஆலப்புழா: எதிர்காலத்தில் ஆசிரியையாக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட இளம்பெண், கேரளாவில் சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுத்து வருகிறார்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியைச் சேர்ந்தவர் நரசிம்மலு. கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சனம்மா. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தம்பதியருக்கு மூன்று மகள்கள். இவர்களில் இருவருக்கு திருமணமாகி விட்டது. மூன்றாவது மகள் சிராவணா, 17. பிளஸ் 2 தேர்வில் 1000த்திற்கு 752 மதிப்பெண் பெற்றுள்ள இவர், ஆசிரியையாக விரும்பினார். ஆனால், கட்டடத் தொழிலாளியான அவரது தந்தை வேலைக்குச் செல்லாமல், நோயாளி மனைவியை கவனித்து வருகிறார். சிராவணாவை படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை. இதையடுத்து அவர் அதே பகுதியைச் சேர்ந்த கங்கலுப்பா என்ற வாலிபருடன், கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு பத்து நாட்களுக்கு முன் வந்தார். அங்கு கடற்கரையோரம் ஒரு குடிசையில் தங்கி, அங்கு வரும் சுற்றுலா பயணிகள் உட்பட பலரிடம் பிச்சை எடுத்து வருகிறார். அவர் ஆலப்புழா அரசு மருத்துவமனை முன் பிச்சை எடுக்கும்போது, சமூக ஆர்வலர் ஒருவர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து, அவரை பிடித்துச் சென்று மகளிர் இல்லத்தில் கொண்டு சேர்த்தனர்.
"ஒன்பது நாட்கள் பிச்சை எடுத்ததில் 2,834 ரூபாய் கிடைத்தது. இந்த பணத்தை சேகரித்து மேற்கொண்டு படிக்க முயற்சிப்பேன்"
ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் சரளமாக பேசத் தெரிந்த சிராவணா கூறியதாவது: பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றாலும், முதலில் நர்சிங் படிக்க விரும்பினேன். ஆனால், இடது தோளில் உள்ள பிரச்னை காரணமாக, அக்கல்வியை தவிர்த்து விட்டு, ஆசிரியை கல்வி கற்க விரும்பினேன். ஆனால், ஆசிரியை பணி என்பது எளிதானது அல்ல என்பதை உணர்ந்தேன். எனது சொந்த ஊரில் இருந்து கங்கலுப்பா என்பவருடன் இங்கு வந்தேன். அவரும் இங்கு பிச்சை எடுத்து வருகிறார். கடற்கரையோரம் ஆந்திராவைச் சேர்ந்த சிலர் தங்கி உள்ளனர். அவர்களுடன் நானும் தங்கியிருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் என் தந்தையுடன் இங்கு வந்துள்ளேன். அப்போது அவர் இங்கு கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்தார். ஒன்பது நாட்கள் பிச்சை எடுத்ததில் 2,834 ரூபாய் கிடைத்தது. இந்த பணத்தை சேகரித்து மேற்கொண்டு படிக்க முயற்சிப்பேன்' என்றார்.