Thursday, February 16, 2012

எஸ்.எஸ்.ஏ., ஆசிரியர்களை நியமிக்கும் பணி தீவிரம்

சென்னை, பிப். 15: அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் ஆசிரியர்களை நியமிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆரம்பமாக, புதன்கிழமை கடலூர் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்தவர்களுக்கு பணி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் (எஸ்.எஸ்.ஏ.) ரூ.5 ஆயிரம் மாத ஊதியத்தில் தாற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக மாவட்டந்தோறும் ஆசிரியர்கள் அடங்கிய பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன. முதன்மை கல்வி அலுவலரின் மேற்பார்வையில் இந்த பட்டியல்கள் முடிவு செய்யப்பட்டன.ஓவியம், தையல் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் பணியிடங்களுக்கு அடிப்படைத் தகுதி என்பது வேலைவாய்ப்புப் பதிவு மூப்பு இல்லையென்றாலும் அதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி மாவட்டந்தோறும் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு இருந்தன.சென்னையில் நிகழ்வு: ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அளிக்கப்பட்ட பட்டியல்களின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 
இதற்கான நிகழ்வு, சென்னை எழும்பூரில் உள்ள மாநிலப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது.முதல் நாளில், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பணிநியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 200-க்கும் மேற்பட்டோருக்கு உத்தரவுகள் அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அடுத்தடுத்த நாள்களில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். 

ஏமாற்றம்: வேலைவாய்ப்புப் பணி மூப்பு அடிப்படையை தகுதியாகக் கொண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படாத காரணத்தால் பட்டதாரிகள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மத்திய அரசின் திட்டமான "அனைவருக்கும் கல்வித் திட்டம்' மாநிலத்தில் செயல்படுத்தப்படும் வரை மட்டுமே அந்தத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கும். மேலும், அவர்களுக்கு மாத ஊதியம் வெறும் ரூ.5 ஆயிரம். இந்த நிலையில், ஆசிரியர் நியமனத்தில் வேலைவாய்ப்புப் பதிவு மூப்பை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தினமணி:

1 comment: