Friday, February 17, 2012

எத்தனை காலம் தான் ஏமாற்றுவர் இந்த நாட்டிலே?

சென்னை: ""கல்வித் துறையின் 25 ஆண்டுகால வரலாற்றில், முதன் முறையாக இந்த ஆட்சியில், ஒரே ஆண்டில் 53 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தி சாதனை செய்யப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி பேசினார்.
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் சார்பில், "குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்' குறித்து, ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்சி இயக்குனர், தேவராஜன் வரவேற்றார்; அனைவருக்கும் கல்வி இயக்க, மாநிலத் திட்ட இயக்குனர், முகமது அஸ்லம் முன்னிலை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி, சட்டம் தொடர்பான விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை, துறைச் செயலர் சபீதா பெற்றுக் கொண்டார்.

வரலாற்று சாதனை: விழாவில், அமைச்சர் பேசியதாவது: சட்டசபை தேர்தலின் போதே, கல்வித் துறை வளர்ச்சிக்காக, பல்வேறு திட்டங்களை முதல்வர் வெளியிட்டார். தமிழகம், 100 சதவீத கல்வி அறிவை எட்ட, பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். கல்வித் துறையின் 25 ஆண்டுகால வரலாற்றில், முதன் முறையாக இந்த ஆட்சியில், அதுவும் ஒரே ஆண்டில் 53 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக ஏற்படுத்தி சாதனை செய்யப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளில், 1 லட்சத்து 3 ஆயிரத்து 51 ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் தான், புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குற்றச்சாட்டு: கட்டாயக் கல்விச் சட்டம், 2009ல் வந்துவிட்டாலும், முந்தைய தி.மு.க., ஆட்சியில், முதல் இரண்டு ஆண்டுகள் திட்டத்தைச் செயல்படுத்த, சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபிறகு தான், சட்டத்தை முழுமையாக அமல்படுத்த, முதல்வர் நடவடிக்கை எடுத்தார்.

கண்டிப்பு தேவை: ஆசிரியர் - மாணவர்களிடையே, இடைவெளி இருக்கக் கூடாது. மாணவர்களிடம் அன்பாகப் பழகுங்கள்; அதே நேரத்தில், கண்டிப்பாகவும் இருங்கள். மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்க, முப்பருவ முறை கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டாயக் கல்விச் சட்டத்தில், பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி, ஏராளமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கட்டாயக் கல்விச் சட்டம் குறித்து, ஒன்றரை லட்சம் ஆசிரியர்களுக்கு, விரைவில் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு ( மேடைக்கு மேடை இதையே)அமைச்சர் சிவபதி பேசினார்.

சவால்களை சந்திக்கிறோம்: சபீதா பேசும்போது, ""பல மாற்றங்களையும், சவால்களையும் கல்வித்துறை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கட்டாயக் கல்விச் சட்டம் தொடர்பாக, 12 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. சட்டத்தில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகத்தில், உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.



No comments:

Post a Comment