தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், புதிய ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக சட்டப்பேரவை கல்வி மானியக் கோரிக்கையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.
அதில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர் என மொத்தம் 14,377 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும், பகுதி நேர ஆசிரியர்களாக 16,000 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்குள் 55,000 ஆசிரியர்கள் நியமிக்கப் போவதாக, குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற அமைச்சர் அறிவித்தார். அதன்படி, ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் அறிவித்த 5,790 பட்டதாரி ஆசிரியர்கள், கடந்த ஆண்டு வரை பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்கள் 9,735 என மொத்தம் 15,525 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 3,187 பேர், பகுதி நேர ஆசிரியர்கள் 16,549 பேர் நியமிக்கப்படுகின்றனர். இதுதவிர, தொடக்கப் பள்ளிகளில் கூடுதல் பணியிடங்களில் 3,565 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்ப அரசு அனுமதி அளித்துள்ளது. அதில் 5,000 அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். மத்திய இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் 544 ஆய்வக உதவியாளர்கள், 344 அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். நடுநிலைப் பள்ளிகளில் 831 தலைமை ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர். ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் முதுநிலை விரைவுரையாளர்கள் 34 பேரும் நியமிக்கப்படுகின்றனர். விரைவில் இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உள்ளது.
No comments:
Post a Comment