Thursday, November 17, 2011

ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கூடுதல் பணியாளர்கள் தேவை


சென்னை, நவ. 16: மாணவர்களின் நலனைக் காக்கும் வகையில் இந்த ஆண்டு 55 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர்.

ஓர் ஆண்டில் நியமிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையைவிட, மூன்று மடங்கு அதிகமான ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த ஆண்டு நியமிக்க உள்ளது. இந்த நியமனம் விரைவாகவும், நேர்மையாகவும் நடைபெற வாரியத்தில் கூடுதல் பணியாளர்கள் தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இப்போதுள்ள 18 பணியிடங்களோடு கூடுதலாக 30 முதல் 50 பணியாளர்கள் வரை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்குத் தேவை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகம் முழுவதும் 6,000 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஓராண்டுக்கும் மேலாகக் கால தாமதம் ஏற்பட்டது. இதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ள குறைவான ஊழியர்களே காரணம் என்று பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
மொத்தம் 18 பேர்: ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தலைவர், இயக்குநர் அந்தஸ்தில் 2 அதிகாரிகள், 2 இணை இயக்குநர்கள், 2 பிரிவு கண்காணிப்பாளர்கள், 6 எழுத்தர்கள், 4 அலுவலக உதவியாளர்கள் உள்பட மொத்தம் 18 பணியிடங்கள் உள்ளன. இதில் இப்போது 3 இடங்கள் காலியாக உள்ளன.
கடந்த ஆட்சியின்போது ஏற்பட்ட இந்தக் கால தாமதத்தைத் தவிர்க்கும் வகையிலும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நியமிக்கும் வகையிலும் இந்த வாரியத்தில் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.
5 ஆண்டுகளில் 58 ஆயிரம் பேர்: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆசிரியர்கள் வரை இப்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 58 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு முறையும் ஆசிரியர் நியமனத்தில் 6 மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை கால தாமதம் ஏற்படுகிறது.
நீதிமன்ற வழக்குகள், வேலைவாய்ப்பு அலுவலகம் அவ்வப்போது அனுப்பும் பட்டியல்கள் என பிற காரணங்கள் இருந்தாலும், இங்குள்ள ஆள் பற்றாக்குறையே முக்கிய காரணமாக உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர்களைப் படிப்படியாக நியமனம் செய்தபோதே அதிகப் பணிச்சுமையின் காரணமாக கால தாமதம் ஆனது. ஆனால், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களைக் குறைந்த ஊழியர்களை வைத்து நியமனம் செய்வது மிக, மிகக் கடினம் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
டி.என்.பி.எஸ்.சி.யுடன் ஒப்பிடும்போது....தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் ஆண்டுக்கு 1,000 முதல் 2,000 பணியாளர்கள் வரையில் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அங்கு ஏறத்தாழ 300 பணியாளர்கள் வரை உள்ளனர். கல்லூரி விரிவுரையாளர் முதல் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வரை ஆண்டுக்கு சராசரியாக 7 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் வாரியத்துக்கு 18 பணியாளர்களே வழங்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கூடுதலாக 50 பேர் தேவை:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பணியாளர்களை அதிகரிக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் பலமுறை பரிந்துரைகள் அனுப்பப்பட்டன. ஆனால், அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குறைந்தபட்சம் 30 முதல் 50 ஊழியர்கள் வரை அதிகரித்தால் மட்டுமே ஆசிரியர்களைக் கால தாமதமின்றித் தேர்வு செய்ய முடியும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இதுவரை இல்லாத வகையில் ஒரே ஆண்டில் 55 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் அறிவிப்பால் மாணவர்களு ம், சமுதாயமும் உடனடியாகப் பயனடைய வேண்டும் என்றால், ஆசிரியர் தேர்வு வாரிய ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment