Tuesday, November 22, 2011

மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் 16,549 பகுதி நேர சிறப்பாசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.



ஜெயலலிதா அறிவிப்பு


இந்த ஆண்டு அரசு பள்ளிக்கூடங்களில் 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் உள்பட 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். தற்போது இடைநிலை ஆசிரியர்கள், தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆகிய அனைத்து வகை ஆசிரியர்களும் மாநில அளவிலான பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.


இந்த நிலையில், முதல்-அமைச்சர் அறிவித்துள்ள 55 ஆயிரம் ஆசிரியர்களும் எந்த முறையில் நியமிக்கப்படுவார்கள்? அதாவது, பதிவுமூப்பு அடிப்படையிலா? அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமா? என்று ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். இடைநிலை ஆசிரியர்களும், சிறப்பாசிரியர்களும் பதிவுமூப்பு அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் இருந்து வந்ததைப் போல போட்டித்தேர்வு மூலமாகத்தான் நியமிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை பெரும்பாலான பி.எட். பட்டதாரிகளிடம் இருந்து வருகிறது.


16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம்


ஆசிரியர் நியமனம் தொடர்பாக அரசு வெளியிடும் அரசாணையில்தான் இதுபற்றிய முழு விவரமும் தெரிவிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். இந்த நிலையில், அரசு பள்ளிக்கூடங்களில் 16,549 பகுதி நேர சிறப்பாசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-


அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (எஸ்.எஸ்.ஏ.) அரசு பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் 5,253 பணி இடங்கள் ஓவிய பாடத்திற்கும் (கலை கல்வி), 5392 இடங்கள் உடற்கல்விக்கும், 5,904 பணி இடங்கள் தொழிற்கல்விக்கும் (இசை, தையல், தோட்டக்கலை, வாழ்க்கை கல்வி, கம்ப்ïட்டர் அப்ளிகேஷன், கட்டிட பணி) ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிநியமனம் மாவட்ட அளவில் நடைபெறும்.


எப்படி தேர்வுசெய்யப்படுவார்கள்?


இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை (சி.இ.ஓ.) தலைவராகக் கொண்டு தேர்வுக்குழு அமைக்கப்படும். இந்த குழுவின் உறுப்பினர்-செயலராக எஸ்.எஸ்.ஏ. முதன்மை கல்வி அதிகாரியும் உறுப்பினராக மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரியும் இருப்பார்கள். இவர்கள் தவிர குறிப்பிட்ட பாட ஆசிரியர்களை தேர்வு செய்யும் வகையில் அந்த துறையில் உள்ள மாவட்ட அளவிலான அதிகாரியும் தேர்வுக்குழுவில் இடம்பெறுவார்கள்.


சிறப்பாசிரியர் நியமனத்திற்கு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைப் பொருத்தவரையில், முதன்மை கல்வி அதிகாரியும், நடுநிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரியும் நியமன அதிகாரியாக இருப்பார்கள். சிறப்பாசிரியர்களை தேர்வு செய்வது தொடர்பாக தினசரி நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் அறிவிப்பு செய்ய வேண்டும். மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவும் அறிவிப்பு வெளியிடப்படும். இதன்மூலமாக விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.


சம்பளம் ரூ.5 ஆயிரம்



பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். தேர்வுக்குழு நடத்தும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்வுசெய்யப்படுவார்கள். குறிப்பிட்ட பாடப்பிரிவில் உயர்கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு பணியில் முன்னுரிமை கொடுக்கப்படும். தகுதிகள் சமமாக இருக்கும் பட்சத்தில் உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கும் பெண்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.


பணி நியமனம் செய்யும்போது 10 சதவீத விண்ணப்பதாரர்கள் கொண்ட காத்திருப்போர் பட்டியலும் தயார் செய்யப்படும். இந்த பட்டியல் ஓராண்டு அல்லது அடுத்த தேர்வு இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை செல்லுபடியாகும். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றிய பட்டியல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக அறிவிப்பு பலகையிலும், பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்திலும் வெளியிடப்பட வேண்டும்.


வாரத்தில் 3 நாட்கள் பணி


பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது ஆகும். எஸ்.எஸ்.ஏ. திட்டம் முடிவடையும் வரை இந்த நியமனம் நடைமுறையில் இருக்கும். சிறப்பாசிரியர்களின் பணி எவ்வித முன்அறிவிப்பும் இன்றி நீக்கப்படும். பணியின்போது ஞாயிறு மற்றும் அரசு பொதுவிடுமுறைகள் தவிர வேறு விடுமுறை எதுவும் கிடையாது.


பணிக்காலத்தில் சம்பள உயர்வு வழங்கப்படாது. வாரத்தில் 9 மணி நேரம் பணி செய்ய வேண்டும். வாரத்தில் 3 நாட்கள் அரைநாள் வேலை செய்ய வேண்டியது இருக்கும். தலைமை ஆசிரியர்களின் அறிவுரையின்படி ஒன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை அல்லது பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை (வாரத்தில் 3 நாட்கள்) என்ற காலஅட்டவணையில் பணியாற்றலாம். இதுபற்றி முன்கூட்டியே சிறப்பாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படும். மாணவர்களுக்கு தேர்வு நடக்கும்போது பள்ளிக்குச் செல்ல வேண்டியதில்லை. அவ்வாறு பள்ளி செல்லாத நாட்களை காலாண்டு, அரையாண்டு, ஆண்டு விடுமுறை நாட்களில் வகுப்பு வைத்து ஈடுசெய்துகொள்ள வேண்டும்.


விடுமுறை கிடையாது

சிறப்பாசிரியர்களுக்கு வருகைப்பதிவேடு பதிவேடு பராமரிக்கப்படும். அவர்களுக்கு கிராம கல்விக்குழு மூலமாக சம்பளம் வழங்கப்படும். பள்ளிக்கு வராத நாட்கள் `ஆப்சென்ட்' என்று கருதப்பட்டு அதற்கு சம்பளம் கழிக்கப்படும். ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டால் ஒரு ஆசிரியரின் சேவை அதிகப்பட்சம் 4 பள்ளிகளில் பயன்படுத்தப்படும். அதற்கு ஏற்ப, அவர்களுக்கு ஒவ்வொரு பள்ளியிலும் தனித்தனியே சம்பளம் வழங்கப்படும்.


இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment