Monday, November 14, 2011


அகப்படும் வரை எல்லாரும் நல்லவர்கள்

எஸ்.அமானுல்லா (ஓய்வு பெற்ற அரசு அலுவலர்), கீழ்ப்பெரும்பாக்கம், விழுப்புரத்திலிருந்து எழுதுகிறார்: இப்பகுதியில் ஒரு வாசகர், "ஊராட்சித் தலைவர் கலெக்டராக முடியுமா' என கேட்டிருந்தார்; முடியாதுதான். ஊராட்சித் தலைவர் பதவிக்கு தகுதி ஏதும் தேவையில்லை; கலெக்டர் பதவிக்கு ஐ.ஏ.எஸ்., பட்டம் வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்து, பத்து வருடங்களுக்கு மேலாக காத்து இருக்கும் ஆசிரியர்களுக்கு, தேர்வு பயம் ஏதும் இல்லை. நேற்று பி.எட்., முடித்தவர்கள், டி.ஆர்.பி., தேர்வை எழுத முடியும் என்கிறபோது, தனியார் பள்ளிகளில் 4,000 - 4,500 ரூபாய்க்கு சிலுவையை சுமக்கும் பி.எட்.,களால், இந்த, 6ம் வகுப்பு பாடத் திட்ட தேர்வை எழுத முடியுமா? பிரச்னை அதுவல்ல! ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நேர்மையும் நீதியும் உடையதாக இருக்குமா? அது வெளிப்படையானது என அதன் செயலர் கூறினாராமே... இப்படித்தான், டி.என்.பி.எஸ்.சி.,யை கூட சிறிது காலம் வரை நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், இதுவரை எத்தனை தகுதியற்றோர் மகுடம் சூட்டப்பட்டார்களோ... தகுதியுடைய எத்தனை ஏழைகள் படுகுழியில் தள்ளப்பட்டார்களோ...டி.என்.பி.எஸ்.சி.,யின் உயர் பொறுப்பு நிர்வாகக் கூட்டத்தினரின் வீட்டில், எண்ண முடியாத அளவிற்கு பணமும் பொருளும் சிக்கியதாமே! ஊழல் எந்த அளவுக்கு இருக்கிறது பாருங்கள். நியாயமாக இத்தேர்வு எழுதி, பதவி கிடைக்காமல் தள்ளப்பட்டவர்களின் கண்ணீருக்கு யார் பதில் சொல்வது? அகப்படும் வரை எல்லாரும் நல்லவர்கள் தான். அகப்பட்டால் தானே குற்றவாளி. இதுதானே நம் நாட்டின் கலாசாரம்; தலைவிதி.ஆயிரம் அன்னா ஹசாரேக்கள் வந்தாலும், இங்கிருக்கும் கறுப்பு ஆடுகளை ஒன்றும் செய்துவிட முடியாது. வாங்கும் ஊதியத்திற்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்ற கடமை உணர்வு எல்லாம், இந்த டி.ஆர்.பி., தேர்வால் ஆசிரியர்களுக்கு கொடுக்க இயலாது. பணித்திறமை என்பது அந்தந்த ஆசிரியரின் தனிப்பட்ட குணம் சம்பந்தப்பட்டது. இதற்கும் தேர்வுக்கும் சம்பந்தம் கிடையாது. ஏனெனில், ஆசிரியர் பணி என்பது, ஒரே மாதிரியான கல்வித் தகுதி படைத்தவர்கள், ஒரே மாதிரியான பணி செய்யப் போகிறவர்கள்.இத்தேர்வை சாக்காக வைத்து, நிச்சயம் பணப் பேரம் நடக்கும். டி.என்.பி.எஸ்.சி.,யின் மூலம், வசதி படைத்தவர்கள் பலனடைந்தது போல், இங்கும் பலனடைவர்.

2 comments:

  1. very good message. pl published this in all leading news papers

    ReplyDelete
  2. this news is 100%true.

    ReplyDelete