Wednesday, November 30, 2011

ஆசிரியர் தகுதித் தேர்வை மட்டும் எழுதினால் போதுமா? குழப்பம்


ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக வெளியான தமிழக அரசின் அறிவிப்பு, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடங்களை நடத்தும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், மத்திய அல்லது மாநில அரசுகள் நடத்தும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். புதிய ஆசிரியர் நியமனத்திற்கு, இந்த வகை தேர்வு தேர்ச்சியை ஒரு தகுதியாகக் கொண்டு, தேர்வு செய்ய வேண்டும்.அதன்படி, இந்த வகை தேர்வை, தமிழக அளவில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. 

குழப்பங்களுக்கான காரணம் 
♦  ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமே, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என, அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தேர்வு முறையில், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பும் கணக்கில் கொள்ளப்படுமா என்பது குறித்து, எதுவும் அறிவிக்கவில்லை.

♦  ஆசிரியர் பயிற்றுனர்கள், தொடர்ந்து போட்டித் தேர்வு மூலமே தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வகை ஆசிரியர்கள், வழக்கமான போட்டித் தேர்வுடன், ஆசிரியர் தகுதித் தேர்வையும் எழுத
வேண்டுமா அல்லது ஆசிரியர் தகுதித் தேர்வை மட்டும் எழுதினால் போதுமா என்பது குறித்தும் அறிவிப்பு கிடையாது.

♦  ஆசிரியர் தகுதித் தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்தவர்கள், தகுதி பெறுகின்றனர் என்றால், காலிப் பணியிடங்களை விட அதிகமானவர்கள், 60 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் எடுத்தால், அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

ஆசிரியர் சங்கம் கருத்து:அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்னிந்திய செயலர் அண்ணாமலை இதுகுறித்து கூறும்போது, ""அரசாணையில், சில குழப்பங்கள் இருப்பது உண்மை தான். 

ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது, ஆசிரியர் தேர்வு முறையில் உள்ள ஒரு தகுதியாக இருக்க வேண்டும் என்று தான், மத்திய அரசு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வகை தேர்வு மூலமே, ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று கூறவில்லை,'' என்றார்.

மேலும், ""காலிப் பணியிடங்களை விட, அதிகமான ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றால், அனைவரும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தான் நியமனம் செய்யப்படுவர். பிற மாநிலங்களில் இப்படி தான் நடக்கிறது,'' என்றார்.
தேர்வு வாரியமும் குழப்பம் : பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வின் கீழ், கணிதம் - அறிவியல் அல்லது சமூகக் கல்வி ஆகிய ஏதாவது ஒன்றின் கீழ், 60 மதிப்பெண்களுக்கும், மொழித்தாள் ஒன்றில் 30 மதிப்பெண்கள், மொழித்தாள் இரண்டில், 30 மதிப்பெண்கள் மற்றும் குழந்தைகள் மன நலன் தொடர்பாக, 30 மதிப்பெண்கள் என, 150 மதிப்பெண்களுக்கு கேள்விகளை கேட்க வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதில், மொழிப்பாட ஆசிரியர்கள் என்று வரும்போது, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருந்தே, 150 மதிப்பெண்களுக்கான கேள்விகளையும் கேட்க வேண்டுமா; இவர்களிடம், கணிதம் - அறிவியல் மற்றும் சமூகக் கல்வி தொடர்பான 60 மதிப்பெண்களுக்கு, எப்படி கேள்வி கேட்பது எனத் தெரியாமல், தேர்வு வாரியம் குழப்பத்தில் இருந்து வருகிறது. 

இந்த குழப்பங்களுக்கு விளக்கம் கேட்டு, அரசுக்கு, தேர்வு வாரியம் கடிதம் எழுதி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேற்கண்ட குழப்பங்களுக்கு எல்லாம் விடை கிடைத்தால் தான், புதிய ஆசிரியர் தேர்வு முறையில் உள்ள சிக்கல்கள் தீரும்.

மொழிக்கென தனி ஆசிரியர்:வட மாநிலங்களில், பட்டதாரி ஆசிரியர்களில், தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள் என, தனியாக கிடையாது. பிற பாடங்களின் ஆசிரியர்களே, மொழிப் பாடங்களையும் நடத்துகின்றனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் தான், மொழிப் பாடங்களுக்கு என, தனியாக ஆசிரியர்கள் இருக்கின்றனர். 
-ஏ.சங்கரன்-

No comments:

Post a Comment