Friday, December 2, 2011

5 லட்சம் பேர் எழுதும் ஆசிரியர் தகுதித் தேர்வு


சென்னை, டிச. 1: இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் நியமனத்துக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள தகுதித் தேர்வில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் முதல் வாரத்தில் விநியோகிக்கப்படும் என்று தெரிகிறது. மே முதல் வாரத்தில் தகுதித் தேர்வும், ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வும் நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தும் முகமையாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக, தில்லி, அசாம், ஆந்திரம் உள்பட 5 மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 150 மதிப்பெண்ணுக்கான தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 90 (60%) மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதித் தேர்வு பணிகள் தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:
மாநிலம் முழுவதும் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை இடைநிலை ஆசிரியர் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். பட்டதாரி ஆசிரியர் பணிக்காக ஏறத்தாழ 2 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களில் 3.5 லட்சம் முதல் 4 லட்சம் பேர் வரை ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் 50 ஆயிரம் பேரும், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக உள்ள 80 ஆயிரம் பேரும் தேர்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்வுக்கான தேர்வு மையங்கள், மதிப்பீட்டு முறை என ஒரு பொதுத்தேர்வுக்கான ஏற்பாடு இதிலும் தேவைப்படும்.

மார்ச்சில் விண்ணப்பங்கள்; மே மாதம் தேர்வு: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களை வரவேற்று மார்ச் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை விளம்பரம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஐந்து லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு குறைந்தபட்சம் 45 நாள்கள் தேவைப்படும்.
எனவே, மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மே மாதம் கடைசி வாரம் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். ஒவ்வோர் ஆண்டும் இதையே நிரந்தரமாகப் பின்பற்றுவது என முடிவும் செய்யப்பட்டுள்ளது.

பாடத்திட்டத் தயாரிப்பு: ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டம் தொடர்பான வழிகாட்டி விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அந்தப் பாடத்திட்டத்தில் தமிழகத்துக்கு ஏற்றவாறு சிறிய மாறுதல்கள் செய்யப்படும். ஆசிரியர்களின் கற்பித்தல் திறனைச் சோதிக்கும் வகையில் நுட்பமான, நுணுக்கமான வினாக்கள் இதில் இடம்பெறும்.

தகுதித் தேர்வுக்கும், போட்டித் தேர்வுக்கும் தொடர்பில்லை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டதாரி ஆசிரியர்கள், போட்டித் தேர்வின் மூலம் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண், நியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படுமா என்று பட்டதாரிகள் வினா எழுப்பினர்.
 இதுதொடர்பாக விசாரித்தபோது, "ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது ஓர் அடிப்படைத் தகுதி ஆகும். அதன்பிறகு, போட்டித் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணைக் கொண்டு, இடஒதுக்கீட்டு முறையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

போட்டித் தேர்வுகள் எப்போது?: பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, 150 மதிப்பெண்ணுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும் என்றும், அந்த மாதத்திலேயே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஜூன் மாதத்திலேயே போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிகிறது.

6 மாதங்களுக்குள் நியமனம்: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து அறிவிப்பாணை இதுவரை வெளியாகவில்லை.
அதன் காரணமாக, பாடவாரியாக தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் எத்தனை பேர், பதிவு மூப்பின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை, போட்டித் தேர்வின் மூலம் நியமிக்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த அறிவிப்பாணை ஓரிரு வாரங்களில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிவிப்பாணை வெளியான பிறகு, ஆசிரியர்களை நியமிக்கும் பணி தொடங்கும். அனைத்து நியமனங்களும் 6 மாதங்களுக்குள் செய்து முடிக்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

3,900 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு இல்லை

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏற்கெனவே தேர்வுசெய்யப்பட்டுள்ள 3,900 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு பொருந்தாது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதும், தேர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தாங்களும் அந்தத் தேர்வை எழுத வேண்டுமா என்று கேள்வி எழுப்பினர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை என்று தேர்வு வாரியம் முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.




இந்த ஆண்டுக்கான ஆசிரியர் நியமனம்

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இறுதித் தீர்ப்பு வரும் வரை மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
எனினும், இவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ள எந்தத் தடையும் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வும், போட்டித் தேர்வும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டு முறை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வின் மூலமாக நியமிக்கப்பட உள்ளனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் மாவட்ட அளவிலான குழுக்கள் மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறையில் இந்த ஆண்டு இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் உள்பட 55 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. selected bts ikku appoinment poduvangala

    ReplyDelete
  2. Selected DSE & DEE kku appointment kidaikkuma illa cancel pannurangala sir??? please tell me sir...........

    ReplyDelete