Sunday, December 25, 2011

ஆசிரியர்களுக்கு, அதிகாரிகளே இடத்தை தேர்வு செய்கிறார்கள்

சென்னை,  டிச. 24-

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,155 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதல் முறையாக கவுன்சிலிங் இல்லாமல் பணிநியமனம் வழங்கப்பட உள்ளது. இதற்காக அதிகாரிகளே ஆசிரியர்கள் வேலைபார்க்க உள்ள இடங்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது.

தமிழக அரசு கல்வித்துறையில் அதிக அக்கறை செலுத்தி வருகிறது. போதுமான ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் என்பதிலும், தரமான கல்வியை மாணவர்களுக்கு போதிக்கவேண்டும் என்பதிலும் கண்ணும் கருத்துமாக உள்ளது.

ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக்கல்வி இயக்குனரகமும், தொடக்க கல்வி இயக்குனரகமும் உள்ளன. அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணியின் தலைமையில் இயங்குகின்றன. அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள், நர்சரி பள்ளிகள் ஆகியவை தொடக்க கல்வி இயக்குனரகம் கட்டுப்பாட்டில் இயக்குனர் சங்கர் தலைமையில் செயல்படுகின்றன.

இந்த இரு துறைகளிலும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடப்பணிகள் மற்றும் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால் ஏற்படும் காலிப்பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.


வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் 3,959 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்களில் 2,804 பேர் பள்ளிக்கல்வித்துறைக்கு அதாவது அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.  1,155 பேர்கள் மட்டும் தொடக்க கல்வி இயக்குனரகத்திற்கு, அதாவது நடுநிலைப்பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அதிகாரிகளே தேர்ந்து எடுத்தனர்

கடந்த சில வருடங்களாக காலியாக உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டு போர்டில் எழுதிவைக்கப்பட்டு கவுன்சிலிங் நடத்தப்பட்டு ஆசிரியர்களின் விருப்பத்தின் பேரில் அவர்கள் வேலைபார்க்க போகும் இடங்களை தேர்வு செய்தனர். ஆனால் இந்த வருடம் பள்ளிக்கல்வி இயக்குனரகம் 2,804 ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் நடத்தாமல் அதிகாரிகளே இடங்களை தேர்வு செய்து தபாலில் அனுப்பி வைத்தனர். அதன்படி நேற்று ஏராளமான ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தனர். பலருக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் போடப்பட்டிருந்தது.

2-ந் தேதிக்குள் பணிநியமன ஆணை


இந்த நிலையில் தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 1,155 ஆசிரியர்களும் நமக்கு எப்போது கவுன்சிலிங் வரும் நாம் இடத்தை தேர்வு செய்யலாம் என்று இருக்கிறார்கள். அவர்கள் அடிக்கடி தொடக்க கல்வி துறைக்கு டெலிபோனில் பேசியவண்ணம் உள்ளனர். ஆனால் கவுன்சிலிங் எதுவும் நடத்தாமல் தொடக்க கல்வி இயக்குனரகம் மற்றும் மாவட்ட கல்வி நிர்வாகம் சேர்ந்து அவர்களாகவே ஆசிரியர்களுக்கு இடங்களை தேர்ந்து எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு 2-ந்தேதிக்குள் பணிநியமன ஆணை தபாலில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

ஆனால் இது குறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் பணிக்கான காத்திருப்போர் நமக்கு வேலை கிடைக்குமா? கவுன்சிலிங் நடத்தப்படுவது எப்போது? என்று பல்வேறு கோணங்களில் சிந்தித்து வருகிறார்கள்.

மனக்குழப்பம்

சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளதால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பலர் 42 வயதை தாண்டி உள்ளனர். சிலர் 45 வயதை கடந்து உள்ளனர். அவர்களின் குழந்தைகள் 10-வது வகுப்பு அல்லது பிளஸ்-2 படிக்கிறார்கள். அவர்கள் தாங்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநியமனம் செய்யப்பட்டால் என்ன செய்வது குடும்பத்தை விட்டு எப்படி செல்வது என்று பலர் மனம் குழம்பி தொடக்க கல்வித்துறைக்கு நேரிலும் போனிலும் வந்து விசாரிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அதிகாரிகள் சரியான பதிலை சொல்லவில்லை.

No comments:

Post a Comment