Tuesday, December 6, 2011

டி.பி.ஐ. வளாகத்தில் குவிந்த பட்டதாரி ஆசிரியர்கள்


சென்னை, டிச. 5: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3,900 பேரை உடனடியாக பணி நியமனம் செய்யக் கோரி சென்னையிலுள்ள டி.பி.ஐ. வளாகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் திங்கள்கிழமை குவிந்தனர்.
 தங்களது பணி நியமனம் குறித்து தெரிந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து 200-க்கும் அதிகமானோர் வந்திருந்தனர். பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் மணி, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகளை அவர்கள் நேரில் சந்தித்தனர்.  ஓரிரு வாரங்களில் பணி நியமனம் இருக்கும் என்று அவர்களுக்கு அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.
 வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்காக கடந்த ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.
 உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களையும் பட்டியலில் சேர்த்து புதிய தேர்வுப் பட்டியல் அக்டோபரில் வெளியிடப்பட்டது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 1,200 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. ஆனால், பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் தேர்வுசெய்யப்பட்ட  3,700 ஆசிரியர்களுக்கு இதுவரை பணி நியமனம் வழங்கப்படவில்லை.
 தனியார் பள்ளிகளில் வேலைபார்த்து வந்த பட்டதாரி ஆசிரியர்கள், தேர்வுக் கடிதம் கிடைத்ததும் தங்களது பணியை ராஜிநாமா செய்தனர். பல ஆசிரியர்களை தனியார் பள்ளிகள் வேலையை விட்டு நீக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 இந்த நிலையில், தேர்வுசெய்யப்பட்டு இதுவரை பள்ளிகளில் நியமனம் செய்யப்படாததால் தாங்கள் பொருளாதாரரீதியாக மிகவும் சிரமப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். பணி நியமனம் தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அனுமதி கிடைத்ததும் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment