Friday, September 9, 2011

கவுன்சலிங் இல்லாமலே பணியிட மாறுதல் உத்தரவு


ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி
கவுன்சலிங் இல்லாமலே பணியிட மாறுதல் உத்தரவு
வேலூர், செப். 9:
ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கவுன்சலிங் நடத்தாமலேயே 100 பேருக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்கியது, ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியிலோ அல்லது நிர்வாக காரணங்களுக்காகவோ பணியிட மாறுதல் செய்யப்படுவர். இதில் ஏற்படும் தவறுகளை களைய கவுன்சலிங் மூலம் பணியிட மாறுதல் உத்தரவை வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கவுன்சலிங் மூலம் பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்படும். இதன் மூலம் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்று வந்தனர்.
இந்த ஆண்டு நடக்க வேண்டிய கவுன்சலிங் இன்னும் நடத்தப்படவில்லை. இதற்கிடையில் 100 பேருக்கு மேல் வேலூர் மாவட்டத்தில் பணியிட மாறுதலை பெற்றுள்ளனர். மதுரை மாவட்டத்தில் இருந்து ஆசிரியை ஒருவர், வேலூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்துள்ளார். அதேபோல் கத்தியவாடி, லத்தேரி, காட்பாடி, திருவண்ணாமலை, திருப்பாற்கடல், அம்மூர், திருவலம் என பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர். கவுன்சலிங் இல்லாமல் வழங்கப்பட்டுள்ள இந்த பணியிட மாறுதல் உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கூறுகையில், “கவுன்சலிங் இல்லாமல் இந்த பணியிட மாறுதல் உத்தரவு எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என்றே தெரியவில்லை. இதுபற்றி பள்ளிக்கல்வி துறை இயக்குனரகத்தில் கேட்டால் சரியான பதில் கிடைக்கவில்லை. காலிப்பணியிடம், ஏற்கனவே மாறுதல் பெற்று வரும்போது, இங்கு அந்த இடத்தில் ஏற்கனவே பணியாற்றும் ஆசிரியர் நிலை என எதுவுமே கருத்தில் கொள்ளப்படாமல் இந்த உத்தரவு வழங்கப்படுவது முரண்பாடானது” என்றனர்.
பள்ளிக்கல்வி துறை இயக்குனர் வசுந்தராதேவியை தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘�நீங்கள் குறிப்பிட்டது போல யாரும் நேரடியாக டிரான்ஸ்பர் செய்யப்படவில்லை. புகார்களில் சிக்கியவர்கள் மட்டுமே டிரான்ஸ்பர் செய்யப்படுகின்றனர்” என்றார்.

No comments:

Post a Comment