Monday, April 30, 2012

55 ஆயிரம் ஆசிரியர்கள் - 14 ஆயிரமாகத் தேய்ந்து போயுள்ளது

சென்னை:""அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்ற அறிவிப்பு, தற்போது 14 ஆயிரமாகத் தேய்ந்து போயுள்ளது,'' என்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


ஓராண்டில் மூன்றாவது அமைச்சர்: அ.தி.மு.க., ஆட்சி அமைந்த ஓராண்டு முடிவதற்குள் பள்ளிக் கல்வித் துறைக்கு மூன்றாவது அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார். முதலில் இருந்த சி.வி.சண்முகம், இந்த ஆண்டு 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும், அதன் பின் வந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர். அடுத்து வந்த அமைச்சர் சிவபதி, 26 ஆயிரத்து 686 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக அறிவித்தார்.

தற்போது பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த அமைச்சர் சிவபதி, 14 ஆயிரத்து 349 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்ற அறிவிப்பைச் செய்துள்ளார். ஆக, 55 ஆயிரம் ஆசிரியர்கள் என்ற அறிவிப்பு, 14 ஆயிரமாகத் தேய்ந்து போயிருக்கிறது. இந்த ஆட்சியில் ஆரம்பம் முதலே, பள்ளிக் கல்வி தொடர்ந்து சோதனைக்கு ஆளாகி வருகிறது.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் சமச்சீர் என்றால் கசக்கிறது


சென்னை : சமச்சீர் கல்வி என்றாலே அதிமுக ஆட்சிக்கு எட்டிக்காய் போல கசக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் தனது கேள்வி பதிலில் கூறியிருப்பதாவது: இலங்கையில் மசூதி இடிப்புப் பிரச்னை குறித்து நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளனவே?
இலங்கை மாத்தளை மாவட்டத்தில், தம்புள்ளா என்ற இடத்தில் இருந்த மசூதி ஒன்றை சில நாட்களுக்கு முன்பு, 2000க்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் கடப்பாரை சம்மட்டிகள் கொண்டு இடித்துடைத்து நாசம் செய்திருக்கின்றனர் என்று ஒரு செய்தி தெரிவிக்கின்றது.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் தமிழர்களை விரட்டி அடித்து விட்டு சிங்களர்களை குடியேற்றுதல், இந்துக் கோயில் களையும், கிறித்துவ தேவாலயங்களையும் நாசப்படுத்துதல் என வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. அவற்றின்  தொடர்ச்சியாகவே தற்போது மசூதிகளின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது.   இலங்கையில் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சிகள் கடும் கண்டனத்திற்குரியவை.

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப் பட்டுள்ளாரே?
1988 முதல் 1990 வரை இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எஸ்.பதக், சர்வதேச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி இருக்கிறார்.  20 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி ஒருவருக்கு இத்தகைய அரிய வாய்ப்பு கிடைத்திருப்பது உண்மையிலேயே பெருமைப்படத்தக்கதாகும்.
இலவச வேட்டி, சேலை வழங்குவதில் இழுபறி நீடித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

2011 மே மாதம் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, இந்தத் திட்டத்துக்காக ஸீ633 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டது,  ஆனால் 2012 ஜனவரியில் பொங்கலுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய வேட்டி,சேலைகள், மின்தடை, நூல் வழங்குவதில் தாமதம் போன்ற காரணங்களால் 40 முதல் 50 சதவிகிதப் பணியே நடந்து முடிந்திருக்கிறது என்றும்; இதே நிலை தொடர்ந்தால் ஜூன் மாதத்தில் கூட மக்களுக்கு இலவச வேட்டி,சேலையைக் கொண்டு சேர்க்க இயலாது என்றும் அதிமுக ஆதரவு நாளேடு ஒன்று, இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்கள் தேர்வில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வகுத்துள்ள வழிமுறைகளுக்கு மாறாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டதைப் பற்றி உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு ஒன்றை வெளியிட்டுள் ளதே? தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 23,8,2010க்கு முன்பு ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைமுறைகளை தொடங்கியது.  அதன் அடிப்படையில் 23,8,2010க்கு பின்பு பணியில் சேர்ந்தவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று கூறியுள்ளது.

ஆனால் 23,8,2010க்கு பின்பு பணியில் சேர்ந்த பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இதை  எதிர்த்து உயர்நீதிமன்றத்தை 25 ஆசிரியர்கள் அணுகினர்.  உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அளித்த தீர்ப்பில், 25 ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுத அரசு நிர்ணையித்துள்ள தேதியான 23,8,2010க்கு முன்பு வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சி அமைந்து ஓராண்டு முடிவதற்குள்ளாகவே பள்ளிக் கல்வித் துறைக்கு மூன்றாவது அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார்.  முதலில் இருந்த அமைச்சர் சி.வி. சண்முகம், இந்த ஆண்டு 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.  அதற்குப்பின் வந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி அதிமுக அரசு 55 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்துள்ளது என்றார்.  மூன்றாவதாக வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் 26,686 பேர் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படவுள்ளதாக அறிவித்தார்.  இந்த நிலையில் 18,4,2012 அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த போது அமைச்சர் என்.ஆர். சிவபதி 14,349 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பைச் செய்துள்ளார்.

ஆக, பள்ளிக் கல்வித்துறையின் மூன்று அமைச்சர்கள் செய்த அறிவிப்புகளின் மூலம் 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் என்பது 26 ஆயிரமாகச் சுருங்கி பிறகு 14 ஆயிரமாகத் தேய்ந்து போயிருக்கிறது. பஞ்ச பாண்டவர்கள் எத்தனை பேர் என்ற கேள்விக்கு; நான்கு பேர் என்று வாயால் சொல்லி, மூன்று விரல்களை கையில் காட்டி, இரண்டு என்று எழுதியதைப் போல இருக்கிறது; அதிமுக அமைச்சர்களின் அறிவிப்புகள்.

சமச்சீர் கல்வியில் தொடங்கிய சோதனை, சமச்சீர் பாடப் புத்தகங்களுக்கும் பரவி, தற்போது ஆசிரியர் நியமனத்திலும் நிலவுகிறது.  கல்வி முறை, பாடத் திட்டம், ஆசிரியர்கள் நியமனம் ஆகியவற்றில் முறையான சிந்தனையைச் செலுத்தாமல்; அதிமுக அரசு பள்ளிக் கல்வியைப் பாழடித்து வருவது கண்டும், பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவது கண்டும், மனம் பதைபதைக்கிறது.  ''சமச்சீர்'' என்றாலே, எட்டிக்காயாய்க் கசக்கிறதே அதிமுக ஆட்சியாளர்களுக்கு. 
இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கல்வி முறை, பாடத் திட்டம், ஆசிரியர்கள் நியமனம் ஆகியவற்றில் முறையான சிந்தனையைச் செலுத்தாமல்; அதிமுக அரசு பள்ளிக் கல்வியைப் பாழடித்து வருவது கண்டும், பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவது கண்டும், மனம் பதைபதைக்கிறது.  ''சமச்சீர்'' என்றாலே, எட்டிக்காயாய்க் கசக்கிறதே அதிமுக ஆட்சியாளர்களுக்கு.

Saturday, April 28, 2012

கல்வி இணை செயல்பாடுகளில் பகுதி நேர ஆசிரியர்கள்

ராமநாதபுரம்: "கல்வி இணை செயல்பாடுகளில், பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்தார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ கல்வி முறை, இந்தாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான, "தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு' முறை குறித்த பயிற்சி, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம், மண்டபம் ஒன்றியங்களில் நடந்த பயிற்சியை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இணை இயக்குனர் பழனிச்சாமி ஆய்வு செய்து பேசியதாவது:
 வரும் கல்வி ஆண்டிலிருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் முதல் செப்டம்பர் வரை ஒரு பருவமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஒரு பருவமும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒரு பருவமும் நடத்தப்படுகிறது. ஒரு பருவத்துக்கு ஒரு புத்தகம் மட்டுமே.
இந்தியாவில் முதன் முதலாக தமிழகத்தில் தான் இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன் முக்கிய நோக்கம், மாணவர்களின் செயல்பாடுகளை அதிகப்படுத்துவது. மாணவர்கள் எதில் திறமையாக இருக்கின்றனரோ அதில் ஈடுபடுத்துவது. இதன் மூலம் கல்வியைத் தவிர, மற்ற இணைச் செயல்களான வாழ்க்கை கல்வி, தையல், ஓவியம், விளையாட்டு உள்ளிட்டவற்றில் திறன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
 இந்த பணியில், 16 ஆயிரத்து 450 பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர். ஆசிரியர்களும் இதில் பங்கேற்க வேண்டும்.
முப்பருவ கல்வி முறையில், 40 மதிப்பெண்கள் வளரறி மதிப்பீடாகவும் (செயல்பாடுகளை வைத்து), 60 மதிப்பெண்கள் தொகுத்தறி மதிப்பீடாகவும் (தேர்வு முறையில்) வழங்கப்படும். செயல்வழி கற்றல் முறை (அட்டை முறை) இதனால், மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு, ஒன்பதாம் வகுப்பு, அதற்கு அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பில், இந்த முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படும். இவ்வாறு பழனிச்சாமி கூறினார்.

Friday, April 27, 2012

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் எப்போது?

கடலூர், ஏப். 26: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் குறைந்த ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு, தொழிற்கல்வி பாடப்பிரிவில் பாடம் கற்பிக்கும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் சான்றிதழ்கள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் சரிபார்க்கப்பட்டும், இதுநாள் வரையில் பணி நிரந்தரம் ஆக்கப்படுவதற்கான எந்த அறிகுறியும் தென்படாததால் விரக்தியில் உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடம் நடைமுறையில் உள்ளது.தொழிற்கல்வி பாடம் கற்பிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள் சொற்ப ஊதியத்தில் பள்ளிகளில் முழு நேரம் பணியாற்றி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முழு கல்வித் தகுதியுடன் பணியாற்றிவரும் இந்த ஆசிரியர்களின் சான்றிதழ்கள் கடந்த ஆட்சியில் சரிபார்க்கப்பட்டது. இதனால் பணி நிரந்தரம் ஆக்கப்படுவோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.
1978-ம் ஆண்டு மேல்நிலை பாடப்பிரிவில் தொழிற்கல்வி பாடப் பிரிவு தொடங்கப்பட்டது, மாணவர்களுக்கு செய்முறை பயிற்சியுடன் அதுதொடர்பான பாடம் கற்பிக்கப்பட்டது. தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்கப்பட்ட பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு பாடம் போதிக்க ஆசிரியர் இல்லாத நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பாடம் போதிக்கப்பட்டது. அவ்வாறு நியமிக்கப்பட்ட தகுதிவாய்ந்த ஆசிரியர்களுக்கு பாடவேளைக்கு தகுந்தாற்போல் சம்பளம் வழங்கப்பட்டது.
அவ்வாறு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஒருவழியாக 1996-க்கு முன்னர் பணியாற்றிய 352 பேரை 2001-ல் நிரந்தரம் செய்தனர். அதன் பின்னர் பகுதிநேர ஆசிரியர்களாக 1996 முதல் 2000-ம் வரையில் பணியாற்றிய 213 பேரை 2006-ல் பணி நிரந்தரம் செய்தனர். 

இந்நிலையில் 31.3.2007-க்கு பின்னர் அரசுப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் யாரையும் பகுதி நேர ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யக்கூடாது என பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில் 2000-ம் ஆண்டு முதல் அரசுப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பணியாற்றும் ஆசிரியர்களின் சான்றிதழ்கள், பாடக்குறிப்பு நோட்டுகள், வருகைப் பதிவேடு, சம்பள பட்டுவாடா உள்ளிட்ட ஆவணங்கள் 2010 ஜூலை மாதம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சரிபார்க்கப்பட்டது. இதனால் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என மகிழ்ச்சியாக இருந்த பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர்களுக்கு இதுநாள் வரையில் எந்த தகவலும் இல்லாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பகுதி நேர ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியது: அரசுப் பள்ளிகளில் பணியாற்றினால் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் குறைந்த ஊதியத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றி வருகிறோம். 40 வயதை கடந்த நிலையில் வேறு வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் குறைந்த ஊதியத்துடன் வறுமையில் வாழ்ந்து வருகிறோம்.

தமிழக அரசு அண்மையில் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல் உள்ளிட்ட சில பதவிகளுக்கு சிறப்பாசிரியர்களை நியமித்து, அந்த பணிக்கான ஊதியத்தையும் அறிவித்துள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முழுநேரமும் தொழிற்கல்வி பாடப் பிரிவில் பாடம் போதித்து பணியாற்றும் எங்களின் நிலையை தமிழக முதல்வரும், பள்ளிக் கல்வித்துறையும் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்' என்றார்.