Monday, August 13, 2012

குரூப்-2 தேர்வு வினாத்தாள் அவுட்?

ஈரோடு:
நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வில், வினாத்தாளின் நகலாக, கையால் எழுதப்பட்ட ஜெராக்சுடன், ஈரோட்டில் பெண் ஒருவர் பிடிபட்டார். இதனால், நேற்றைய வினாத்தாள் அவுட் ஆனதாக தகவல் பரவியதால், பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு, சி.எஸ்.ஐ., மேல்நிலைப் பள்ளி மையத்தில், ஈரோட்டைச் சேர்ந்த ரேவதி மற்றும் வித்யா ஆகிய இருவரும் தேர்வு எழுதினர். கேள்வித்தாளில், பொது அறிவு பிரிவில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளை, காலை, தேர்வு துவங்கும் முன், பெண் ஒருவர் ஜெராக்ஸ் வைத்து கலந்தாலோசித்தது நினைவுக்கு வந்ததால், இதுபற்றி, தேர்வு கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர்.

தேர்வு முடிந்ததும், வெளியே வந்தவர்கள், அப்பெண்ணை தேடி கண்டுபிடித்தனர். அவர், பவானியைச் சேர்ந்த செந்தில் மனைவி தனக்கொடி,26, என தெரியவந்தது.அப்பெண்ணிடம் இருந்த ஜெராக்சில், தேர்வில் கேட்கப்பட்டிருந்த, கேள்வி எண், 131 முதல், 170 வரையிலான, கேள்வி, சாய்ஸ் மற்றும் பதில் என, அனைத்தும், அச்சு பிசகாமல், எழுத்துப்பிழையுடன், கையால் எழுதப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி தனக்கொடி கூறியதாவது:என் கணவர், குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்., கல்லூரியில், நூலகராக பணியாற்றுகிறார். குரூப்-2 தேர்வு எழுத, கணவருடன் பஸ்சில் வந்தேன். பஸ்சில் வந்த சிலர், தேர்வு பற்றி பேசிக்கொண்டு வந்தனர். அவர்களிடம் இருந்து, ஜெராக்சை, என் கணவர் வாங்கி எனக்குக் கொடுத்தார். தேர்வு எழுதியபோது, கேள்வித்தாளும், என்னிடம் இருந்த விடைத்தாளும் ஒன்றாக இருந்தது. எனவே, கலெக்டரிடம் புகார் கொடுக்க நானும் வந்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பத்திரிகையாளர்களிடம், "பஸ்சில் வந்தபோது ஜெராக்ஸ் கிடைத்தது' என்றும், அடுத்த அரை மணி நேரத்தில், "பஸ் ஸ்டாண்டில் கிடைத்தது' என்றும், பின், நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தபோது, "ரயிலில் வரும்போது, என் கணவருக்கு கிடைத்தது' என, முன்னுக்குப் பின் முரணாக, தனக்கொடி பதில் கூறினார். தனக்கொடி மற்றும் இப்பிரச்னையை வெளிக்கொண்டு வந்த ரேவதி, வித்யா ஆகியோரை, கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, டி.ஆர்.ஓ., கணேஷ், ஆர்.டி.ஓ., சுகுமார் மற்றும் டவுன் டி.எஸ்.பி., பெரியய்யா ஆகியோர் தனித்தனியாக விசாரித்தனர் .தனக்கொடியின் கணவர் செந்திலை பிடித்து வர, பவானி போலீசார் முயன்று வருகின்றனர்.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் கூறியதாவது:
தேர்வு நடப்பதற்கு முன், வினாத்தாள் வெளியாக வாய்ப்பில்லை. ஆனால், ஈரோட்டில் தேர்வு எழுதிய பெண்ணின் கையில் வினாத்தாள் நகல் இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படித்திருந்தால் எளிது...:
பொது அறிவு வினா எளிதாகவே இருந்தது. பொதுத்தமிழிலும் கஷ்டமான கேள்விகளும் இல்லை. கணக்கிலிருந்தும் கேள்வி எளிதாகவே கேட்கப்பட்டிருந்தன. சுருக்கமாகச் சொன்னால் படித்திருந்தால் அனைத்து கேள்விகளும் எளிது,

No comments:

Post a Comment