Tuesday, August 30, 2011

பதிவு மூப்பு அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்களை தேர்வு செய்ய திட்டம்


பதிவு மூப்பு அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்களை தேர்வு செய்ய திட்டம்


சென்னை: முதல்வர் அறிவித்த 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் பெறப்பட்டு, அவர்களை அந்தந்த மாவட்டங்களிலேயே பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. காலை அல்லது பிற்பகல் என அரை நாள் வேலை, தொகுப்பூதியமாக மாதம் 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.பள்ளிக் கல்வித் துறையை சீரமைக்கும் வகையில், நேற்று முன்தினம் சட்டசபையில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். 775 பள்ளிகளின் தரத்தை உயர்த்தியும், இதற்காக ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதித்தும் முதல்வர் அறிவித்தார்.

மேலும், கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளுக்காக, 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இதன் கீழ், உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், கை வேலைப்பாடு, தையல் ஆசிரியர்கள், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர். குறிப்பாக, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அதிகளவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பல அரசுப் பள்ளிகளில், ஒரு வகுப்பில் 70, 80 மாணவர்கள் இருக்கின்றனர். இது போன்ற பள்ளிகளை, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் ஏற்கனவே அடையாளம் கண்டு, மாவட்டம் வாரியாக பட்டியல் எடுத்துள்ளது. அதன்படி, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில், கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையிலேயே, 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் தேவைப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பணி நியமனம் எப்படி? பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும், தொடக்க கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பகுதி நேர ஆசிரியர்கள், 32 மாவட்டங்களிலும் தேவைப்படுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும், எத்தனை ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் என்ற விவரங்களையும் பட்டியலிட்டு, அதை பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்க கல்வித் துறையிடம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் ஒப்படைத்துள்ளது.அதன்படி, ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும், பதிவு மூப்பு பட்டியலை பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், அவர்களை அந்தந்த உள்ளூர் மாவட்டங்களிலேயே பணி நியமனம் செய்ய, இரு துறைகளும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மாவட்டத்தில் அதிக காலிப் பணியிடங்கள் இல்லாதபட்சத்தில், அருகில் உள்ள மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்படுவர்.இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "எந்த முறையில் பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என்பது குறித்து, இதுவரை முடிவு எடுக்கவில்லை. அரசிடம் இருந்து உரிய வழிகாட்டுதல் வந்த பிறகே முடிவு எடுக்கப்படும்' என்றார்.

சம்பளம் எவ்வளவு?  பகுதி நேர ஆசிரியர்களுக்கு, தலா 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கான சம்பளத்தை, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் வழங்கும். மாவட்டம் வாரியாக உள்ள எஸ்.எஸ்.ஏ., திட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், சம்பளம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு 99 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.வேலை நேரம்: ஆசிரியர்களின் பணியைப் பொருத்து, காலை அல்லது பிற்பகல் என, ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, அரை நாள் வேலை செய்யும் வகையில், உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்தப் பணி நியமனங்கள், அடுத்த மாதத்திற்குள் நிறைவேற்றி முடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

பட்டதாரிகள் உற்சாகம்: பகுதி நேர ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு, பட்டதாரிகளிடையே படு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படியாவது, "உள்ளே' நுழைந்து விட்டால், ஆட்சி முடியும் தறுவாயில், பணி நிரந்தரம் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகின்றனர்.முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களும், பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகளை, 2016ம் ஆண்டு முதல்வர் பரிசீலிப்பார் என்பதால், பகுதி நேர வேலையில் சேர, பட்டதாரிகள் தீவிர ஆர்வத்துடன் உள்ளனர்.

THANKS:DINAMALAR

No comments:

Post a Comment