Thursday, March 15, 2012

ஆசிரியர்கள் பணி நியமனம் முறையாக நடக்கவில்லை

தர்மபுரி: "பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் பணி நியமனம் முறையாக நடக்கவில்லை' என கலெக்டரிடம் தர்மபுரி மாவட்ட வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சங்க தலைவர் செல்வம், செயலாளர் அசோக்குமார் ஆகியோர் கலெக்டரிடம் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசு அறிவித்த பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் நேர்முக தேர்வு கடந்த டிசம்பர் 26ம் தேதி தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் ஆகியோர் தலைமையிலான கல்வி அதிகாரி குழுவினர் நேர்முக தேர்வு நடத்தினர். மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் பணியிடம், 179 பணியிடங்கள்.
அரசு ஆணையில் முறையான கல்வி தகுதி, பதிவுமூப்பு, அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொணடு பணியிடம் வழங்குவதாக அரசு அறிவித்து இருந்தது. ஆனால், எங்களுக்கு இளையோர், 2009, 2010 மற்றும் 2011 ஆகிய கல்வியாண்டில் உடற்கல்வி முடித்து பதிவு செய்தவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அவர்களை காட்டிலும் அதிகம் இருந்தும், கல்வி தகுதி இருந்தும் எங்களுக்கு பணி கிடைக்கவில்லை. மாவட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் பணிநியமனம் முறையாக நடக்கவில்லை. குறிப்பாக உடற்கல்வி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு பணி கிடைத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment