Tuesday, November 15, 2011

1,740 இடைநிலை ஆசிரியர் நியமனம் : விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது!

சென்னை: தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 1,740 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பம் விநியோகம் நேற்று தொடங்கியது.
தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், புதியதாக 1,740 ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்ற னர். அவர்களை தெரிவு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்றுள்ளது. இதற்காக, கடந்த வாரம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் கூறியபடி, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏற்கெனவே உள்ள இடைநிலை ஆசிரியர்கள் தகுதிப் பட்டியல், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று ஒட்டப்பட்டது.
அந்த பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள், தங்கள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் உரிய விண்ணப்பம் பெற்றுக் கொள்ள வேண்டும். இனவாரியான பதிவு மூப்பு தேதிக்குள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இடைநிலை ஆசிரியர்கள், பெயர் பட்டியலில் விடுபட்டு இருந்தால் அவர்கள் மட்டும் வேலை வாய்ப்பக அலுவலகத்தில் சான்று பெற்று, அதை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடம் கொடுத்து விண்ணப்பம் பெற வேண்டும் என்றும், ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து இருந்தது.
ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தள பட்டியலில் பெயர் உள்ளவர்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சான்று பெறத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, அனைத்து மாவட்டத்திலும் இடைநிலை ஆசிரியர் தகுதிப் பட்டியல் நேற்று ஒட்டப்பட்டது. விண்ணப்பங்களும் விநியோகம் செய்யப்பட்டன. விண்ணப்பங்களை பெற்று, அவற்றை பூர்த்தி செய்து இந்த மாதம் 23ம் தேதிக்குள் அதே அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட இடைநிலை ஆசிரியர் பணியிட ங்களை பொருத்தவரை மொத்தம் 1,740 இடங்கள் காலியாக உள்ளன. ஒரு பணிக்கு 5 பேர் என்ற விகிதத்தில் சான்று சரிபார்ப்புக்கு நேரில் அழைக்கப்படுவர். இதனால் சுமார் 10,000 பேர் சான்று சரிபார்ப்புக்கு வரவேண்டும்
சென்னையில் தாமதம்: இந்நிலையில், சென்னையில் நேற்று காலை 10 மணிக்கு திறக்க வேண்டிய மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், என்ன காரணத்தாலோ தாமதமாக திறக்கப்பட்டது. அதற்கு முன்னதாகவே இடைநிலை ஆசிரியர்கள் தகுதிப் பட்டியலில் தங்களின் பெயரை பார்க்க ஏராளமானவர்கள் குவிந்தனர். அலுவலகம் தாமதமாக திறக்கப்பட்டதால், அதிகாரிகளிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். தகுதிப் பட்டியல் அதற்கு பிறகு ஒட்டப்பட்டது.
அதில் மொழி மற்றும் இன வாரியான இறுதிப் பதிவு மூப்பு (கட்ஆப் தேதி) இடம் பெற்று இருந்தன. தமிழ் வழியில் படித்தவர்களுக்கான பதிவு மூப்பு பட்டியலில் பொதுப் பிரிவினர் 2002&2010, பிசி 2000&2010, பிசி (முஸ்லிம்) 2004&2010, எம்பிசி 2004&2010, எஸ்சி 2007&2010, எஸ்சி (அருந்ததியினர்) 2008&2010, எஸ்டி 2007&2010 வரை பதிவு மூப்பு கட்ஆப் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
சென்னை மாவட்டத்தில் மட்டும் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படித்தவர்கள் 450 பேர் தகுதிப் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர். தமிழ் வழியில் மட்டும் படித்தவர்கள் 376 பேர் இடம் பெற்று இருந்தனர்.

No comments:

Post a Comment