Tuesday, November 22, 2011

மாநில பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு: ஓரிரு நாளில் அரசு அறிவிப்பு




சென்னை, நவ. 21: வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் சுமார் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், 3,565 இடைநிலை ஆசிரியர்கள் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 3,187 பேர், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரகத்துக்காக 34 முதுநிலை விரிவுரையாளர்கள் ஆகியோர் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் உள்ளிட்ட 16,549 சிறப்பாசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இதுதொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறையின் மூலம் இந்த ஆண்டு மொத்தம் 55 ஆயிரம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். பள்ளிக் கல்வித் துறையில் ஒரே ஆண்டில் இந்த அளவு அதிகமான பணி நியமனம் இந்த ஆண்டுதான் நடைபெற உள்ளது.
 முதல்வரின் அறிவிப்புப்படி நிரப்பப்பட உள்ள இடங்கள் விவரம்: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - 3,187, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறை) - 9,735, இடைநிலை ஆசிரியர்கள் - 3,565, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் முதுநிலை விரிவுரையாளர்கள் - 34, சிறப்பாசிரியர்கள் - 16,549.
 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள்: அலுவலக உதவியாளர்கள் - 5,000, இளநிலை உதவியாளர்கள் - 344, ஆய்வக உதவியாளர்கள் - 544. பள்ளிகளில் இப்போது காலியாக உள்ள 14,377 ஆசிரியர் பணியிடங்கள்.
 எதிர்பார்ப்பு: இந்தப் பணியிடங்கள் எப்படி நிரப்பப்படும் என்று ஆசிரியர் பட்டம் பெற்றவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களிடையே எதிர்பார்ப்பு இருந்தது.
 இதற்குப் பதிலளிக்கும் வகையில் தமிழக அரசு ஆணை பிறப்பிக்க உள்ளதாகத் தெரிகிறது. அலுவலக உதவியாளர்கள் மாவட்ட கல்வி அலுவலர், பள்ளிக் கல்வித் துறை மூலமாக கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவும், ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்பட உள்ளன.

No comments:

Post a Comment