Friday, January 13, 2012

31-ந்தேதிக்குள் பணி நியமன ஆணை


சென்னை, ஜன.13-

அரசு பள்ளிக்கூடங்களில் புதிதாக நியமிக்கப்பட உள்ள 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு 31-ந் தேதிக்குள் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் முகமது அஸ்லாம் உத்தரவிட்டுள்ளார். பணிநியமன ஆணை பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வேலையில் சேர வேண்டும்.

தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) கீழ் அரசு பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக 16,549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தையல், ஓவியம், இசை, உடற்கல்வி, கம்ப்ïட்டர் உள்பட பல்வேறு பாடங்களைச் சேர்ந்த இந்த ஆசிரியர்கள் வாரத்தில் 3 நாட்கள் (தினசரி 3 மணி நேரம்) பணியாற்ற வேண்டும். அவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு அதிகபட்சம் 4 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கு ஏற்ப கூடுதல் சம்பளம் வழங்கவும் அரசு முன்வந்துள்ளது. இதன்படி, ஒரு ஆசிரியர் 2 பள்ளிக்கூடங்களில் வேலை பார்க்க நேரிட்டால் அவருக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி தமிழகம் முழுவதும் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (பொது), கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி (எஸ்.எஸ்.ஏ.), மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி, சம்பந்தப்பட்ட பாடத்தில் மூத்த ஆசிரியர் ஆகியோர் அடங்கி தேர்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் தகுதியுள்ள நபர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று நேர்முகத்தேர்வுகளை நடத்தி வருகிறார்கள்.


விண்ணப்பித்த அனைவருக்குமே சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக்கடிதங்கள் அனுப்பப்பட்டாலும் தொழிற்நுட்ப ஆசிரியர் பயிற்சி (டி.டி.சி.) முடிக்காதவர்கள் சரிபார்ப்பின்போது நிராகரிக்கப்பட்டனர். தேர்வுமுறை மாவட்டத்திற்கு மாவட்டம் வித்தியாசமாக இருந்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் மாணவ-மாணவிகளின் கூடுதல் கல்வித்தகுதி, பணி அனுபவம், வேலைவாய்ப்பு பதிவுமூப்பு, இதர திறமைகள் போன்ற விவரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மதிப்பெண் வழங்கப்பட்டது.

பணிஅனுபவ சான்றிதழ்

பணி அனுபவ விவரங்கள் கேட்கப்பட்டிருந்ததால் ஏராளமான மாணவ-மாணவிகள் தாங்கள் பாடம் சொல்லிக்கொடுத்த பள்ளியிடம் இருந்து அனுபவச் சான்று வாங்கி வந்திருந்தனர். எனினும் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அல்லது உதவி தொடக்கக்கல்வி அதிகாரி அல்லது மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரியிடம் சான்றொப்பம் (கவுண்டர்-சைன்) பெற்றுவராத பணி அனுபவச் சான்றுகளை தேர்வுக்குழுவினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், பகுதி நேர சிறப்பு ஆசிரியர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு இந்த மாத இறுதிக்குள் வேலைக்கான உத்தரவு வழங்க வேண்டும் என்றும், உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் வாரத்தில் பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மாநில திட்ட இயக்குனர் ஏ.முகமது அஸ்லாம் `தினத்தந்தி' நிருபரிடம் நேற்று கூறியதாவது:-

சீனியாரிட்டி அடிப்படையிலா?

எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் அரசு பள்ளிக்கூடங்களுக்கு 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி அனைத்து மாவட்டங்களிலும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஆசிரியர்களை எந்த முறையில் தேர்வு செய்ய வேண்டும்? என்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஏற்கனவே வழிகாட்டி நெறிமுறைகள் அனுப்பப்பட்டன. அதன் அடிப்படையில் சிறப்பு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கு பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. முன்கூட்டியே முடித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அவர்களின் கல்வித்தகுதி என்ன? மாணவர்களுக்கு எப்படி பாடம் எடுப்பார்கள்? என்னென்ன இதர திறமைகள் உள்ளன? போன்றவை எல்லாம் கணக்கில் கொள்ளப்படும்.

31-ந் தேதிக்குள் நியமன ஆணை

எவ்வித புகாருக்கும் இடம் தராத வகையில் ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்திலாவது புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு உள்ளிட்ட தேர்வு பணிகளை 15-ந் தேதிக்குள் முடித்துவிட்டு தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வருகிற 31-ந் தேதிக்குள் பணிநியமன ஆணை அனுப்பப்பட்டுவிட வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி முதல் வாரத்தில் வேலை
பகுதி நேர சிறப்பு ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் பிப்ரவரி முதல் வாரத்தில் பணியில் சேர்ந்துவிட வேண்டும். ஒரு ஆசிரியர் இரண்டு பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் சூழ்நிலை ஏற்பட்டால் அவருக்கு ஒரு பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் வீதம் இரண்டு பள்ளிகளுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.



1 comment:

  1. select teachers on employment seniority basis other mode of selection will lead to corruption and bribe issues. select one teacher for one school because lot of unemployed teachers are there.

    dr.m.sivakumar

    ReplyDelete