Saturday, January 7, 2012

63 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி: சண்முகம் பெருமிதம்

விழுப்புரம் : "இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட விளையாட்டுத் துறைக்கு 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த ஒரே முதல்வர் ஜெ., மட்டுமே' என, கல்வி அமைச்சர் சண்முகம் தெரிவித்தார். விழுப்புரத்தில் நடந்த மாநில அளவிலான 29வது பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சண்முகம் பேசியதாவது:
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில், 3 ஆயிரத்து 956 மாணவ, மாணவியர் கலந்து கொள்கின்றனர். ஜெ., முதல்வராக இருந்த போது தான், சென்னையில் உலகத்தரம் வாய்ந்த நேரு உள்விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம் போன்றவை அமைக்கப்பட்டன. டில்லியில் விளையாட்டு அரங்கம் சரியில்லாததால் பல்வேறு விளையாட்டுகள், தற்போது சென்னையில் நடத்தப்படுகின்றன.

கல்வித் துறையும், விளையாட்டுத் துறையும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை.


ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை இல்லாமலேயே, இந்த ஒரே ஆண்டில் 63 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க, முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டில் ஏற்பட்ட 11 ஆயிரத்து 549 ஆசிரியர் காலி பணியிடங்கள் முழுவதும் நிரப்படும். 1990ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை நிரப்பப்படாமல் இருந்த, 14 ஆயிரத்து 377 கூடுதல் ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. கல்வித் துறையில் பல்வேறு பணிகளில், 16 ஆயிரத்து 449 பேர் நியமிக்கப்படுகின்றனர்.

இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு, ஒரே ஆண்டில் 63 ஆயிரம் ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவது இதுவே முதல் முறை.

ஆயிரத்து 54 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் கேட்காமலேயே வாரி வழங்கும் அரசாக ஜெ., அரசு உள்ளது. இந்தியாவிலேயே, மற்ற மாநிலங்களை விட விளையாட்டுத் துறைக்கு, 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த ஒரே முதல்வர் ஜெ., மட்டுமே.

மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, இந்த அரசு, பல கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது. மாணவர்கள் அரசு திட்டங்களைப் பயன்படுத்தி, உலக அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களாக விளங்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் சண்முகம் பேசினார்.

No comments:

Post a Comment