Friday, January 6, 2012

பொருளாதார பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி

சென்னை:தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், பொருளாதார பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உத்தரவிடப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், தமிழரசன் உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்த மனு:உயர்நிலைப் பள்ளிகளில் பொருளாதாரம் மற்றும் வணிகம் சம்பந்தப்பட்ட பாடங்கள் அறிமுகப்படுத்தவில்லை.

இதனால், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை, இந்தப் பாடங்களுக்கு என, பாடத் திட்டம் கிடையாது. மேல்நிலைப் பள்ளியில் தான் பொருளாதாரப் பாடம் நடத்தப்படுகிறது. எனவே, பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் தான், மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் எடுக்க முடியும்.நாங்கள் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளோம். பி.எட்., படித்துள்ளோம். பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்களை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமிப்பதில்லை. முதுகலை உதவியாளர் பணியிடங்களில் தான், மேல்நிலைப் பள்ளிகளில் அவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

தற்போது, பொருளாதாரத்தில் பட்டம் மற்றும் பி.எட்., முடித்தவர்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். நாங்கள் 20 ஆண்டுகளாக வேலைக்காக காத்திருக்கிறோம். முதுகலை உதவியாளர் பணியிடங்கள், குறைவாகவே உள்ளன. கடந்த ஐந்தாண்டுகளில், முதுகலை உதவியாளர் (பொருளாதாரம்) பணிக்கு, 28 பேர் தான் நியமிக்கப்பட்டனர்.அரசு மேல்நிலைப் பள்ளிகள் பலவற்றில், பொருளாதாரப் படிப்பு அறிமுகப்படுத்தாததால், அதற்கான பணியிடங்களே இல்லை. மற்ற பாடங்களில் தகுதி பெற்றவர்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பரிசீலிக்கப்படுகின்றனர்.

ஆறு முதல் 10ம் வகுப்பு வரை, பொருளாதார பாடம் இல்லாததால், பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பரிசீலிப்பதில்லை.எனவே, தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில், பொருளாதார பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க பரிசீலிக்குமாறு உத்தரவிட வேண்டும். இதுகுறித்து நாங்கள் அனுப்பிய மனுக்களை பரிசீலிக்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு நீதிபதி சந்துரு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜரானார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி சந்துரு உத்தரவிட்டார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=380089

1 comment: