Friday, January 6, 2012

பட்டதாரிகளின் திறன் மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டங்கள்

சென்னை, ஜன. 5: படித்த வேலையில்லாத பட்டதாரிகளின் திறன் மேம்பாட்டுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதற்கான நிதியையும் ஒதுக்கி அவர் உத்தரவிட்டுள்ளார். 
 இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 
தமிழகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களில் 15 ஆயிரம் பேருக்கு திறன் எய்தும் பயிற்சி அளிப்பதற்காக ரூ. 6 கோடியும், அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 25 ஆயிரம் மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சி அளிக்க ரூ.7.5 கோடியும், பயிற்றுநர்களுக்கான பயிற்சித் திட்டத்துக்காக ரூ.50 லட்சமும் அனுமதித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 உயர் தொழில் நுட்பங்களான வானூர்தி பராமரிப்பு, உற்பத்தி சார்ந்த துறை, கப்பல் துறை மற்றும் அதுசார்ந்த சேவைப் பிரிவுகளில் இளைஞர்களைப் பயிற்றுவிக்க உலகத் தரம் வாய்ந்த ஒரு பயிற்சி மையம் தனியார் பங்கேற்புடன் அமைப்பதற்கு முதல் கட்டமாக ரூ.25 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது.  அரசு தொழில்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களின் அறிவுத்திறன் மேம்பட மின்னணு பாட முறை மற்றும் பணிச்சூழலின் மாதிரி அடிப்படையிலான பயிற்சியை அறிமுகப்படுத்த ரூ.50 லட்சம் ஒதுக்கப்படும். 
 திறன் பயிற்சி பெறுபவர்கள், தம்மிடையே பெருமித உணர்வைப் பெறும் வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இருந்து தேர்ச்சி பெற்று வெளிவரும் மாணவர்களுக்கும், குறுகியகால தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கும், அரசு முத்திரையுடன்கூடிய திறன் அடையாள அட்டை வழங்குவதற்காக ரூ.25 லட்சத்தை அனுமதித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  தரம்மிக்க பயிற்றுநர்களைத் தொடர்ந்து உருவாக்கும் நோக்குடன் பயிற்றுநர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தை உருவாக்க ரூ.25 லட்சமும், மாநிலத்தில் தொழில் திறன் பெற்றவர்களின் விவரங்களைச் சேகரிக்கவும், பராமரிக்கவும் தமிழ்நாடு மாநில திறன் பதிவுத் தொகுப்பை உருவாக்கவும் ரூ.15 லட்சம் அனுமதிக்கப்படுகிறது.
பணி நியமனம் பெறுவதற்கு உதவும் வகையில், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் ஒரு தனியார் துறை பணி நியமன உதவிப் பிரிவு தொடங்கப்படும்.  தகுதி வாய்ந்த விருப்பமுள்ள இளைஞர்களைத் தேர்வு செய்ய வருகை தரும் தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் அதில் பங்கேற்க வரும் இளைஞர்களின் வசதிக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்க ரூ.1.93 கோடியும், மேற்கூறிய திட்டங்களைச் செயல்படுத்த பணியாளர்களின் ஊதியம், திட்டத்துக்கான ஆலோசகரின் ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்காக ரூ.2.17 கோடியும் ஒதுக்கப்படுகிறது. 
இந்தத் திட்டத்தை விளம்பரப்படுத்தவும் கூட்டங்களை நடத்தவும் மனித வள தேவையைக் கண்டறியவும் ரூ.70 லட்சம் ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.20.20 கோடி ஒதுக்கப்படுகிறது.  முக்கிய நகரங்களில்... தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் பயிற்சியாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு இடையே போட்டித் திறனை மேம்படுத்தவும் 18 தொழிற்பிரிவுகளில் நடத்தப்பட்டு வரும் மாநில அளவிலான திறனாய்வுப் போட்டிகள் ஒவ்வொன்றிலும் சிறந்த பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுபவருக்கு இப்போது ரொக்கப் பரிசுத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும். 
 தமிழகத்தில் சென்னை, கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தூத்துக்குடி, திருச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.  இந்தப் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று தொழில் நுட்பக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம், இளங்கலைப் பட்டம், பொறியியல் படிப்பு, பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் ஆகிய மேற்படிப்பினைத் தொடர முன்னாள் குழந்தை தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிதியுதவியை ரூ.250-லிருந்து ரூ.500 ஆக உயர்த்தி படிப்புக் காலம் முழுவதும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் 317 பேர் பயன் அடைவர். இதனால் அரசுக்கு ரூ.19.2 லட்சம் கூடுதலாக செலவு ஏற்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://dinamani.com/

No comments:

Post a Comment