Friday, February 3, 2012

56 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் நியமனம்: அமைச்சர் சிவபதி

ஆசிரியர் நியமனம், போட்டித்தேர்வு முறையில் நடைபெறும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து, பதிவுமூப்பு அடிப்படையில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என நம்பி, 40, 45 வயது நிரம்பியவர்கள் எல்லாம் பாதிக்கப்படுவார்கள். எனவே, 50 சதவீதம் பதிவுமூப்பு அடிப்படையிலும், 50 சதவீதம் தேர்வு அடிப்படையிலும் ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி: நடப்பு கல்வியாண்டில், 56 ஆயிரத்து 453 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில், பல்வேறு வகையான ஆசிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு வகை ஆசிரியர்களும், ஒவ்வொரு வகையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள், பதிவு மூப்பு மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.முதுகலை ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பட்டதாரி ஆசிரியர்கள், பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

குணசேகரன்-இந்திய கம்யூனிஸ்ட்: பகுதி நேர ஆசிரியர் நியமனத்தில், பல்வேறு தகவல்கள் வருகின்றன. எனவே, பதிவுமூப்பு அடிப்படையில், அந்த நியமனங்களை செய்திட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வணிகவரித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்: பகுதிநேர ஆசிரியர்களை தேர்வு செய்ய, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில், 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க, முழுக்க பதிவுமூப்பு அடிப்படையில், பகுதிநேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள். பதிவுமூப்பு தகுதி, ஒரு அங்கமாக இருக்கும். கல்வித் தகுதி, சிறப்புத் தகுதிகள் என, பல்வேறு அளவுகோள்கள் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு மதிப்பெண்கள் தரப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தான், பகுதிநேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆசிரியர்களை, பதிவுமூப்பு மற்றும் தேர்வு ஆகிய இரு முறைகளில், தலா 50 சதவீதம் என்ற அளவில் தேர்வு செய்ய வேண்டும் என, உறுப்பினர் வலியுறுத்தினார். கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தித்தான், ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தி, முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்யும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

 மத்திய அரசின் உத்தரவுப்படிதான் தகுதித் தேர்வு


அமைச்சர் சி.வி.சண்முகம், ``மத்திய அரசு சட்டப்படி அனைவரும் தகுதித் தேர்வு மூலம் தான் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன்படி தான் முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பகுதிநேர ஆசிரியர்கள் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் இல்லை. அவர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் பதிவு செய்திருக்க வேண்டும். தகுதிகள் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தான் கூறப்பட்டுள்ளது.

 


சிவபதிக்கு உதவிய சண்முகம்:பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக, கடந்த 27ம் தேதி சிவபதி பதவியேற்றார். அடுத்த 2 நாட்களில், கவர்னர் உரை, அதைத்தொடர்ந்து கவர்னர் உரை மீதான விவாதம் நடந்து வருகிறது. இதனால், துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடியாத நிலையில் இருந்த சிவபதிக்கு, சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை தொடர்பான பல கேள்விகளுக்கு, வணிக வரித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலளித்து உதவினார்.

No comments:

Post a Comment