Saturday, February 11, 2012

தேர்வுத்துறையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தேக்கம்

அரசு தேர்வுத்துறையில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தேக்கம் அடைந்துள்ளன. பணியாளர் பற்றாக்குறை காரணமாக, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலான விண்ணப்பங்கள், சரிபார்க்கப்படாமல் உள்ளன.

குவியும் சான்றிதழ்:தமிழக அரசின் எந்த அரசுத்துறை பணிகளாக இருந்தாலும், அவர்களின் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை, உண்மைத்தன்மை அறிவதற்காக, தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.இந்த சான்றிதழ்களை, தேர்வுத்துறையில் உள்ள வேறொரு அசல் சான்றிதழ்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, சரியாக இருந்தால், "உண்மையான சான்றிதழ்' என, தேர்வுத்துறை தெரிவிக்கும். இதில், பல போலியான சான்றிதழ்களும் பிடிபடுகின்றன.

பணியாளர் பற்றாக்குறை:முந்தைய ஆட்சியில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், 40 ஆயிரம் ஆசிரியர்களும்; முந்தைய ஆட்சியில் கடைசியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் படி, இந்த ஆட்சியில், 5,000 ஆசிரியர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர். சரிபார்ப்புக்காக இவர்களின் சான்றிதழ்கள், தேர்வுத்துறையில் தினமும் மலைபோல் குவிந்து வருகின்றன.சரிபார்ப்பு பணிகளுக்காக, ஏற்கனவே, 5 பிரிவுகள் இயங்கி வந்தன. தற்போது, மேலும் ஒரு பிரிவு கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவுகளில், தலா, 6 பேருக்கு பதிலாக, 4 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.கடுமையான பணியாளர் பற்றாக்குறை காரணமாக, பணிகள் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன. தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் மட்டும், 90 இடங்கள் காலியாக இருக்கின்றன.

நியமன நடவடிக்கை:இதுகுறித்து, துறை வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த 1998ல் இருந்து நடந்த தேர்வுகளுக்கான சான்றிதழ்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் பணிகளில் சேர்பவர்கள், பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றனர். இவர்களின் சான்றிதழ்களை தேடிப் பிடித்து, சரிபார்த்து வழங்குவது சிரமமாக உள்ளது. மேலும், சான்றிதழ்களை தொட்டாலே தூள், தூளாக ஒடிந்துவிடும் அளவிற்கு சேதம் அடைந்துள்ளன.

சான்றிதழ் சரிபார்ப்பு கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அப்படியே கிடக்கின்றன. தற்போது, மேலும் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், பணியில் சேர்ந்து வருகின்றனர். இவர்களின் சான்றிதழ்கள் வரும்போது, பணிச்சுமை மேலும் அதிகரிக்கும். சான்றிதழ் சரிபார்ப்பு பிரிவில், போதிய பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாற்றாந்தாய் மனப்பான்மை:தேர்வுத்துறையை, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசு பார்ப்பதாக, துறை அதிகாரிகள் கூறுகின்றனர். துறையில் உள்ள எந்தப் பிரச்னைகளையும், உயர் அதிகாரிகளோ, அமைச்சரோ கண்டுகொள்வது கிடையாது என்றும் புலம்புகின்றனர்.
மேலும், 200க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப, முந்தைய ஆட்சியில் கடைசிவரை நடவடிக்கை எடுக்கவில்லை; இந்த ஆட்சியிலும், இதுவரை நடவடிக்கை இல்லை.வருகிற அமைச்சர்களும், அதிகாரிகளும், "நடவடிக்கை எடுக்கப்படும்...' என, கூறுகின்றனரே தவிர, துறையை சுத்தமாக கண்டுகொள்வதில்லை என்றும், ஊழியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

No comments:

Post a Comment