Wednesday, February 15, 2012

நவீன வசதிகளுடன் அரசு ஆரம்பப் பள்ளி!

மீனாட்சிவலசு அரசு ஆரம்பப் பள்ளி, தண்ணீரைச் சுத்திகரிக்கும் கருவி.
காங்கயம்: ஒரு பள்ளிக்கூடம் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு பல பள்ளிகளை உதாரணம் காட்டலாம். ஆனால், எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒருசில பள்ளிகளைத் தான் உதாரணம் காட்ட முடியும்.  ÷அத்தகைய பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்கிறது, காங்கயம் ஒன்றியம், பாப்பினி ஊராட்சியைச் சேர்ந்த மீனாட்சிவலசு கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்பப் பள்ளி.  ÷இப் பள்ளியில 1 முதல் 5-ம் வகுப்பு வரை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மீனாட்சி வலசு கிராமத்தின் நுழைவாயிலில் இயற்கையான சூழலில் இப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி மாணவ மாணவிளுக்கு தனியார் பள்ளிகளைப் போன்ற சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.  ÷பள்ளி முழுவதும் தரையில் டைல்ஸ் பதிக்கப்பட்டு அழகாகக் காட்சியளிக்கிறது. மாணவ மாணவிகள் கணினி கற்பதற்கென தடுப்பு அமைக்கப்பட்டு, சிறிய அறை உருவாக்கப்பட்டுள்ளது.  ÷இயற்கையான சூழலில் அமைந்துள்ள இப்பள்ளியில், மின் விசிறி தேவைப்படாத நிலையிலும் அந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது. மாணவர்களுக்குத் குடிநீரைச் சுத்திகரித்து வழங்குவதற்கு, தேவையான கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. அந்த நீரில்தான் மாணவர்களுக்கான உணவும் சமைக்கப்படுகிறது.  மேலும், வெப்பமானி மூலம் காலை, மதியம், மாலையில் வெப்ப அளவை பதிவு செய்து, அறிவிப்பு பலகையில் எழுதிவைக்கின்றனர்.  பள்ளியில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டிருப்பதற்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் ஒரு காரணம் என்றால், தலைமை ஆசிரியர் எஸ்.அமுதவல்லி, ஆசிரியர் ஆ.கனகராஜ் ஆகியோரின் அர்ப்பணிப்பும், கல்விக்குழு உறுப்பினர்களின் பங்களிப்பும் இன்னொரு காரணம் என்கின்றனர் கிராம மக்கள்.  சிறப்பாக கல்வி கற்பிக்கப்படுவதால் கடந்த ஆண்டுகளில் 15-க்கும் குறைவாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, இப்போது 30-ஐ தாண்டியுள்ளது.  
இது குறித்து முன்னாள் கல்விக்குழு உறுப்பினரும், பாப்பினி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவருமான டி.சிவகுமார் கூறும்போது, ""இந்தப் பள்ளியில் கணினி, குடிநீர்க் குழாய், தரைத்தளத்துக்கு டைல்ஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மக்களின் பங்களிப்போடுதான் செய்து முடித்தோம்'' என்றார்.  
தற்போதைய கல்விக்குழு தலைவரும், பாப்பினி ஊராட்சி வார்டு உறுப்பினருமான டி.ராஜேஸ்வரி கூறும்போது, ""பள்ளிக்குச் சுற்றுச்சுவர், மாணவர்களுக்கு விளையாட்டுக் கருவிகள் உள்ளிட்ட வசதிகளையும் செய்து தரத் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
இந்தப் பள்ளியைப் போன்று அனைத்து அரசுப் பள்ளிகளும் இருந்துவிட்டால், மாணவர்கள் பாதியிலேயே பள்ளியிலிருந்து விலகுவது குறையும்; கல்வித் தரமும் உயரும்.  ÷இதுபோன்ற வசதிகளை அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் செய்து தர அரசும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment