Thursday, February 9, 2012

முழுநேர சிறப்பு ஆசிரியர் பதிவுமூப்பு பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும்

சென்னை, பிப்.8-


அரசு பள்ளிக்கூடங்களில் முழுநேர சிறப்பு ஆசிரியர் பதவிக்கான உத்தேச மாநில பதிவுமூப்பு பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளது. வழக்கம்போல் ஒரு காலி இடத்திற்கு 5 பேர் என்ற அடிப்படையில் பதிவுதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


சிறப்பு ஆசிரியர்கள்


அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி) தேர்வு செய்வதற்கான பணிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது இறுதி கட்ட பணிகள் அதாவது, வேலைவாய்ப்பு பதிவுமூப்பு எண் (சீனியாரிட்டி நம்பர்) சரிபார்த்தல், இடஒதுக்கீடு, பள்ளிகள் ஒதுக்குதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த வார வாக்கில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பகுதி நேர சிறப்பு ஆசிரியர் பதவிக்கு தேர்வுசெய்யப்படுவோருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.


முழுநேர பதவி


பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி ஒருபுறம் நடந்து வரும் நிலையில், முழுநேர சிறப்பு ஆசிரியர்களை மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் நியமிப்பதற்கான பணிகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. முழுநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் (தோராயமாக ரூ.15 ஆயிரம்) வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


முழு நேர பணி அடிப்படையில் 1,029 உடற்கல்வி ஆசிரியர்களும், 309 ஓவிய ஆசிரியர்களும், 90 தையல் ஆசிரியர்களும், 39 இசை ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். முதல்கட்டமாக, மாவட்ட அளவிலான பதிவுமூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் தகுதி இருந்தும் பெயர் விடுபட்டவர்கள் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ள காலஅவகாசம் அளிக்கப்பட்டது.


ஓரிரு நாளில் பதிவுமூப்பு பட்டியல்


இதையடுத்து, மாவட்ட பதிவுமூப்பு பட்டியல் இறுதி செய்யப்பட்டு மாநில அளவிலான பதிவுமூப்பு பட்டியல் தயாரிப்பதற்காக சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தலைமை அலுவலகத்திற்கு இ-மெயில் மூலமாக அனுப்பப்பட்டது.


மாநில பதிவுமூப்பு பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், உத்தேச பதிவுமூப்பு பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஆசிரியர் வாரியத்திடம் ஒப்படைப்பு


மாநில தகவல் மையத்தின் அந்தந்த மாவட்ட இணையதளத்தில் பதிவுமூப்பு பட்டியலை பார்த்து தெரிந்து கொள்ளலாம். உத்தேச பதிவுமூப்பு பட்டியல் இறுதி செய்யப்பட்டு அதன் பிறகு அந்த பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.


இதைத்தொடர்ந்து, பதிவுதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் சிறப்பு ஆசிரியர் பணிக்கு தேர்வுசெய்யப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு கவுன்சிலிங் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ நேரடியாக பணி நியமன ஆணை வழங்கப்படும்.


No comments:

Post a Comment