Friday, April 27, 2012

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் எப்போது?

கடலூர், ஏப். 26: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் குறைந்த ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு, தொழிற்கல்வி பாடப்பிரிவில் பாடம் கற்பிக்கும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் சான்றிதழ்கள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் சரிபார்க்கப்பட்டும், இதுநாள் வரையில் பணி நிரந்தரம் ஆக்கப்படுவதற்கான எந்த அறிகுறியும் தென்படாததால் விரக்தியில் உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடம் நடைமுறையில் உள்ளது.தொழிற்கல்வி பாடம் கற்பிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள் சொற்ப ஊதியத்தில் பள்ளிகளில் முழு நேரம் பணியாற்றி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முழு கல்வித் தகுதியுடன் பணியாற்றிவரும் இந்த ஆசிரியர்களின் சான்றிதழ்கள் கடந்த ஆட்சியில் சரிபார்க்கப்பட்டது. இதனால் பணி நிரந்தரம் ஆக்கப்படுவோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.
1978-ம் ஆண்டு மேல்நிலை பாடப்பிரிவில் தொழிற்கல்வி பாடப் பிரிவு தொடங்கப்பட்டது, மாணவர்களுக்கு செய்முறை பயிற்சியுடன் அதுதொடர்பான பாடம் கற்பிக்கப்பட்டது. தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்கப்பட்ட பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு பாடம் போதிக்க ஆசிரியர் இல்லாத நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பாடம் போதிக்கப்பட்டது. அவ்வாறு நியமிக்கப்பட்ட தகுதிவாய்ந்த ஆசிரியர்களுக்கு பாடவேளைக்கு தகுந்தாற்போல் சம்பளம் வழங்கப்பட்டது.
அவ்வாறு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஒருவழியாக 1996-க்கு முன்னர் பணியாற்றிய 352 பேரை 2001-ல் நிரந்தரம் செய்தனர். அதன் பின்னர் பகுதிநேர ஆசிரியர்களாக 1996 முதல் 2000-ம் வரையில் பணியாற்றிய 213 பேரை 2006-ல் பணி நிரந்தரம் செய்தனர். 

இந்நிலையில் 31.3.2007-க்கு பின்னர் அரசுப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் யாரையும் பகுதி நேர ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யக்கூடாது என பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில் 2000-ம் ஆண்டு முதல் அரசுப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பணியாற்றும் ஆசிரியர்களின் சான்றிதழ்கள், பாடக்குறிப்பு நோட்டுகள், வருகைப் பதிவேடு, சம்பள பட்டுவாடா உள்ளிட்ட ஆவணங்கள் 2010 ஜூலை மாதம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சரிபார்க்கப்பட்டது. இதனால் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என மகிழ்ச்சியாக இருந்த பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர்களுக்கு இதுநாள் வரையில் எந்த தகவலும் இல்லாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பகுதி நேர ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியது: அரசுப் பள்ளிகளில் பணியாற்றினால் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் குறைந்த ஊதியத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றி வருகிறோம். 40 வயதை கடந்த நிலையில் வேறு வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் குறைந்த ஊதியத்துடன் வறுமையில் வாழ்ந்து வருகிறோம்.

தமிழக அரசு அண்மையில் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல் உள்ளிட்ட சில பதவிகளுக்கு சிறப்பாசிரியர்களை நியமித்து, அந்த பணிக்கான ஊதியத்தையும் அறிவித்துள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முழுநேரமும் தொழிற்கல்வி பாடப் பிரிவில் பாடம் போதித்து பணியாற்றும் எங்களின் நிலையை தமிழக முதல்வரும், பள்ளிக் கல்வித்துறையும் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்' என்றார்.

No comments:

Post a Comment