Wednesday, April 18, 2012

முப்பருவ தேர்வு முறை பாட திட்டம்

வரும் கல்வியாண்டு முதல் முப்பருவ தேர்வு முறை பாட திட்டம் நடைமுறைப்படுத்த உள்ள நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பாடம் நடத்துகின்ற 5 ஆயிரம் ஆசிரியர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மாணவ மாணவியரின் புத்தக சுமையை குறைக்கும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் அரசு முப்பருவ தேர்வு முறை பாட திட்டத்தை அறிவித்துள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும். அந்தவகையில் ஒரு முழு கல்வியாண்டு என்பது மூன்றாக பிரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்றார்போன்று தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் ஒரே புத்தகம் தயார் செய்யப்பட உள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையில் ஒரு புத்தகமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஒரு புத்தகமும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒரு புத்தகமும் என்ற அடிப்படையில் மாணவ மாணவியருக்கான புத்தகத்தின் அளவு குறைக்கப்படுகிறது. அந்தவகையில் ஒவ்வொரு காலாண்டு இடைவெளியிலும் ஒரு தேர்வு நடத்தப்படும்.

தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்பட பாட புத்தகங்கள் அச்சிடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. புதிய முப்பருவ தேர்வு முறை பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த 1 முதல் 8 வரை அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக பட்டியல் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் வாரியாக பட்டியல் தயார் செய்யப்படுகிறது. ஆசிரியர்களின் கல்வி தகுதி, பிறந்த தேதி, பணியில் சேர்ந்த ஆண்டு, பணிபுரியும் பள்ளி, நடத்தும் பாட பிரிவு உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.

இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அலுவலர் மூலம் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாடங்கள் நடத்துவதில் தலைசிறைந்த ஆசிரியர்களை தேர்வு செய்து சென்னையில் சிறப்பு பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு குமரி மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். மே மாதம் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
 இதற்காக 6, 7, 8ம் வகுப்புகளுக்கான தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்று (17ம் தேதி) நடத்தப்படுகிறது. நாகர்கோவில் எஸ்எல்பி அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி, தக்கலை அரசு மேல்நிலை பள்ளி, மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி கூட்டம் நடக்கிறது.

No comments:

Post a Comment