Monday, April 30, 2012

அதிமுக ஆட்சியில் சமச்சீர் என்றால் கசக்கிறது


சென்னை : சமச்சீர் கல்வி என்றாலே அதிமுக ஆட்சிக்கு எட்டிக்காய் போல கசக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் தனது கேள்வி பதிலில் கூறியிருப்பதாவது: இலங்கையில் மசூதி இடிப்புப் பிரச்னை குறித்து நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளனவே?
இலங்கை மாத்தளை மாவட்டத்தில், தம்புள்ளா என்ற இடத்தில் இருந்த மசூதி ஒன்றை சில நாட்களுக்கு முன்பு, 2000க்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் கடப்பாரை சம்மட்டிகள் கொண்டு இடித்துடைத்து நாசம் செய்திருக்கின்றனர் என்று ஒரு செய்தி தெரிவிக்கின்றது.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் தமிழர்களை விரட்டி அடித்து விட்டு சிங்களர்களை குடியேற்றுதல், இந்துக் கோயில் களையும், கிறித்துவ தேவாலயங்களையும் நாசப்படுத்துதல் என வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. அவற்றின்  தொடர்ச்சியாகவே தற்போது மசூதிகளின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது.   இலங்கையில் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சிகள் கடும் கண்டனத்திற்குரியவை.

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப் பட்டுள்ளாரே?
1988 முதல் 1990 வரை இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எஸ்.பதக், சர்வதேச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி இருக்கிறார்.  20 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி ஒருவருக்கு இத்தகைய அரிய வாய்ப்பு கிடைத்திருப்பது உண்மையிலேயே பெருமைப்படத்தக்கதாகும்.
இலவச வேட்டி, சேலை வழங்குவதில் இழுபறி நீடித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

2011 மே மாதம் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, இந்தத் திட்டத்துக்காக ஸீ633 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டது,  ஆனால் 2012 ஜனவரியில் பொங்கலுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய வேட்டி,சேலைகள், மின்தடை, நூல் வழங்குவதில் தாமதம் போன்ற காரணங்களால் 40 முதல் 50 சதவிகிதப் பணியே நடந்து முடிந்திருக்கிறது என்றும்; இதே நிலை தொடர்ந்தால் ஜூன் மாதத்தில் கூட மக்களுக்கு இலவச வேட்டி,சேலையைக் கொண்டு சேர்க்க இயலாது என்றும் அதிமுக ஆதரவு நாளேடு ஒன்று, இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்கள் தேர்வில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வகுத்துள்ள வழிமுறைகளுக்கு மாறாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டதைப் பற்றி உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு ஒன்றை வெளியிட்டுள் ளதே? தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 23,8,2010க்கு முன்பு ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைமுறைகளை தொடங்கியது.  அதன் அடிப்படையில் 23,8,2010க்கு பின்பு பணியில் சேர்ந்தவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று கூறியுள்ளது.

ஆனால் 23,8,2010க்கு பின்பு பணியில் சேர்ந்த பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இதை  எதிர்த்து உயர்நீதிமன்றத்தை 25 ஆசிரியர்கள் அணுகினர்.  உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அளித்த தீர்ப்பில், 25 ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுத அரசு நிர்ணையித்துள்ள தேதியான 23,8,2010க்கு முன்பு வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சி அமைந்து ஓராண்டு முடிவதற்குள்ளாகவே பள்ளிக் கல்வித் துறைக்கு மூன்றாவது அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார்.  முதலில் இருந்த அமைச்சர் சி.வி. சண்முகம், இந்த ஆண்டு 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.  அதற்குப்பின் வந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி அதிமுக அரசு 55 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்துள்ளது என்றார்.  மூன்றாவதாக வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் 26,686 பேர் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படவுள்ளதாக அறிவித்தார்.  இந்த நிலையில் 18,4,2012 அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த போது அமைச்சர் என்.ஆர். சிவபதி 14,349 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பைச் செய்துள்ளார்.

ஆக, பள்ளிக் கல்வித்துறையின் மூன்று அமைச்சர்கள் செய்த அறிவிப்புகளின் மூலம் 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் என்பது 26 ஆயிரமாகச் சுருங்கி பிறகு 14 ஆயிரமாகத் தேய்ந்து போயிருக்கிறது. பஞ்ச பாண்டவர்கள் எத்தனை பேர் என்ற கேள்விக்கு; நான்கு பேர் என்று வாயால் சொல்லி, மூன்று விரல்களை கையில் காட்டி, இரண்டு என்று எழுதியதைப் போல இருக்கிறது; அதிமுக அமைச்சர்களின் அறிவிப்புகள்.

சமச்சீர் கல்வியில் தொடங்கிய சோதனை, சமச்சீர் பாடப் புத்தகங்களுக்கும் பரவி, தற்போது ஆசிரியர் நியமனத்திலும் நிலவுகிறது.  கல்வி முறை, பாடத் திட்டம், ஆசிரியர்கள் நியமனம் ஆகியவற்றில் முறையான சிந்தனையைச் செலுத்தாமல்; அதிமுக அரசு பள்ளிக் கல்வியைப் பாழடித்து வருவது கண்டும், பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவது கண்டும், மனம் பதைபதைக்கிறது.  ''சமச்சீர்'' என்றாலே, எட்டிக்காயாய்க் கசக்கிறதே அதிமுக ஆட்சியாளர்களுக்கு. 
இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கல்வி முறை, பாடத் திட்டம், ஆசிரியர்கள் நியமனம் ஆகியவற்றில் முறையான சிந்தனையைச் செலுத்தாமல்; அதிமுக அரசு பள்ளிக் கல்வியைப் பாழடித்து வருவது கண்டும், பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவது கண்டும், மனம் பதைபதைக்கிறது.  ''சமச்சீர்'' என்றாலே, எட்டிக்காயாய்க் கசக்கிறதே அதிமுக ஆட்சியாளர்களுக்கு.

No comments:

Post a Comment