Monday, April 16, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு நேரம் அதிகரிக்கப்படுமா?


பேராவூரணி: தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வு எழுதும் கால நேரத்தை அதிகரிக்க வேண்டுமென ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி தமிழக அரசு கல்வி விதிகளை வரையறை செய்துள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதற்காக, தேசிய அளவில் தகுதித் தேர்வு என்இடி நடத்தப்படுவதை போல், தமிழக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு டிஇடி அறிவிக்கப்பட்டுள்ளது.
 23.8.2010-க்குப் பிறகு, பதிவு மூப்பு அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களும் இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வுக்கான விண்ணப்பம் தமிழகம் முழுவதும் உள்ள 66 கல்வி மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்டு, சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுத உள்ளனர்.
 வருகிற ஜூன் 3-ஆம் தேதி காலை 10 முதல் 11.30 வரை ஆசிரியர் பட்டயம் பெற்றவர்களுக்கும், பிற்பகல் 2 முதல் 3.30 மணி வரை பி.எட் பட்டம் பெற்றவர்களுக்கும் தேர்வு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
 இந்தத் தேர்வுக்கான மொத்த வினாக்கள் 150. ஒரு வினாவுக்கு ஒரு மதிப்பெண் என 150 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான நேரம் 90 நிமிஷங்கள் எனக் கூறப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 150 வினாக்களில் கணிதம் சம்பந்தமாக 30 வினாக்கள் கேட்கப்படுவதால், அதற்கு கூடுதலான நேரம் செலவாகும். அதாவது, அந்த வினாக்களை படிப்பதற்கே குறைந்தது ஒரு நிமிஷம் தரப்படும் எனக் கூறப்படுகிறது. எனவே, 90 நிமிஷங்களில் தேர்வெழுதி வெற்றி பெறுவது சிரமமாக இருக்கும் என்பதால், தேர்வெழுதும் கால நேரத்தை 90 நிமிஷங்களிலிருந்து 150 நிமிஷங்களாக உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து பி.எட் பட்டம் பெற்ற ஒருவர் கூறியது: 

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான 150 வினாக்களையும் ஒருமுறை வாசித்து புரிந்து கொள்ள 20-லிருந்து 25 நிமிஷங்கள் வரை ஆகும். தேர்வு எழுதுவோர் முழுமையாகத் தேர்வை எழுத 150 நிமிஷங்கள் ஒதுக்கினால் மட்டுமே எழுத முடியும். 90 நிமிஷங்களில் தெரிந்த வினாக்களுக்குக்கூட பதிலளிக்க முடியாமல் போய்விடும். தேர்வு எழுதுபவர்கள் பெரும்பான்மையோர் கிராமப்புற மாணவர்களாக இருப்பதால், தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வாணையம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேர்வு எழுதும் கால நேரத்தை 90 நிமிஷங்களிலிருந்து 150 நிமிஷங்களாக அதிகரித்தால் மட்டுமே தேர்வு எழுதும் லட்சக்கணக்கான கிராமப்புற விண்ணப்பதாரர்களுக்கு பயன் ஏற்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment