Saturday, September 1, 2012

டி.இ.டி இரண்டாம் தாளில் தேர்ச்சி சதவிதம் சரிந்தது ஏன்?

பட்டதாரி ஆசிரியருக்கான, டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வை, 3.83 லட்சம் தேர்வர் எழுதியபோதும், வெறும், 713 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இது, மோசமாக உள்ள உயர்கல்வியின் தரத்தை வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது. இதுதொடர்பான ஆய்வறிக்கையை, ஓரிரு நாளில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உள்ளது.


இளங்கலை பட்டப்படிப்பில், முக்கியப் பாடமாக எடுத்தவர், அதே பாடத்தில், பி.எட்., படிப்பையும் முடித்தால், பட்டதாரி ஆசிரியராக தகுதி பெறுவர். இளங்கலை மற்றும் பி.எட்., படிப்புகள் தரமானதாக இருந்தால், டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வில், இந்த அளவிற்கு தேர்ச்சி குறைந்திருக்காது என்பது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாதம்.இளங்கலை பட்டப்படிப்பின் தரம், ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும், பி.எட்., படிப்பின் தரம், மிக மோசமாக இருப்பதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.ஒவ்வொரு பி.எட்., கல்லூரியிலும், மாணவர் சேர்க்கை, இரு விதமாக நடத்தப்படுகிறது. முறையாக, கல்லூரிக்கு வரும் மாணவருக்கு ஒரு கட்டணமும், தேர்வின்போது மட்டும் கல்லூரிக்கு வரும் மாணவருக்கு தனி கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

 பி.எட்., கல்லூரிகளுக்குச் சென்று, திடீர் ஆய்வு மேற்கொண்டால், இந்த முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும்.சமீபத்தில், உயர்கல்வித்துறை செயலர் ஸ்ரீதர், ""மாநிலம் முழுவதும் உள்ள, பி.எட்., கல்லூரிகளில், ஆய்வு செய்யப்படும்,'' என்றார். ஆனால், இதுவரை எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை
கல்வித்துறை வட்டாரங்கள் இதுகுறித்து கூறும்போது, ""ஒவ்வொரு ஆண்டும், பி.எட்., தேர்வில், 90 சதவீதத்திற்கும் அதிகான மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். இந்த அளவிற்கு தேர்ச்சி பெறுபவர், பத்தாம் வகுப்பு பாடத்திட்ட நிலையில் நடத்தப்படும் போட்டித் தேர்வில், சோடை போவது ஏன்என்பதை, உயர்கல்வித்துறை கவனிக்க வேண்டும்,'' என்றனர்.
இரண்டாம் தாள் தேர்வில், தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்தது தொடர்பாக, பல்வேறு கோணங்களில், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆய்வு செய்து வருகிறது. இதுதொடர்பான புள்ளி விவரம், ஓரிரு நாளில் வெளியாகும்போது, அது, உயர்கல்வித்துறையை உலுக்கி எடுத்துவிடும்.
டி.இ.டி., தேர்வை, பி.எட்., படித்துக் கொண்டிருப்பவர்களும் எழுதலாம் என, அறிவிக்கப்பட்டதால், பி.எட்., மாணவர் பலர், இரண்டாம் தாள் தேர்வை எழுதினர். பி.எட்.,டில் தேர்ச்சி பெற்ற பெரும்பாலானோர், டி.இ.டி., தேர்வில் தோல்வியைத் தழுவினர்.ஆனால், பி.எட்.,டில் தோல்வியுற்று, டி.இ.டி., தேர்வில், சிலர் தேர்ச்சி பெற்றுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

பி.எட்., தேர்வில் தோல்வியுற்ற மாணவர், உயர்ந்த தரத்தில் நடத்தப்பட்ட டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இதுபோன்ற தேர்வர் குறித்த புள்ளி விவரம், சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகே தெரியும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 பி.எட்.,டில் தோல்வியுற்று, டி.இ.டி., தேர்வில் ஒருவர் தேர்ச்சி பெற்றிருந்தாலும், ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என,கூறப்படுகிறது.

No comments:

Post a Comment