Friday, September 14, 2012

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை "ஆன்-லைன்' வழி நடத்த திட்டம்

""டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் அனைத்தையும், "ஆன்-லைன்' மூலம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக, விரைவில், "டெண்டர்' வெளியிடப்பட உள்ளது,'' என, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறினார்.
இதுகுறித்து, நடராஜ் கூறியதாவது:

ராஜஸ்தானில், அனைத்துப் போட்டித் தேர்வுகளும், "ஆன்-லைன்' மூலம் தான் நடத்தப் படுகின்றன. சில மாநிலங்களில், "ஆன்-லைன்' தேர்வு முறையும், கேள்வித்தாள் முறையும் உள்ளன. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூட, சில வகை தேர்வுகளை மட்டுமே, "ஆன்-லைன்' மூலம் நடத்துகிறது. பெரும்பாலான தேர்வுகளை, கேள்வித்தாள் முறையில் தான் நடத்துகிறது. இந்த முறையில் தேர்வு நடத்துவதற்கு, அடிப்படையில் பல ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதைச் செய்து, அனைத்து தேர்வுகளையும், "ஆன்-லைன்' மூலம் நடத்தும் திட்டம் உள்ளது. இதற்காக, விரைவில், "டெண்டர்' விடப் போகிறோம். தகுதி வாய்ந்த நிறுவனத்தை தேர்வு செய்து, அந்நிறுவனம் மூலம், "ஆன்-லைன்' தேர்வு நடத்தப்படும். தமிழகத்தில், அதிகளவில் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அங்குள்ள கணினிகளை பயன்படுத்தி, தேர்வு நடத்தலாம். விடுமுறை நாளில் தான், தேர்வுகள் நடத்தப்படும் என்பதால், பொறியியல் கல்லூரிகளின் கணினிகளை பயன்படுத்துவதில் பிரச்னை இருக்காது. இதன்மூலம், கல்லூரி நிர்வாகங்களுக்கு, தனி வருவாயும் கிடைக்கும். தேர்வு நடக்கும் நாளில், குறிப்பிட்ட தேர்வு மையங்களுக்கு தேர்வர் சென்று, கணினி முன் அமர்ந்தால், சரியான நேரத்தில், விடைத்தாள் வெளிப்படும். கணினியிலேயே விடைகளை, "டிக்' செய்தால் போதும். தேர்வு முடிந்ததும், மிக விரைவாக மதிப்பீடு செய்யும் பணி நடக்கும். இதற்கான அனைத்து மென்பொருளும், முன்கூட்டியே செய்யப்படும். "ஆன்-லைன்' மூலம் தேர்வை எதிர்கொள்வதில், யாருக்கும் பிரச்னை இருக்காது. எனவே, இத்திட்டத்தை நிறைவேற்றுவதில், முனைப்பாக ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு நடராஜ் கூறினார்.
புதிய முறையில் குரூப் - 2 கேள்வித்தாள்:

ஆக., 12ம் தேதி நடந்த, குரூப்-2 தேர்வின் கேள்வித்தாள், முன்கூட்டியே வெளியானதால், தேர்வு ரத்து செய்யப்பட்டு, நவ., 4ம் தேதி, மறுதேர்வு நடக்க உள்ளது. இந்த நிலையில், குரூப்-2 தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை, எப்படி பாதுகாப்பது என்பது குறித்து, தேர்வாணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதன் சோதனை முயற்சியாக, சமீபத்தில் நடந்த நூலகர் பணிக்கான தேர்வில், புதிய திட்டத்தை, தேர்வாணையம் அமல்படுத்தியது. தேர்வு துவங்குவதற்கு சில மணி நேரம் முன், "ஆன்-லைனில்' கேள்வித்தாளை வெளியிட்டு, தேர்வு மையங்களில் உள்ள கணினியில், ரகசிய குறியீட்டு எண்களை பதிவு செய்து, கேள்வித்தாள்கள் "பிரின்ட்' எடுத்து வழங்கப்பட்டன. இதே முறையை, குரூப்-2 தேர்வுக்கும் பயன்படுத்துவது குறித்து, தேர்வாணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து, தேர்வாணையம் விரைவில் முடிவு எடுக்கும்.

No comments:

Post a Comment